• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

நிவர் புயல்.. முன்னெச்சரிக்கைப் பணிகளை முடுக்கிவிடுவோம்- உதவிக்கரம் நீட்ட காத்திருக்கிறோம்! – சீமான்

|

சென்னை: நிவர் புயலில் இருந்து பாதுகாக்க முன்னெச்சரிக்கைப் பணிகளை முடுக்கிவிடுவோம் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை:

அதிகப்படியான மழைப்பொழிவினால் தமிழகத்தின் பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை முடங்கியிருக்கிறது. பல இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதோடு, சாலை முழுக்க வெள்ளக்காடாய் மாறியிருக்கிறது. மக்கள் வாழும் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் சேர்ந்து, அவை வீடுகளிலும் புகுந்திருக்கிறது. இவையாவும் ஓரிரு நாட்களில் கொட்டித்தீர்த்த மழையினால் விளைந்தவையே. இந்நிலையில் வேகமாக தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகின்ற நிவர் புயலானது காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையை கடப்பதால் கடலோர மாவட்டங்களுக்கு கடுமையான மழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளன.

நீர் மேலாண்மை, பேரிடர் மேலாண்மையில் அக்கறையும், தொலைநோக்குப்பார்வையுமற்ற ஆட்சியாளர்கள் இதுவரை தமிழகத்தின் தலைநகரிலேயே அடிப்படைக் கட்டமைப்புகளை உருவாக்காத நிலையில் வழமைபோல இப்பேரிடரையும் நாமே முன்னெச்சரிக்கையோடு எதிர்கொள்ள வேண்டிய இழிநிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். இயற்கை மீது பழிபோட்டுத் தப்பித்துக்கொள்ள முனையும் ஆட்சியாளர்களையே முழுமையாக நம்பியிராது நம்மை நாமே தற்காத்துக் கொள்ள நம்மால் இயன்றதை செய்வோம். இப்பேரிடரிருந்து மீண்டுவர ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

பாதுகாப்பு மையங்கள்

பாதுகாப்பு மையங்கள்

இப்பேரிடர் காலத்தில் நமக்காக நாம் செய்ய வேண்டிய குறைந்தபட்சப் பணிகள்: மழைநீர் உட்புகாத வீடுகளில் வசிப்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள். இல்லையெனில், புயல் பாதுகாப்பு மையங்களுக்கு முன்கூட்டியே செல்லுங்கள். பழைய கட்டிடங்களுக்குள்ளோ, அதன் அருகிலோ செல்வதை முழுமையாய்த் தவிருங்கள். மழைநீர் உட்புகக்கூடிய பகுதிகளில் வசிப்போர் கட்டிடத்தின் கீழ் தளத்தில் வசிப்பதை முடிந்தளவு தவிர்த்து விடுங்கள்.

காய்ச்சிய நீரை பருகவும்

காய்ச்சிய நீரை பருகவும்

தொற்றுநோய்கள பரவாமல் தடுக்க குடிநீரைக் காய்ச்சி வடிகட்டிப் பருகுங்கள். கபசுரக் குடிநீர், நிலவேம்புச்சாறு போன்றவற்றை இரண்டு நாட்களுக்கு ஒருமுறை பருகுங்கள். பால், ரொட்டி, பேரீட்சம் பழம் போன்ற உணவுப்பொருட்களைக் கூடுதலாக வாங்கிச் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். குளிர்பானங்களை அருந்துவதைத் தவிருங்கள். மெழுகுவர்த்தி, கொசுவர்த்தி, கைவிளக்கு, போர்வை போன்றவற்றை கூடுதலாக வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

மின்சார தேவை

மின்சார தேவை

மருத்துவரின் பரிந்துரையின்படி காய்ச்சல், தலைவலி போன்றவற்றிற்கான மருந்துப்பொருட்களையும், மாத்திரைகளையும் கையிருப்பு வைத்துக் கொள்ளுங்கள். புயல் கரையைக் கடந்து இயல்புநிலை திரும்பும்வரை வீட்டைவிட்டு மிக இன்றியமையாத் தேவைகளுக்காக அல்லாது வேறு எதற்காகவும் வெளியில் செல்வதைத் தவிருங்கள். குழந்தைகளை வீட்டைவிட்டு வெளியே அனுப்பாதீர்கள். அவசரத் தேவைக்கு பயன்படும் வகையில் அலைபேசியை பொழுதுப்போக்கிற்காகப் பயன்படுத்தாமல் மின்சக்தியை தேக்கிவைத்துக் கொள்ளுங்கள்.

மின்சாதன பயன்பாடு

மின்சாதன பயன்பாடு

மின்தேக்கி (POWER BANK) ஒன்றையும் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். இடி, மின்னல் ஏற்படும்போது தொலைக்காட்சி, அலைபேசி போன்றவற்றைப் பயன்படுத்துவதைத் தவிருங்கள். மின் புரட்டியை (INVERTOR) தொடவோ, இடமாற்றம் செய்யவோ முயற்சிக்காதீர்கள். ஈரம் படர்ந்த கையுடன் மின்சாரச் சாதனங்கள் பயன்படுத்துவதைத் தவிருங்கள். குழந்தைகளை மின்சாதனங்கள் அருகே செல்ல அனுமதிக்காதீர்கள். மின்மாற்றிகள், மின் கம்பிகள், மின் பகிர்வுப் பெட்டிகள், கம்பி வடங்கள் ஆகியவற்றின் அருகே மழைநேரங்களில் செல்வதைத் தவிர்த்து விடுங்கள்.

