நடிகர்களை நம்பி ஏமாறாதீங்க.. டிஜிபி சைலேந்திர பாபு தந்த முக்கிய அட்வைஸ்! வீடியோவில் சொன்ன காரணம்!
சென்னை : ஆன்லைன் ரம்மியில் வரும் நடிகர்களின் விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் எனவும், ஆன்லைன் ரம்மி விளையாடினால் தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஏற்படும் என தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திர பாபு எச்சரித்துள்ளார்.
பணத்திற்கு ஆசைப்பட்டு அல்லது வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம் என நினைத்து அறியாமையில் மூழ்கி மன நோயாளிகளாக மாறி தற்கொலை செய்துகொள்ளும் நபர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.
விட்டதை பிடித்து விடலாம் என நினைத்து கடனுக்கு மேல் கடன் வாங்கி கடனில் மூழ்கி வேறு வழியின்றி தற்கொலை முடிவை தேர்வு செய்யும் அவலநிலை நீடிக்கத்தான் செய்கிறது. ஆன்லைன் ரம்மி, ட்ரேடிங்க் ஆப்கள் தான் இந்த அவலநிலைக்கு காரணம்.
’ஆன்லைன் ரம்மி’ மேலும் ஒரு பலி! தொடர்சாவுகளை வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு? அன்புமணி ராமதாஸ் கேள்வி

ஆன்லைன் ரம்மி
இதனையடுத்து எழுந்த எதிர்ப்புகள் மற்றும் கோரிக்கைகளால் தடை கொண்டுவரப்பட்டது. ரம்மி நிறுவனங்கள் மேலமை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அந்த சட்டத்திற்கு தடைபெற்றனர். இதையடுத்து மீண்டும் தமிழகத்தில் நுழைந்தது ஆன்லைன் ரம்மி. அப்போதிருந்து இப்போது வரை பல உயிர்களை தனது கோர பசிக்கு இரையாக்கி வருகிறது என்றே கூறலாம். இதனையடுத்து ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுக்களை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

காவல்துறை தற்கொலை
ஏன் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளில், காவல் துறையினரே சிக்கி பணத்தை இழந்து தற்கொலை கொள்ளும் சம்பவங்கள் நடைபெறுவது தொடர் கதையாகி உள்ளது. இளைஞர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டிய காவல் துறை அதிகாரிகளே இது போன்ற விளையாட்டுகளுக்கு அடிமையாகி பணத்தை இழந்து, கடும் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தின.

டிஜிபி சைலேந்திர பாபு
இந்நிலையில், ஆன்லைன் ரம்மியில் வரும் நடிகர்களின் விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் எனவும், ஆன்லைன் ரம்மி விளையாடினால் தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஏற்படும் என தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திர பாபு எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்," சமீபகாலமாக ஆன்லைன் ரம்மி விளையாட்டு எனும் மோசடி அதிகளவில் நடந்து வருகிறது. ஆன்லைன் ரம்மி விளையாட்டு முதலில் ஜெயிப்பது போல ஆசையை தூண்டிவிட்டு, பின்பு அனைத்து பணத்தையும் இழக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

நடிகர்களின் விளம்பரங்கள்
பிடித்த நடிகர்கள் ரம்மி விளையாட்டு விளம்பரங்களில் வருவதை பார்த்து ஏமாந்து யாரும் இந்த மோசடியில் சிக்க வேண்டாம். இது ஆன்லைன் ரம்மி அல்ல; மோசடி ரம்மி. ஆன்லைன் ரம்மி விளையாடும் நபர்களுக்கு அவமானம், குடும்பப் பிரச்னை மற்றும் தற்கொலை செய்துகொள்ளும் நிலை ஏற்படும். எனவே ஆன்லைன் ரம்மி விளையாட்டில் யாரும் ஈடுபட வேண்டாம்" என அந்த வீடியோவில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திர பாபு கூறியுள்ளார்.