கவிஞர் வைரமுத்துவின் நாட்படு தேறல் 2.. சிம்புதேவன் உள்ளிட்ட இயக்குனர்கள் அறிமுகம்!
சென்னை: கவிப்பேரரசு வைரமுத்துவின் நாட்படு தேறல் 2வது பாட்டுத்தொடரின் 2வது பருவத்துக்கான இயக்குனர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளனர். இதில் இயக்குனர் சிம்புதேவன், ‛மதயானைக்கூட்டம்' விக்ரம் சுகுமாறன், ‛பைரவா' பரதன், ‛சிட்டிசன்' சரவண சுப்பையா உள்பட பலர் இடம்பெற்றுள்ளனர்.
தமிழ் திரையுலகில் முன்னணி பாடலாசிரியர், கவிஞராக இருப்பவர் வைரமுத்து. இவருக்கும் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்கள், வெளிநாடுகளில் ரசிகர்கள் உள்ளனர்.
இவர் நாட்படு தேறல் என்ற பெயரில் வாரம் ஒரு பாடல் வீதம் 100 பாடல்கள் உருவாக்கி வெளியிட முடிவு செய்தார். இதற்கான முயற்சிகளையும் முன்னெடுத்தார்.
பனங்கிழங்கின் பயன்கள் என்னென்ன?.. கவிதை வடிவில் அருமையாக விளக்கிய கவிப்பேரரசு வைரமுத்து.. செம ட்வீட்
|
எவ்வளவு இசையமைப்பாளர்கள்
அதன்படி 100 இசையமைப்பாளர்கள், 100 இயக்குனர்கள், 100 பாடகர்களுடன் கவிப்பேரரசு வைரமுத்துவின் 100 பாடல்கள் வெளிவர உள்ளது. இதற்கான தலைப்பு பாடலை ஜெரார்ட் பெலிக்ஸ் இசையமைப்பில் கார்த்திகேயன் இயக்கத்தில் உருவானது. இந்த பாடலை ஷங்கர் மகாதேவன் பாடி இருந்தார்.

2ம் பருவம் துவக்கம்
நாட்படு தேறல் ஒன்று பாட்டுத்தொடர் முடிவடைந்த நிலையில் நாட்படு தேறல் 2 பாட்டுத்தொடர் துவங்கி உள்ளது. ஏப்ரல் 17 முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் கலைஞர், இசையருவி சேனல்களில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த 2ம் பருவத்தில் இசையமைப்பாளர்கள் வித்யாசாகர், யுவன் சங்கர்ராஜா, ஜிவி பிரகாஷ், ரமேஷ் விநாயகம், அனில் சீனிவாசன், சைமன் கே கிங், நவ்பல் ராஜா, அவ்கத், ரமேஷ் தமிழ்மணி, ஜெரார்ட் பெலிக்ஸ், வாகு மசான், இனியவன் உள்ளிட்டவர்களின் இசையமைப்பில் பாடல்கள் வெளிவர உள்ளன.

இயக்குனர்கள் அறிமுகம்
இந்நிலையில் 2ம் பருவத்துக்கான இயக்குனர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.இந்நிலையில் நாட்படு தேறல் 2 இயக்குனர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளனர். இதில் இயக்குனர் சிம்புதேவன், ‛மதயானைக்கூட்டம்' விக்ரம் சுகுமாறன், ‛பைரவா' பரதன், ‛சிட்டிசன்' சரவண சுப்பையா, ‛க/பெ ரண சிங்கம்' விருமாண்டி, இயக்குனர் தளபதி பிரபு, ரமேஷ் தமிழ்மணி, சரண், காந்தி கிருஷ்ணா, நடன இயக்குனர் ராதிகா, தேன்கணேஷ் விநாயகன், ‛காக்கா முட்டை' மணிகண்டன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இயக்குனர்களின் கருத்து
இதுபற்றி இயக்குனர் சிம்புதேவன் கூறுகையில், ‛‛நாட்படுதேறல் வித்தியாசமான முயற்சியாக உள்ளது'' என்றார். ‛சிட்டிசன்' சரவண சுப்பையா கூறுகையில் ‛‛ஒவ்வொரு பாடலையும் குதுகலாம், கொண்டாட்டம் செய்து அனுபவித்து வருகின்றனர்'' என கூறியுள்ளார். ‛‛பாடல் முடிந்து கண்கள் கலங்கிவிட்டேன்'' என ‛க/பெ ரண சிங்கம்' விருமாண்டியும், ‛‛வரிகள் அனைத்தும் பிடித்திருந்தது. இதனை தவிர்த்து உலகத்தை இயக்குவது எவுமில்லை என்பதை உணர்ந்தேன்'' என தளபதி பிரபுவும், ‛‛எந்த பாடலை இயக்குவது என குழும்பிவிட்டேன்'' என காந்தி கிருஷ்ணாவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

வைரமுத்து கூறியது என்ன
முன்னதாக நாட்படு தேறல் 2ம் பாகம் குறித்து கவிஞர் வைரமுத்து கூறுகையில், ‛‛நாட்படு தேறல் முதற்பருவத்துக்கு அன்பையும், வாழ்த்துகளையும் அள்ளித்தந்த தமிழர்களுக்கு என் உள்ளம் கனிந்த நன்றி. இதோ நாட்படுதேறல் 2வது பருவம். கலைஞர், இசையருவி, யூடியூப்பில் மூன்றிலும் சித்திரை முதல் வாரத்தில் இருந்து 13 பாடல்கள், 13 வாரங்கள். ஒவ்வொரு பாட்டும் ஒரு அனுபவம். ஒவ்வொரு பாட்டும் கவிதை துண்டு. செழுமையான காட்சிகள். இளமையான இசை. வளமையான தமிழ். கேளுங்கள். காத்திருங்கள், காணுங்கள், களியுங்கள். வாழ்த்துங்கள்'' என கூறியிருந்தார்.