சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ப.சிதம்பரம் சொன்னதுபோல செய்தால் என்ன.. விவசாயிகளுக்கு நிவாரணம் எங்கே.. கேள்விகளை அடுக்கும் கி.வீரமணி

நிதியமைச்சரின் அறிவிப்புகள் குறித்து கி.வீரமணி அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: "விவசாயிகளுக்கு நிவாரணம் எங்கே.. மற்றவர்களின் வாழ்வாதாரங்களுக்குக்கூட இதிலே எந்த அறிவிப்புமே இல்லையே.. 100 நாட்கள் வேலை திட்டத்தை, 200 நாள்களாக நீட்டிக்கலாமே" என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நிதியமைச்சர் அறிவிப்பு குறித்த அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டுள்ளார்.. "ப.சிதம்பரம் சொன்னதைபோல, மக்கள் கையில் பணப்புழக்கத்திற்கு, குடும்பத்திற்கு ரூ.5 ஆயிரம் தருவது அவசியம்" என்ற கருத்தையும் வீரமணி அழுத்தமாக வலியுறுத்தி உள்ளார்.

2வது நாளாக பொருளாதார அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.. இதில் புலம்பெயர் தொழிலாளர்கள், சிறு வியாபாரிகளின் நலனை கொண்டு அறிவிப்புகள் சில வெளியாயின.. அதேசமயம், கடன் வாங்குங்கள், கடன் வாங்கினால் 3 மாதம் இஎம்ஐ கட்ட சலுகை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தது விவாத பொருளாக உருவெடுத்து வருகிறது.

 dk leader veeramani statement about finance minister nirlama sitharamans announcement

குறிப்பாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது விவசாயிகளுக்கு ஏதாவது சிறப்பு அறிவிப்பு, நிதி, சலுகைகள் போன்றவைகள் தான். ஆனால் அந்த வகையில் ஏமாற்றம் தந்துள்ளதும் அதிருப்தியை தந்துவருகிறது. இது தொடர்பாக கட்சி தலைவர்கள் நிதியமைச்சரின் அறிவிப்புகள் குறித்து தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியும் அறிக்கை மூலம் கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் சொல்லி உள்ளதாவது:

"பிரதமர் மோடி அவர்கள் மக்களுக்கு ஆற்றிய உரையில், கரோனாவினால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து நாட்டின் அனைத்துத் தரப்புப் பொருளாதார நிலையும் மீள - மீட்டெடுக்கும் வழிமுறையாக மத்திய அரசு 20 லட்சம் கோடி ரூபாய் சலுகைத் திட்டங்களைச் செயல்படுத்தும்.. அவற்றை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பார் என்று கூறியிருந்தார்.

நாடே மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் நிதியமைச்சரின் அறிவிப்புகளை எதிர்பார்த்த 13 கோடி ஏழைத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இதில் என்ன கிடைத்துள்ளது? அவர்கள் கையில் ரொக்கமாகப் பணப் புழக்கம் ஏற்பட மத்திய, மாநில அரசுகள் வழிவகை செய்வதுதான் - பொருளாதாரத்தில் பணப்புழக்கம் சரளமாகி, ஓரளவுக்கு இழப்பிலிருந்து நிவாரணம் அவர்களுக்குக் கிட்டக் கூடும்.. ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 ஆயிரம் கொடுத்தால், செலவு 65 ஆயிரம் கோடி ரூபாய்தான்!

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளதுபோல், 1. முதலில் மத்திய அரசு செய்யவேண்டியது என்னவென்றால், அடித்தட்டில் உள்ள 13 கோடி குடும்பங்களின் கைகளில் பணத்தைக் கொடுக்கவேண்டும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 ஆயிரம் கொடுத்தால், இதற்கு அரசுக்கு ஆகும் செலவு 65 ஆயிரம் கோடி ரூபாய்தான். (நம் நாட்டிலிருந்து வங்கிகளில் கடன் வாங்கி 'பட்டை நாமம்' போட்டுவிட்டு வெளிநாட்டில், இன்று சொகுசு வாழ்க்கை வாழும் விஜய் மல்லையாக்கள், நீரவ் மோடிகள், 'யெஸ்' வங்கியில் விளையாடிய வித்தகர்கள் எடுத்துள்ள தொகையை ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவான அளவே).

