எத்தனை கொலை நடந்திருக்கு? தட்றோம்.. தூக்குறோம்.. உள்ளே வெக்கிறோம்.. திமுகவுக்கு மாஜி வார்னிங்
சென்னை: எத்தனை வழக்கு போட்டாலும் அதை சந்திக்க அதிமுகவுக்கு தைரியம் உள்ளது, திமுகவோடு சேர்ந்து ஓ பன்னீர் செல்வம் வேலை செய்கிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டினார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த பிரச்சினை மோசமான நிலையில் இரு தரப்பினர் வெவ்வேறு வழக்குகளை உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் தொடுத்துள்ளனர்.
இரட்டை தலைமைதான் வேண்டும் என கூறி அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான "நமது அம்மா"வின் ஆசிரியராக இருந்த மருது அழகுராஜ், அந்த பதவியிலிருந்து விலகினார்.
பொதுக்குழு கூட்டத்தில் பிரச்சனை செய்ய ஓபிஎஸ் சதி..டிஜிபி அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்ட ஜெயக்குமார்

கொடநாடு கொலை
இவர் கொடநாடு கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் கண் முன்னே இருக்கும் நிலையில் அவர்களை கைது செய்தால் உங்களுக்கு புண்ணியமாக போய்விடும் என முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்த நிலையில் மருது அழகுராஜ் நேற்று முன் தினம் செய்தியாளர்களை சந்தித்தார்.

கொள்ளை
அப்போது அவர் கொடநாடு கொலை கொள்ளை நடந்த போது அந்த இடத்திற்கு அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஏன் செல்லவில்லை? கொடநாடு விவகாரத்தில் விசாரணையை ஏன் முடுக்கிவிடவில்லை என்ற கேள்விகளை எழுப்பினார்.

மாஜி அமைச்சர்
இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில் நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட் சம்பவத்தில் விரைவாக குற்றவாளிகளைக் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தியவர் எடப்பாடி பழனிச்சாமி. அவர்களை திமுகவினர் ஜாமீனில் விடுவித்தனர்.யார் தவறு செய்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

படுகொலை
பழனிச்சாமியின் செயல்பாடும் அப்படித்தான் இருந்தது. அதை மறைத்துவிட்டு பேசுவதை எந்த தொண்டனும் ஏற்க மாட்டான். திமுகவோடு சேர்ந்து கொண்டு ஓபிஎஸ் வேலை செய்து வருகிறார். அவருடன் மருது அழகுராஜ் சேர்ந்துள்ளார். திமுக ஆட்சியில் நடந்த படுகொலைகளை, அக்கட்சி கவனத்தில் கொள்ள வேண்டும்.

தூசு தட்டுவோம்
நாங்கள் கண்டிப்பாக ஆட்சிக்கு வருவோம். அப்போது அந்த கொலை வழக்குகளை தூசி தட்டி குற்றவாளிகளை கூண்டில் நிற்க வைப்போம். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுக பொய் வழக்கு போட்டு வருகிறது. எந்த வழக்கு போட்டாலும் அதை எதிர்கொள்ளும் தைரியமும் திராணியும் எங்களுக்கு இருக்கிறது. அதிமுகவில் சசிகலா, தினகரனை ஏற்றுக் கொள்ளாத நிலையே நீடிக்கிறது. ஓபிஎஸ் அதிமுக பொதுக் குழுவுக்கு தாராளமாக வரட்டும். அங்கு நிறைவேற்றப்படும் தீர்மானத்தை ஏற்கட்டும் என்றார்.