• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

கொரோனா அதிகரிப்பு:தமிழகம் முழுவதும் கோவில்கள் மூடல்- படித்துறைகளில் கூடவும் தடை- பக்தர்கள் ஏமாற்றம்

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்து வருவதால் தமிழகத்தில் பல கோவில்களில் 3 நாட்களுக்கு சாமி தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு நேற்று இரவுக்கு மேல் வெளியிடப்பட்டதால் இன்று காலை தரிசனத்துக்கு வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதேபோல் ஆறுகளின் படித்துறைகளில் ஆடிப்பெருக்கு நாளில் ஒன்று கூடவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    மீண்டும் அதிகரிக்கும் Corona பாதிப்பு.. Chennai Corporation எடுத்த அதிரடி நடவடிக்கை

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்திருக்கிறது. ஆனால் கடந்த சில நாட்களாக சில பகுதிகளில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில் தமிழகத்தில் புதிய தளர்வுகள் ஏதும் இல்லாமல் லாக்டவுன் மேலும் 1 வார காலத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் மக்கள் அதிகமாக கூடுகிற இடங்களை மாவட்ட ஆட்சியர்கள் மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னையில் 9 இடங்களில் வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள முருகன் ஆலயங்களில் ஆடி கிருத்திகை விழா மற்றும் அம்மன் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை கொண்டாட்டம் என பொது மக்கள் அதிகம் கூடுவதால் கொரோனா எளிதில் பரவக் கூடும் என்பதை அடிப்படையாகக் கொண்டு முக்கிய கோயில்களில் 3 நாளுக்கு தரிசனம் ரத்து எனவும் தமிழக அரசு அறிவித்தது. இதனையடுத்து தமிழகத்தில் பெரும்பாலான பிரசித்தி பெற்ற கோவில்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.

    காஞ்சி, தஞ்சை

    காஞ்சி, தஞ்சை

    காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள வல்லக்கோட்டை, குமரக்கோட்டம், இளையனார், வேலூர் உள்ளிட்ட முருகன் கோயில்களில் மூன்று நாட்களுக்கு சாமி தரிசனம் மேற்கொள்ள தடை விதித்து மாவட்ட ஆட்சியர் எம்.ஆர்த்தி உத்தரவிட்டார். காஞ்சிபுரத்தில் முக்கிய புகழ் பெற்ற திருத்தலங்களான காஞ்சி ஏகாம்பரநாதர், காஞ்சி காமாட்சி அம்மன், வரதராஜபெருமாள் திருக்கோயில் உள்ளிட்ட அதிகளவில் பக்தர்கள் கூடும் திருக்கோவில்களிலும் மூன்று நாளைக்கு தரிசனம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. தஞ்சையில் நேற்று மட்டும் 124 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தஞ்சை பெரிய கோவில், புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட பல கோவில்களை இன்று முதல் 3 நாட்களுக்கு மூட உத்தரவிட்டார். இதையடுத்து தஞ்சை பெரிய கோவில் மூடப்பட்டது. பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இன்று காலை ஏராளமான சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் பெரிய கோவிலுக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    காவிரி கரைகளில்..

    காவிரி கரைகளில்..

    இதைப்போல் ஆடிப்பெருக்கு விழா நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு சுற்றுலா பயணிகள் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. காவிரி, வெண்ணாறு உள்ளிட்ட ஆறுகளின் படித்துறைகளில் ஆடி 18-ந் தேதி பொதுமக்கள் கூடவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன், திருவக்கரை சந்திர மௌலீஸ்வரர், மயிலம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் திருக்கோயில், அவலூர்பேட்டை சித்தகீரிஸ்வரர் முருகன் திருக்கோயில், கீழ்புத்துப்பட்டு மஞ்சினீஸ்வரர் திருக்கோயில் உட்பட அனைத்து பிரதான திருக்கோயில்கள் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து திருக்கோயில்களிலும் ஆடிக்கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு இன்று முதல் நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை வரை சாமி தரிசனம் செய்வதற்கும் திருவிழாக்கள் நடத்துவதற்கும் அனுமதி கிடையாது என ஆட்சியர் மோகன் உத்தரவுவிட்டுள்ளார்.

    அக்னி தீர்த்தத்தில் கூட தடை

    அக்னி தீர்த்தத்தில் கூட தடை

    ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் வரும் 03-08-2021 அன்று ஆடி 18 ம் பெருக்கு என்பதால் அக்னி தீர்த்த கடற்கரையில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதாலும், அனைத்து கோவில்களிலும் , இன்று முதல் அதாவது (01-08- 2021 முதல் 09-082021 ) 3 நாட்கள் வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை. மேலும் மாவட்டத்திலுள்ள அனைத்து கோவில்களிலும் திருவிழாக்கள் மற்றும் குடமுழுக்கு நிகழ்ச்சிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் ஜெ யூ சந்திரகலா அறிவித்துள்ளார்.

