சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

விவசாயிகள், காவிரி உரிமை, பாஜக ஆதரவு.. ரஜினியின் தொடக்கமே தமிழருக்கு துரோகம்.. பட்டியலிடும் அருணன்

Google Oneindia Tamil News

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் தொடக்கமே தமிழருக்கு துரோகம் செய்வதாக இருக்கிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் அருணன் கடுமையாக சாடி பட்டியல் ஒன்றையே விரிவாக வெளியிட்டுள்ளார்.

தமது சமூக வலைதளப் பக்கத்தில் அருணன் எழுதியுள்ளதாவது:

"ரஜினிகாந்த்: எனது கடைசி நம்பிக்கை" என்று தமிழருவிமணியன் தினமணியில் (7-12-20) கட்டுரை தீட்டியிருக்கிறார். அதில் இவருக்கும் ரஜினிக்கும் இடையில் நடந்த உரையாடல் விபரங்களைத் தந்துள்ளார்.

தனது அரசியல் பிரவேசத்திற்கு இவரின் உதவியை அவர் கேட்க "திராவிடக் கட்சிகளில் எந்தவொன்றோடும் உடன்பாடு கொள்ளக் கூடாது" என்று நிபந்தனை விதித்தார். அதற்கு அவர் தந்த உறுதி: "நிச்சயம் அந்த தவற்றை நான் ஒருபோதும் செய்யமாட்டேன் . நீங்கள் என்னை நம்பலாம்".

பொது அம்சம் திராவிட எதிர்ப்பு

பொது அம்சம் திராவிட எதிர்ப்பு

திராவிட எதிர்ப்பு அரசியல் என்பதுதான் இந்த இருவருக்கும் உள்ள பொது அம்சம். இதில் மணியன் "காந்திய மக்கள் கட்சி" என்பதை நடத்தி வருபவர். காந்தி மத நல்லிணக்கத்திற்காக நின்றார். அதனாலேயே அவரைப் படுகொலை செய்தான் மாபாவி கோட்சே. அவனின் வழியில் பயணித்து மத நல்லிணக்கத்தை தமிழகத்திலும் கெடுத்து வருவது பாஜக. அந்த பாஜகவோடு உடன்பாடு கூடாது என்று இந்த மனிதர் நிபந்தனை விதிக்க வில்லை என்பதைக் கவனிக்கவும். "கழகங்கள் இல்லா தமிழகத்தை உருவாக்குவதே தங்களது லட்சியம்" என்று ஏற்கெனவே பேசிய கட்சிதான் பாஜக.

பாஜகவுடன் கோர்த்துவிடும் மணியன்

பாஜகவுடன் கோர்த்துவிடும் மணியன்

திராவிட அரசியலையும் அதன் தலைவர்களாம் பெரியார், அண்ணா, கலைஞரையும் படு மோசமாகத் தாக்கி வருபவர்தான் நேற்றுவரை அதன் தேசியச்செயலராக இருந்த எச். ராஜா. திமுக, அதிமுக இரண்டும் இல்லா ஆட்சி வேண்டும், அதற்கு ரஜினி உதவுவார் என இப்போது எழுதியிருப்பவர்தான் ஆர்எஸ்எஸ் சித்தாந்தி எஸ். குருமூர்த்தி. ஆக, திராவிட எதிர்ப்பு அரசியல் எனும் புள்ளியில் ரஜினி, மணியன், பாஜக இணைவது கண்கூடு. வேறு வார்த்தையில் கூறினால் திராவிட எதிர்ப்பு என்கிற பெயரில் ரஜினியை பாஜகவோடு கோர்த்துவிடும் வேலையை செவ்வனே செய்து கொண்டிருக்கிறார் மணியன் என்பது தெளிவாகிறது. இதன் நடைமுறை அம்சம்தான் நேற்றுவரை பாஜகவின் அறிவுசார் பிரிவின் தலைவராக இருந்தவரை ரஜினி கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஆக்கியிருப்பது. ஒருபும் அந்த கோட்சேவாதியும், மறுபுறம் இந்த காந்தியவாதியும் நிற்க ரஜினி பேட்டி கொடுத்தது கண்கொள்ளாக் காட்சி! இந்த லட்சணத்தில் காமராஜர் பற்றி வேறு இவரும் ரஜினியும் பேசிக்கொண்டதாகக் கூறுகிறார் மணியன்.

காமராஜரை கொல்ல முயன்ற சங்

காமராஜரை கொல்ல முயன்ற சங்

1966இல் டில்லியில் பசுவதை தடை கோரும் பேரணி என்ற பெயரில் சங் பரிவாரம் காமராஜர் வீட்டைக் கொளுத்த முயன்றதும், அவர் நூலிழையில் உயிர் தப்பியதும் வரலாற்று செய்தி. அந்த சங் பரிவாரத்தைச் சேர்ந்தவரை ஒருங்கிணைப்பாளராகக் கொண்ட கட்சி காமராஜர் ஆட்சியைக் கொண்டு வருமாம்! கேப்பையில் நெய் வடியும் என நீங்கள் சொல்லலாம், ஆனால் நம்புவதற்கு தமிழர்கள் ஏமாளிகள் அல்ல.

