சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களிடமே நிதி உதவி கேட்பதா? மத்திய அரசுக்கு சீமான் கண்டனம்

Google Oneindia Tamil News

சென்னை: ஊரடங்கால் பாதிக்கப்பட்டிருக்கும் பொதுமக்களிடத்திலேயே மத்திய அரசு நிதி உதவியை கோருவது கடும் கண்டனத்துக்குரியது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

Recommended Video

    மக்கள் உயிர் தான் முக்கியம்... களத்தில் நிற்கும் தூய்மை பணியாளர்கள்

    இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை:

    கொரோனோ நோய்த்தொற்று பரவலையொட்டி நாடு முழுமைக்கும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை அறிவித்துவிட்டு, அந்நாட்களில் அடித்தட்டு உழைக்கும் மக்களின் உணவுக்கும், வாழ்வாதாரத்திற்கும் எவ்வித உறுதிப்பாட்டையோ, திட்டத்தையோ அறிவிக்காத பிரதமர் மோடி, தற்போது எவ்விதக் குற்றவுணர்வுமின்றி நாட்டு மக்களிடம் நிதிகேட்டு நிற்பது அறத்திற்குப் புறம்பான‌ அநீதிச்செயலாகும். ஏற்கனவே தவறானப் பொருளாதார முடிவுகளாலும், பிழையான பொருளாதாரக் கொள்கைகளாலும் நாட்டின் பொருளாதாரம் படுவீழ்ச்சியை சந்தித்து விலைவாசி உயர்வும், பணவீக்கமும் நாளுக்கு நாள் அதிகரித்தும் வருகிறது. இத்தோடு, எதிர்காலத்தை கணிக்கவே முடியாத கொரோனா எனும் நோய்த்தொற்று பரவலிலிருக்கும் தற்காலத்தில் மத்திய அரசு மக்களிடம் நிதிகேட்டு நிற்பது மாபெரும் பாதகச்செயலாகும்.

    ஏற்கனவே, மக்களிடமிருந்து அபரிமிதமான வரியைப் பெற்றுக்கொண்டு அவர்களுக்குரிய அடிப்படைத் தேவைகளையே நிறைவேற்றித்தராது அதனைத் தனியார்மயமாக்கிய ஆளும் வர்க்கம் தற்போது மேலும் அவர்களை சுரண்ட எண்ணுவது மிகப்பெரும் முறைகேடாகும். அன்றாடம் வேலைக்குச் சென்றால்தான் குடும்பத்தை நகர்த்த முடியும் எனும் விளிம்பு நிலை பொருளாதாரச் சூழலில் இருக்கிற 45 கோடிக்கும் மேற்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்களை கொண்டிருக்கிற இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை நடைமுறைப்படுத்தும்போது கையாள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தோ, முன்னறிவிப்புகள் குறித்தோ, அடித்தட்டு உழைக்கும் மக்களின் உணவு, வாழ்விட உறுதிப்பாடுகள் குறித்தோ எவ்வித முன்னேற்பாட்டையும் செய்யாது, அவர்களுக்கான பேரிடர் கால நிதியுதவிகள் குறித்து ஏதும் அறிவித்திடாது வெறுமனே ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ள பிரதமர் மோடி, தற்போது நாட்டு மக்களிடம் நிதிகேட்டு பொறுப்பை அவர்கள் தலை மீது மொத்தமாய் சுமத்த முயல்வது மக்களுக்குச் செய்யப்படும் மாபெரும் துரோகமாகும்.

    கொரோனா எதிரொலி.. காய்கறி அங்காடியாக மாறிய புதுச்சேரி பஸ் நிலையம்! கொரோனா எதிரொலி.. காய்கறி அங்காடியாக மாறிய புதுச்சேரி பஸ் நிலையம்!