2. ஜி.எஸ்.டி. வரியில் மத்திய அரசு மாநிலங்களுக்கு தரவேண்டிய பாக்கி, நிலுவை- மாநிலங்களுக்கே உரிமையுள்ள நிதி. இது சலுகையோ, கொடையோ அல்ல. சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய். தமிழ்நாடு அரசு உள்பட மேற்கு வங்கம் போன்ற பல மாநிலங்களும் தொடர்ந்து இடையறாது தங்களுக்குரிய தொகையை உடனடியாகத் தர வற்புறுத்தியும் மத்திய அரசு தரப்பில் செயல்மூலம் எந்த சாதக பதிலும் இதுவரை இல்லை என்பது வேதனையும், வெட்கமும் கலந்த ஒன்று!

கடந்த ஏப்ரல் (2020) மாதத்தில் மட்டும் 21 பெரிய மாநிலங்களுக்கு அவர்களது வருவாயில் ஏற்பட்டுள்ள இழப்பு - கரோனா ஊரடங்கு (லாக் டவுன்)மூலம் ஏற்பட்ட தொகை ரூ.97,100 கோடிகள் ஆகும்! முக்கிய மாநிலங்களான தமிழ்நாடு, குஜராத், தெலங்கானா, அரியானா, கரநாடகா, மகாராட்டிரா போன்றவையும் இப்பட்டியலில் அடங்கும். ஏழு முக்கிய தலைப்புகளில் அந்தந்த மாநிலங்களுக்கு வரவேண்டிய வருவாய் இழப்பு மேற்காட்டியது ஒரு மாதம் - ஏப்ரலில் மட்டும்!

ஜி.எஸ்.டி., வாட் வரி, பெட்ரோலிய பொருள் விற்பனைமூலம் வருமானம், மது, பத்திரப் பதிவு, மோட்டார் வாகனம், மின்சார வரி மற்றும் பல வரியில்லா வருமானம் (Non Tax Revenue) போன்றவற்றால், மேற்காட்டிய முக்கிய மாநிலங்கள் 70 சதவிகித வருமானத்தை அவர்களே ஈட்டி வந்த நிலையில், கரோனா ஊரடங்கு கதவை மூடியதன்மூலம் - ஏற்பட்டுள்ள இழப்பை மத்திய அரசு, உரிய முறையில் ஈடுகட்டி, மாநிலங்கள் எழுந்து நிற்க உதவ வேண்டாமா?

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் எழுப்பியுள்ள மற்றொரு முக்கிய கேள்விக்கும் தெளிவான விடையளிக்கவேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உண்டு. தெளிவுபடுத்தவேண்டிய பொறுப்பு - மத்திய அரசுக்கு, நிதியமைச்சருக்கு உண்டு! 6.30 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் இருந்தும், 45 லட்சம் நிறுவனங்களுக்காக, சில நிவாரணங்களை மட்டுமே அறிவித்து - மற்ற சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களை அம்போ வென்று கைகழுவியிருப்பது கவலையளிக்கிறது! இதை முக்கியமாக தெளிவுபடுத்தவேண்டிய பொறுப்பு - மத்திய அரசுக்கு, குறிப்பாக நிதியமைச்சருக்கு உண்டு!

புலம் பெயரும் தொழிலாளர்களுக்கும், ஆண்டு முழுவதும் வறுமையில் வாடி வதங்கிடும் ஏழை மற்றும் நடுத்தர விவசாயிகளின் விளைபொருள் கொள்முதல் பயிர்க்கடன் முதலீடு போன்றவற்றிற்கும் எந்த அறிவிப்பும் செய்யப்படவில்லை. மற்றவர்களின் வாழ்வாதாரங்களுக்குக்கூட எந்த அறிவிப்பும் இதில் இல்லையே! அடிப்படையில் ''இந்தியா விவசாய நாடு; இந்தியா கிராமங்களில் வாழ்கிறது'' என்றெல்லாம் கூறும் நிலையில், அவர்களுக்குரிய நிவாரண விவரங்கள் இனியாவது அறிவிக்கப்படுமா?

100 நாள்கள் (விவசாயம் உள்ளிட்ட) வேலைத் திட்டத்தை, 200 நாள்களாக கரோனா முடியும்வரை கூட நீட்டலாமே! மத்திய - மாநில அரசுகள் தாராளமாக செலவழிப்பதன்மூலமே சிக்கியுள்ள நம் நாட்டுப் பொருளாதாரம் - முட்டுச் சந்திலிருந்து மீட்கப்பட முடியும். இதுவே மேலும் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் (Public spending will generate employment) என்பது பொருளாதார விதி. அரசுகள் அனாவசியச் செலவுகளையும் தவிர்க்கவேண்டும். எதிர் நோக்கிக் காத்திருந்து, நேற்று (13.5.2020) நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களது அறிவிப்பினால் ஆறுதல் - நிம்மதியைவிட ஏமாற்றமே பெரிதும் மிஞ்சியது.

English summary
dk leader veeramani statement about finance minister nirlama sitharamans announcement
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X