    மதுரை, திருச்சி

    மதுரை, திருச்சி

    மதுரையிலும் மீனாட்சி அம்மன் கோவில், கள்ளழகர் திருக்கோவில், பழமுதிர்ச்சோலை முருகன் ஆலயம் ஆகியவை வரும் 8-ந் தேதி வரை மூடப்படும் என மதுரை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. திருச்சி மாவட்டத்தில் ஶ்ரீரங்கம் கோவில், வயலூர் முருகன் கோவில், திருவானை கோவில் , மலைக்கோட்டை வளாக கோவில்கள் மற்றும் உறையூர் வெக்காளியம்மன் கோவில்களில் நாளை, நாளை மறுநாள் நடைபெற இருக்கும் ஆடிக்கிருத்திகை மற்றும் ஆடிப்பெருக்கு நிகழ்வுகளில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. மேலும் கொரோனா பரவலின் காரணமாக ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் உள்ளிட்ட காவிரி ஆற்றங்கரையில் மக்கள் கூடி வழிபாடு செய்வதற்கும் அனுமதி இல்லை என திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு அறிவித்துள்ளார்.

    கோவை, திருவேற்காடு

    கோவை, திருவேற்காடு

    கோவையில் வரும் 2-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை மருதமலை, மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில், ஆனைமலை மாசாணியம்மன் கோவில், பேரூர் பட்டீஸ்வரர் கோவில் ஆகியவற்றில் பொதுமக்கள் வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். திருவேற்காடு, பெரியபாளையம் அம்மன் கோவில்களில் இன்று முதல் ஆகஸ்ட் 3-ந் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் ஆகஸ்ட் 3-ந் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    திருச்செந்தூர் முருகன் கோவில்

    திருச்செந்தூர் முருகன் கோவில்

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடி கிருத்திகை, ஆடி 18-ம் நாட்களை முன்னிட்டு இன்று முதல் 3-ந் தேதி வரையும், ஆடி அமாவாசையான வருகிற 8-ந் தேதி ஆகிய விஷேச நாட்களில் அதிக பக்தர்கள் கூடுவார்கள். இந்த 4 நாட்களில் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை. இந்த நாட்களில் கோவிலில் ஆகமவிதிகளின் படி அனைத்து நிகழ்ச்சிகளும், கோவில் பணியாளர்கள் மூலம் நடைபெறும் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.

    திருவண்ணாமலை, நெல்லை

    திருவண்ணாமலை, நெல்லை

    திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்கள், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், படவேடு ரேணுகாம்பாள் கோவில் உட்பட பிரதான கோவில்கள் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் ஆடி கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு இன்று முதல் 3-ந் தேதி வரை சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி இல்லை. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நெல்லையப்பர் கோவில், காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில், பாபநாசம் பாபநாசநாதர் சுவாமி கோவில் ஆகியவற்றில் இன்று முதல் வருகிற 9-ந் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தாமிரபரணி ஆற்றங்கரை மற்றும் படித்துறைகளில் ஆடி அமாவாசையில் முன்னோர்களுக்கு திதி கொடுப்பது உள்ளிட்ட பிற சடங்குகளுக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தெரிவித்து உள்ளார்.

    திருச்செந்தூரில் பக்தர்கள் மறியல்

    திருச்செந்தூரில் பக்தர்கள் மறியல்

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் நேற்று இரவு தெரிவித்து. தாமதமான இந்த அறிவிப்பால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த பக்தர்கள் கூட்டம் இன்று அலை மோதியது. மேலும் தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் ரவுண்டானா சாலை முன்பு உள்ள நுழைவாயில் முன்பு காவல்துறையினர் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பட்டனர். இதனால் ஏமாற்றமடைந்த பக்தர்கள் ரவுண்டானா சாலை முன்பு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் திருச்செந்தூர் ஏஎஸ்பி ஹர்ஷ்சிங் பேச்சுவார்த்தை நடத்தினர். இப்பேச்சுவார்த்தையில் பக்தர்கள் தங்களை கோவில் நுழைவாயில் முன்பு வரை அனுமதி வழங்கினால் கோபுர தரிசனம் செய்து விட்டு செல்வதாக கோரிக்கை விடுத்தனர். ஆனால் போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து பக்தர்கள் கலைந்து சென்றனர்.

    English summary
    Tamilnadu Govt has announced that devotees not allow into Murugan and Amman temples in Tamil Nadu.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X