    நிர்மலா சீதாராமனுக்கு எதிர்ப்பு

    நிர்மலா சீதாராமனுக்கு எதிர்ப்பு

    இப்பேரிடர் காலத்தையொட்டி, 80 கோடி மக்களுக்கு அரிசி, பருப்பு போன்றவற்றை தருவதாக வாக்குறுதி அளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அதனை செயல்படுத்த எவ்வித முன்முயற்சியையும் எடுக்காது அறிவித்ததோடு தனது கடமை முடிந்து விட்டதெனக் கடந்துவிட்டார். இவ்வாறு 80 கோடி மக்களே அரசிடம் உதவியை எதிர்பார்த்து நிற்கையில் அவர்களிடமே போய் நிதிகேட்டு நிற்பது என்ன மாதிரியான நிர்வாகச் செயல்பாடு? என்பது புரியவில்லை. தனது ஆளுகைக்குக் கீழ் இருக்கும் டெல்லியில் பல்லாயிரக்கணக்கான மக்களை வீதியில் நடக்க வைத்ததோடு மட்டுமல்லாது சமூக விலகலையும் முறித்த மத்திய அரசு, வெறுமனே வெற்று அறிவிப்புகள் மூலமாகவே மக்களின் பசியைப் போக்கி அவர்களது துயரத்தைத் துடைத்துவிட முடியும் என நம்புவது வேடிக்கையாக உள்ளது.

    செலவுகளை மாநில அரசிடம் கேட்பதா?

    செலவுகளை மாநில அரசிடம் கேட்பதா?

    தனிப்பெரும் முதலாளிகளுக்கு கடன், வரிச்சலுகைகள் என 7.78 இலட்சம் கோடியை கடந்த 6 ஆண்டுகளில் ஒதுக்கியதோடு மட்டுமல்லாது, அனைத்துப் பொருளாதார நிபுணர்களின் எச்சரிக்கையையும் மீறி இந்திய ரிசர்வ் வங்கியில் வைக்கப்பட்டிருந்த இருப்புத்தொகையான 1.76 கோடி நிதியையெடுத்து அவற்றில் 1.52 இலட்சம் கோடியை தனிப்பெரும் முதலாளிகள்வசம் வாரியிறைத்து காலிசெய்துவிட்டு இப்போது பேரிடர் காலத்தில் மக்களிடமே கையேந்தி நிற்பது மிக‌ மோசமான நிர்வாகச் சீர்கேடாகும். கடந்த 6 ஆண்டுகளில் பெட்ரோல் மீதான சுங்கத்தை 250 விழுக்காடும், டீசல் மீதான சுங்கத்தை 428 விழுக்காடும் உயர்த்தியும்விட்டு இதுபோன்ற பேரிடர் கால‌ச் செலவுகளை மட்டும் மத்திய அரசு மாநிலங்களின் தலையில் கட்டுவது என்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

    நிதிக்காக மாநிலங்கள் தலையில் கை வைப்பதா?

    நிதிக்காக மாநிலங்கள் தலையில் கை வைப்பதா?

    பேரிடர் காலத்திற்கென ஒதுக்காமல் 3,000 கோடிகளைக் கொண்டு சிலையெழுப்பி வெற்றுச்செலவு செய்து பெருமைப்பட்டு புளங்காகிதமடைந்த மத்திய அரசு, இப்போது மாநிலங்கள் தலையில் நிதிக்காகக் கைவைப்பது எந்த விதத்திலும் ஏற்புடைய செயலல்ல. வணிகப் பெருநிறுவனங்களுக்கு 2014-15ல் 65, 607 கோடியில் தொடங்கி, 2018 -19ல் ரூ 1,08,785 கோடிவரைத் தள்ளுபடி செய்துவிட்டு 2020-21க்கு வெறும் ரூ 4,82 கோடிகளை மட்டும் மத்தியப் பேரிடர் மேலாண்மை நிதிக்கு ஒதுக்கியுள்ளது மடமைத்தனமானது. தற்போது மத்தியப் பேரிடர் மேலாண்மை நிதிக்கணக்கில் வெறும் ரூ 3,800 கோடிகளை வைத்து கொண்டு மீதசெலவை மாநிலங்களிடம் தள்ளிவிடுவது நியாயமற்றது.