கவனமாக நடந்து செல்லுங்கள்

கவனமாக நடந்து செல்லுங்கள்

மின்சார கம்பிகள் ஆங்காங்கே அறுந்து விழுந்திருக்க / விழக்கூடும். ஆகவே, வீட்டைவிட்டு வெளியே செல்லும்போது தண்ணீர் தேங்கியுள்ள / ஈரமான பகுதிகளில் கவனமாய்ச் செல்லுங்கள். காலணி அணியாது வீட்டைவிட்டு வெளியே செல்லாதீர்கள். குடையையோ, மழைக்கவச ஆடையையோ எப்போதும் உடன் வைத்திருங்கள். சாலைகளில் நடந்து செல்லும்போது பாதாளச்சாக்கடை திறந்திருக்கிற வாய்ப்பிருப்பதால் மிகக்கவனமாகச் செல்லுங்கள். சுரங்கப்பாதைகளைத் தண்ணீர் தேங்கி நிற்கும்போது பயன்படுத்துவதைத் தவிருங்கள்.

ஆவணங்கள் பாதுகாப்பு

ஆவணங்கள் பாதுகாப்பு

கொசுக்கள் உட்புகாவண்ணம் தடுக்கச் சன்னல்களை இறுக மூடி வையுங்கள். உடலை முழுமையாக மறைக்கிற பருத்தி ஆடைகளை அணியுங்கள். உடைகளையும், போர்வைகளையும் ஈரம்படாத இடத்தில் வைத்திருங்கள். முடிந்தளவு துணிகளை நனைக்காதிருங்கள். சொத்துப்பத்திரங்கள், சான்றிதழ்கள், குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றை மிகவும் பத்திரப்படுத்தி, எதன்பொருட்டும் அவை சேதமடையாத வகையில் பாதுகாப்பான இடத்தில் வைத்திடுங்கள். இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்களை மரங்களின் அருகாமையிலேயோ, தாழ்வான பகுதிகளிலேயோ நிறுத்தாது அவற்றைப் பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வையுங்கள்.

வீட்டில் முதலுதவி பெட்டி

வீட்டில் முதலுதவி பெட்டி

உங்கள் நண்பர்கள், உறவினர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா? எனக் கேட்டு உறுதிசெய்துகொள்ளுங்கள். வீட்டில் ஒரு முதலுதவிப்பெட்டியை தயாராய் வைத்திருங்கள். மருத்துவரின் தொடர்பெண்ணையும், தீயணைப்புத்துறையின் தொடர்பெண்ணையும் நினைவில் வைத்திருங்கள். வீட்டில் கால்நடைகள் இருந்தால், அவைகளை இப்போதே பாதுகாப்பான இடங்களில் கட்டி வைத்திருங்கள். வாகன ஓட்டிகள் முடிந்த அளவு சாலையின் நடுவே பயணியுங்கள். இரு ஓரங்களிலும் எதிர்பாராத பள்ளங்கள் உருவாகியிருக்கக்கூடும். வீட்டில் தண்ணீர் உட்புகுகிற வாய்ப்பிருந்தால் அத்திவாசியப் பொருட்களைத் தனியாகப் பாதுகாப்பான இடத்தில் வைத்திருங்கள்.

தண்ணீர் தேக்கம் தகவல்

தண்ணீர் தேக்கம் தகவல்

உங்கள் தெருவில் தண்ணீர் தேங்கினால் உடனடியாக நகராட்சிக்குத் தகவல் தெரிவித்து, அதனை அகற்றக் கோருங்கள். மேலே கூறப்பட்டிருக்கிற அடிப்படையானவற்றை அவசியம் பின்பற்றுங்கள். நம்பிக்கையோடும், விழிப்போடும் நாட்களை நகர்த்துங்கள். நிவர் புயலையும், இக்கடினச் சூழலையும் நம்மால் உறுதியாக கடக்க இயலும்.

நாம் தமிழரை தொடர்பு கொள்ளலாம்

நாம் தமிழரை தொடர்பு கொள்ளலாம்

அவசரத்தேவைகளுக்கு அருகில் உள்ள நாம் தமிழர் உறவுகளையோ அல்லது தலைமை அலுவலகத்திற்கோ அழையுங்கள். உங்களுக்கு உதவ எப்போதும் உங்கள் உடன்பிறந்தவர்கள் காத்திருக்கிறோம். உங்கள் பகுதி நாம் தமிழர் உறவுகள் உங்களுக்கு வேண்டியதை செய்து கொடுப்பார்கள். தலைமை அலுவலகத் தொலைபேசி எண் : 044-4380 4084. இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.

 
 
 
English summary
Naam Tamilar Chief Seeman has appealed to follow Safe Procedures ahead of Cyclone Nivar.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X