சிக்னல்.. அவசரமாக கிளம்பி போன சுதீஷ்.. இரவே முதல்வரை சந்தித்து மீட்டிங்.. 1 மணி நேரம் என்ன நடந்தது?
சென்னை: தேமுதிக அதிமுக இடையே கூட்டணி பேச்சுவார்த்தையில் கடந்த ஒரு வாரமாக இழுபறி நீடித்து வரும் நிலையில் நேற்று இரவு திடீர் என்று தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ் தமிழக முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேசினார்.
2021 சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் அதிமுக நாளைக்குள் கூட்டணி பேச்சுவார்த்தைகளை முடித்து, தேர்தல் வேலைகளை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே பாமக, பாஜக ஆகிய கட்சிகளுடன் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையை முடித்துவிட்டது. அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு 23, பாஜகவிற்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது.
கொளத்தூர் டூ திருவொற்றியூர்.. ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடாதது ஏன்?.. சீமான் தந்த அசத்தல் விளக்கம்!

தொகுதிகள்
இந்த நிலையில் தேமுதிக உடனான கூட்டணி பேச்சுவார்த்தை மட்டும் இழுபறியில் சென்றது. தேமுதிக அதிமுகவிடம் மொத்தமாக 30+ தொகுதிகளையும் ஒரு ராஜ்ய சபா சீட்டையும் கேட்டது. ஆனால் தேமுதிகவுக்கு அவ்வளவு இடங்களை கொடுக்க அதிமுக விரும்பவில்லை. இதையடுத்து தேமுதிக 25 தொகுதிகள் வேண்டும் என்று இறங்கி வந்தது.

கேட்கவில்லை
எங்களுக்கு இவ்வளவு இடங்கள் கண்டிப்பாக வேண்டும். பாஜகவிற்கு 20, பாமகவிற்கு 23 தொகுதிகள் கொடுத்துள்ளீர்கள்.. அதனால் எங்களுக்கும் இதேபோல் 20+ இடங்களை கொடுக்க வேண்டும், எங்களுக்கும் கூட்டணியில் உரிய மரியாதை கொடுக்க வேண்டும் என்று தேமுதிக தரப்பு கோரிக்கை வைத்தது. ஆனால் அதிமுக இதற்கும் ஒப்புக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

அதிமுக அதிரடி
அதோடு அதிமுக வேகமாக செயல்பட்டு அதிரடியாக 6 வேட்பாளர்களை அறிவித்தது. இது தேமுதிகவுக்கு நெருக்கடி கொடுத்தது. நாங்கள் வேட்பாளர்களை அறிவிக்க போகிறோம், சீக்கிரம் முடிவிற்கு வாங்க, சீக்கிரம் ஒரு முடிவை எடுங்க என்று தேமுதிகவிற்கு சிக்னல் கொடுத்து அதிமுக கடுமையாக நெருக்கியது. இந்த நிலையில் தேமுதிக தற்போது வேறு வழியில்லாமல் மேலும் இறங்கி வந்துள்ளது.

ஒப்புக்கொண்டது
அதன்படி நேற்று இரவு திடீர் என்று தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ் தமிழக முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேசினார்.சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள முதல்வர் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. தேமுதிகவின் மோகன்ராஜ், பார்த்தசாரதி ஆகியோர் இந்த சந்திப்பில் உடன் இருந்தனர். இதில் தொகுதி பங்கீடு தொடர்பான உடன்பாடு எட்டப்பட்டுவிட்டதாக கூறுகிறார்கள்.

உடன்பாடு
1 மணி நேரம் நடந்த இந்த இரவு நேர மீட்டிங்கில் தேமுதிகவிற்கு 12-13 இடங்களை கொடுப்பதாக அதிமுக பேசி இருக்கிறது. அதேபோல் ஒரு ராஜ்ய சபா இடமும் கொடுப்பதாக அதிமுக கூறியுள்ளது. நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின் தேமுதிக இதை ஏற்றுக்கொண்டுவிட்டது என்கிறார்கள். எத்தனை இடங்கள் என்பதை குறித்த விவரம் இன்னும் உறுதியாக வெளியாகவில்லை.

உறுதி
12-18 இடங்கள் வரை தேமுதிக பெற வாய்ப்புள்ளது. இன்று இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள். இன்று கடைசியாக ஒரு மீட்டிங் நடத்தப்படும். அதன்பின் கூட்டணி குறித்த இறுதி அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.