நதிநீர் இணைப்பு

நதிநீர் இணைப்பு

இவரது கட்டுரையின் உச்சம்: "உங்கள் கனவுத் திட்டம் ஏதாவது உண்டா?" என்று இவர் கேட்டதற்கு ரஜினி சொன்ன பதில். அது: "நாம் காலம் முழுவதும் காவிரியை மட்டுமே நம்பியிருக்க கூடாது. தண்ணீர்தான் விவசாயத்திற்கு ஆதாரம். விவசாயம்தான் நம் வாழ்விற்கு ஆதாரம். எனவே நம் மாநிலத்தில் உள்ள நீர்நிலைகளை ஒன்றாக இணைத்தால் மழைக் காலங்களில் வீணாகக் கடலில் கலக்கும் 130 டிஎம்சி தண்ணீரை சேமித்துவிட முடியும்". நமது வாழ்விற்கு ஆதாரம் விவசாயம்தான் என்பது சரி.

விவசாயிகள் போராட்டம்

விவசாயிகள் போராட்டம்

அந்த விவசாயிகள்தாம் இந்தக் கடுங்குளிரில் டில்லியில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். கவிஞர் வைரமுத்து எழுதியது போல "ரத்தம் உறைந்தாலும் சித்தம் உறையாமல்" களம் கண்டு கொண்டிருக்கிறார்கள். நமக்கு வாழ்வாதாரம் விவசாயம், அவர்களுக்கு வாழ்வாதாரம் நிலம், அதில் விளையும் தானியங்களுக்கான விலை. அதற்கே ஆபத்து. அவர்களின் அடிமடியில் கை வைத்து விட்டது மோடிஅரசு-அதானி, அம்பானிகளுக்காக. விவசாயிகளின்பால் ரஜினிக்கு உண்மையில் அக்கறை இருந்தால் இந்நேரம் அவர்களின் போராட்டத்தை ஆதரித்து பேசியிருக்க வேண்டாமா? ஏன் செய்யவில்லை?

காவிரி உரிமை கூடாதாம்

காவிரி உரிமை கூடாதாம்

அதுமட்டுமா, காவிரியில் நமக்குள்ள உரிமையைக் கைகழுவச் சொல்கிறார் ரஜினி. அதையே நம்பியிருக்கக் கூடாதாம்! ஏன் நம்பியிருக்கக் கூடாது? தமிழன் பிறந்ததும் வளர்ந்ததும் காவிரி நீர் குடித்து. அவன் கண்ட நாகரிகங்களில் ஒன்று காவிரிக்கரை நாகரிகம். இப்படி வரலாற்றுரீதியாக மட்டுமல்ல சர்வதேச சட்டப்படியாகவும் ஆற்றின் கடைப்பகுதியில் இருப்போருக்கு அதை அனுபவிக்கும் உரிமை உண்டு. இதை ஏன் நாம் கைவிட வேண்டும்?காவிரி உரிமையைக் கைகழுவச் சொல்வது தமிழர்களுக்குச் செய்யும் மாபெரும் துரோகம். கர்நாடகாவில் பாஜக நன்கு காலூன்றிவிட்டது. அவர்கள் காவிரியில் தமிழகத்தின் உரிமை யை ஒழித்துக்கட்டப் பார்க்கிறார்கள். அதனால்தான் காவிரிப் பேச்சைப் பேசாதீர்கள், மாநில நீர்நிலைகளை இணைப்போம் என்று விஷயத்தை தந்திரமாக திசைதிருப்புகிறார்கள். அதை அப்படியே வாந்தி எடுக்கிறார் ரஜினி, அதை வழித்தெடுத்து பந்தி வைக்கிறார் மணியன். இந்த அக்கிரமத்தை என்னென்பது?

துவக்கமே துரோக அரசியல்

துவக்கமே துரோக அரசியல்

ரஜினியின் அரசியல் துவக்கமே துரோகமாக இருக்கிறது. தமிழக மக்களே எச்சரிக்கை.. எச்சரிக்கை. மணியன் சொல்லுகிற ரஜினி எனும் மாற்று முன்னேற்றத்திற்கானது அல்ல, பின்னோக்கித் தள்ளுவது; தமிழகத்தை மதவெறியிலும், மநு அநீதியிலும், மாநில உரிமை பறிப்பிலும், பண்பாட்டுச் சிதைவிலும் தள்ளுவது. ரஜினியின் பேச்சும் செயலும் பாஜகவை எதிரொலிப்பதாக உள்ளது. எனவே இது மாற்றுஅல்ல, ஏமாற்று. இப்போதே விழித்துக் கொள்வோம். இவ்வாறு அருணன் எழுதியுள்ளார்.

English summary
CPM senior leader Arunan has warnd Actor Rajinikanth enter Politics with Anti-Tamils Policy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X