    நிர்மலா சீதாராமன் அறிவிப்பு கண்துடைப்பு

    நிர்மலா சீதாராமன் அறிவிப்பு கண்துடைப்பு

    மத்திய நிதி அமைச்சர் அறிவித்த ரூ 1.75 லட்சம் கோடி நிவாரண தொகையானது ஒரு கண்துடைப்பேயாகும். அதில் பல முரண்பாடுகள் உள்ளது, குறிப்பாக விவசாயிகளுக்கு பிரதம கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்படுவதாக சொல்லியிருக்கும் ரூ 2,000 என்பது ஏற்கனவே அறிவித்து மத்திய பட்ஜெட்டில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்ட ரூ 6000 முன் பணமேயன்றி தனிப்பணம் அல்ல. இதன் கணக்காக 87 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்பதும், அரசுக்கு 17.4 கோடிகள் கூடுதல் செலவு என்பதும் ஏற்று கொள்ள முடியாத கணக்கு - யாரை ஏமாற்ற இந்த நாடகம்?

    ரூ. 500 போதுமானதா?

    ரூ. 500 போதுமானதா?

    ஜன்தன் வங்கிக்கணக்கு வைத்திருப்போருக்கு அடுத்த மூன்று மாதத்திற்கு ரூ 5,00 வீதம் வைத்து கொண்டு ஏழை நடுத்தர மக்களால் குறைந்தது ஒரு வேளை உணவு வாங்க முடியுமா? உலக நாடுகளில் அதிகபட்சமாக 60 விழுக்காட்டுக்கும் மேலாக மறைமுக வரி விதித்து அடித்தட்டு மக்களின் உழைப்பையும், இரத்தத்தையும், வியர்வையையும் உறிஞ்சி, அவற்றைப் பெருமுதலாளிகளின் நலனுக்காகத் தாரை வார்க்கிற மத்தியில் ஆளும் மோடி அரசு, இப்போதும் உழைக்கும் மக்களையே அண்டி அவர்களிடமே நிதிகேட்பது மிகப்பெரும் வர்க்கச் சுரண்டலாகும். 60 விழுக்காடு இந்திய நாட்டின் வளங்கள் ஒரு விழுக்காடு தனிப்பெரு முதலாளிகளின் வசமிருக்க அதனை மீட்டு, சரிவிகிதத்தில் பகிர்வுசெய்து பொருளாதார சமத்துவத்தை ஏற்படுத்த எவ்வித முன்முயற்சியையும் எடுக்காத மத்திய அரசு தற்போது மக்களின் மீது மீண்டும் பாரத்தை ஏற்றுவது மிகப்பெரும் அடக்குமுறையாகும்.

    மத்திய அரசுக்கு கண்டனம்

    மத்திய அரசுக்கு கண்டனம்

    மேலும், மாநிலங்களின் அதிகாரத்தைக் குறைத்து தன்னுரிமையைப் பறித்து தன்னாட்சியை முற்றிலுமாகக் குலைத்து அதிகாரக்குவிப்பில் ஈடுபட்டு எதேச்சதிகாரப்போக்கோடு செயல்பட்டு வரும் மத்திய அரசு, கொரோனோ நோய்த்தொற்றை தடுக்கும் விவகாரத்தில் மாநிலங்களின் கைகளில் பொறுப்பைத் தள்ளிவிட்டு தனது கடமையை கைகழுவி வருவதும், மாநிலங்களுக்குரிய நிதியினைத் தர மறுப்பதும், தொடக்கம் முதலே மெத்தனப்போக்கோடு செயல்பட்டு வருவதும் வன்மையானக் கண்டனத்திற்குரியது. ஆகவே, தனிப்பெரும் முதலாளிகளின் வாராக்கடன்களை வசூலித்தும், அவர்களுக்குரிய வரி உள்ளிட்ட அத்தனை சலுகைகளையும் பறித்தும் வருவாயை உருவாக்கி இப்பேரிடர் காலத்தை எதிர்கொள்ள வேண்டும் என மத்திய அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.

    English summary
    Naam Tamilar Party Chief Co ordinator Seeman has condemned for the Prime Minister's appeal for the Fund.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X