ஹேப்பி நியூஸ்.. வணிக பயன்பாட்டுக்கான காஸ் சிலிண்டர் விலை 2வது மாதமாக குறைந்தது! சென்னை ரேட் தெரியுமா
சென்னை: வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.187 குறைக்கப்பட்டு ரூ.2,186-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியாவில் வணிக பயன்பாடு, வீட்டு உபயோகம் என இரு வகையான சிலிண்டர்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர் வீட்டு உபயோகத்திற்கும், 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் வணிக பயன்பாட்டுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல் ஒவ்வொரு மாதமும், சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றம் செய்து வருகின்றன.

அண்மைக் காலமாக வணிகம் மற்றும் வீட்டு உபயோக சிலிண்டர்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தன. இதனால் இல்லத்தரசிகள் மற்றும் வணிக சிறுவனங்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதுமட்டுமல்லாமல், வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்வு, நடுத்தர மக்களின் மாத பட்ஜெட் கையை கடித்தது. அதேபோல் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையும் ரூ.2,500யை கடந்ததால், டீ, காபி, உணவு பொருட்களின் விலைகள் சில இடங்களில் அதிகரிக்க தொடங்கின. இது பொதுமக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியது.
இதனால் சிலிண்டர்களின் விலையை குறைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதோடு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டன. ஒவ்வொரு மாதமும், 1ம் தேதியன்று, இதுகுறித்து பெரும் விவாதமே சமூக வலைதளங்களில் எழுந்து வந்தது.
அதிரடி... சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.135 குறைவு.. வணிகர்கள் மகிழ்ச்சி
இந்நிலையில் இன்று வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. 19 கிலோ எடை கொண்ட இந்த சிலிண்டரின் விலை ரூ.187 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன்மூலம் சென்னையில் 19 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 2 ஆயிரத்து 373 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இனி ரூ.2,186க்கு விற்பனையாகும்.
இதேபோல் டெல்லியில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை, ரூ.198, மும்பையில் ரூ.190.50, கொல்கத்தாவில் ரூ.182க்கும் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் ரூ.135 குறைக்கப்பட்ட நிலையில், இந்த மாதம் ரூ.187 குறைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த இரண்டு மாதங்களில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலையில் ரூ.322 குறைக்கப்பட்டுள்ளது வணிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இருந்தும், வீட்டு உபயோகத்துக்கான 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.1018.50க்கு விற்பனை செய்யப்படும்.