உஷார்.. வெடித்த கிருமி நாசினி தெளிப்பு இயந்திரம்.. மதுரை மாநகராட்சி ஊழியருக்கு கண் பார்வை பாதிப்பு
சென்னை: கிருமிநாசினி தெளிப்பு இயந்திரம் வெடித்து சிதறியதால் மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் கண் பார்வைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாநகராட்சியில் ஒப்பந்தப் பணியாளராக பணியாற்றுபவர் மாரிமுத்து. கடந்த 8 மாதங்களாக அவர் கொரோனா நோய் தடுப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

கிருமிநாசினி தெளிப்பான் இயந்திரம் மூலமாக தெருக்களை சுத்தம் செய்வது இவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த பணியாகும். சம்பவத்தன்று இவர் கிருமிநாசினி தெளிப்பானுடன் பணியில் ஈடுபட்ட போது அந்த இயந்திரம் திடீரென வெடித்து சிதறியது.
இதில், கிருமிநாசினி, மாரிமுத்து முகத்திலும், கண்கள் பகுதியிலும் கடுமையாகச் சேதமடைந்தது. இந்த நிலையில், மாரிமுத்து, கண்பார்வை குறைந்து போயுள்ளது.
இதையடுத்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். மாரிமுத்து குடும்பத்தினர் அவர் பேசிய வீடியோவை வெளியிட்டுள்ளனர். அரசு தங்களுக்கு உரிய உதவி செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாநகராட்சி தரம் குறைந்த இயந்திரங்களை கொடுத்து ஊழியர்களின் உயிருடன் விளையாடுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. மாநகராட்சி ஊழியர்கள் மட்டுமின்றி, பொதுமக்களும் தங்களிடம் உள்ள கிருமி நாசினிகளை முகத்துக்கு அருகே கொண்டு செல்லாமல் உரிய பாதுகாப்பு இடைவெளியுடன் பயன்படுத்துவது இதுபோன்ற விபத்துக்களை தடுக்க உதவும் என்கிறார்கள் மருத்துவர்கள்.