40 லிருந்து 25 கேட்டோம்.. கேட்டது கிடைத்தால் மட்டுமே அதிமுகவுடன் கூட்டணி.. தேமுதிக பிடிவாதம்
சென்னை: கேட்கும் தொகுதிகளை கொடுத்தால் மட்டுமே அதிமுகவுடன் கூட்டணி என தேமுதிக தெரிவித்துள்ளது. இதன் மூலம் தேமுதிக வேறு கூட்டணிக்கு செல்லுமா இல்லை தனித்து போட்டியிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இருந்து அதிமுக கூட்டணியில் தேமுதிக இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு தேர்தலை போன்று 41 தொகுதிகளை கேட்கிறது திமுக.
ஆனால் அதிமுகவோ 14 தொகுதிகள் தருகிறோம் என்கிறார்கள். இதனால் இவர்களுக்கிடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது.

21 தொகுதிகள்
இந்த நிலையில் 25 தொகுதிகளை தேமுதிக கேட்கிறது. இதற்கும் அதிமுக மறுக்கிறது. மேலும் 21 தொகுதிகள், ராஜ்யசபா சீட்டை கேட்கிறது. ராஜ்யசபா சீட்டு கொடுக்கிறோம், ஆனால் 21 தொகுதிகள் முடியாது என அதிமுக மறுக்கிறது. இந்த நிலையில் அதிமுகவோ 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டுவிட்டது.

தேமுதிக அலுவலகம்
இந்த தொகுதி பங்கீடு குறித்து தேமுதிக அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களை தேமுதிக துணை செயலாளர் பார்த்தசாரதி சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் 41 சீட்டுகளை கேட்டோம். ஆனால் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு கொடுக்க வேண்டியிருப்பது என்று அதிமுக சொன்னதால் தற்போது 25 தொகுதி வரை கேட்டிருக்கிறோம்.

அதிமுகவில் கோரிக்கை
மேலும் ராஜ்யசபா சீட் கேட்டும் அதிமுகவில் கோரிக்கை வைத்துள்ளோம். அதிமுகவுடன் இதுவரை இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. தேமுதிக கேட்கும் தொகுதிகளை ஒதுக்கினால் மட்டுமே அதிமுகவுடனான கூட்டணி தொடரும். எண்ணிக்கை உறுதியானால் எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து தெரிவிக்கப்படும்.

தொகுதி பங்கீடு
அதிமுகவை விமர்சித்து சுதீஷ் பேசியதற்கும், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார். இதனால் 25 தொகுதிகள் கொடுத்தால் மட்டுமே அதிமுக கூட்டணியில் தேமுதிக நீடிக்கும் என தெரிகிறது. இல்லாவிட்டால் தனித்து போட்டியா இல்லை வேறு கூட்டணிக்கு செல்லுமா என தெரியவில்லை.