சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மதச்சார்பற்ற அரசியல் சரி.. அதுல எப்படிங்க ஆன்மீக அரசியல் சேரும்? ரஜினிகாந்த் மீது ஆ.ராசா பாய்ச்சல்

Google Oneindia Tamil News

சென்னை: ரஜினிகாந்த் முன்வைக்கும் ஆன்மீக அரசியல் எப்படி மதச்சார்பற்ற அரசியலாக இருக்க முடியும்? மதச்சார்பற்ற அரசியலும் ஆன்மீக அரசியலும் ஒன்றுக்கு ஒன்று முரண்பாடானதுதானே என திமுக துணை பொதுச்செயலாளர் ஆ. ராசா காட்டமாக சாடியுள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆ. ராசா செய்தியாளர்களுக்கு நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: அரசியல் கட்சி தொடங்குவதற்கு எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. ரஜினிகாந்துக்கும் உரிமை இருக்கிறது. அது அவரது உரிமை. ஆரம்பிக்கட்டும். அப்புறம் பேசுவோம்.

திமுகவின் வாக்கு வங்கியை யாராலும் சிதைக்க முடியாது. அதேபோல் இந்த ஆட்சிக்கு எதிராக இருக்கிற மனநிலையையும் யாராலும் மாற்றிவிட முடியாது. திமுகவின் வாக்கு வங்கியை யாரும் எடுத்துவிட முடியாது. எடப்பாடி பழனிசாமியின் ஊழல் ஆட்சிக்கு எதிராக இருக்கிற மக்களின் மன எழுச்சியை திசை திருப்பி அதிலே இருந்து கொஞ்சம் பேரை பிரித்து அதை திமுகவின் தோல்விக்கு காரணமாக வைக்கலாமா என்கிற முயற்சி எடுபடாது.

ஜெயாவுக்கான ஆளுமை

ஜெயாவுக்கான ஆளுமை

போன தேர்தலில் ஜெயலலிதா மீது இருந்த குற்றச்சாட்டுகள் இருந்தது. என்றாலும் கூட அந்த அம்மாவுக்கு என ஒரு அரசியல் ஆளுமை இருந்தது. அந்த அம்மாகிட்ட எங்களுக்கு குறைபாடுகள் நிறைய இருக்கின்றன. அந்த அம்மா செய்த ஊழலை நாங்க என்னைக்கும் ஏத்துகிட்டது இல்லை. அந்த அம்மாவின் எதேச்சதிகாரத்தை நாங்க ஏற்றுக் கொண்டது இல்லை. அந்த அம்மா ஜனநாயக நெறிமுறைகளை பலமுறை மீறி இருக்கிறார் என்பதை பலமுறை சுட்டிக்காட்ட தவறியது இல்லை. ஆனால் அதையெல்லாம் தாண்டி அவருக்கு என ஒரு துணிச்சல் அடிப்படையிலான ஆளுமை இருந்தது. அந்த ஆளுமை அந்த அம்மாவுக்கு ஒருவிதத்தில் பிரயோஜனமாக இருந்திருக்கலாம்.

ரஜினிக்கு என்ன வாக்கு வங்கி?

ரஜினிக்கு என்ன வாக்கு வங்கி?

மக்கள் நலக் கூட்டணியில் கூட சேர்ந்திருந்த கட்சிகள் கொள்கை ரீதியாக இருந்தன. அந்த கூட்டணியில் இருந்த சிபிஐ, சிபிஎம், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒரு வாக்கு வங்கி எஸ்டாப்லிஷாகி இருந்தது. ஆனால் ரஜினிகாந்துக்கு வாக்கு வங்கி ஏற்கனவே இருக்கிறது என்பதற்கு எந்த ஆதாரமுமே இல்லை. அவருக்கு இத்தனை சதவீதம் வாக்கு வங்கி இருக்கிறது என சொல்ல முடியாது. அதனால அது திமுகவுக்கு எதிராக போகும் என நினைக்க வேண்டிய அவசியம் இல்லை.

மதச்சார்பின்மை- ஆன்மீகம்

மதச்சார்பின்மை- ஆன்மீகம்

ரஜினிகாந்த் ஜாதியற்ற, மதசார்பற்ற, ஆன்மீக அரசியல் என்கிறார். திமுகவைப் பொறுத்தவரை மதசார்பற்ற அரசியலை நடத்துகிறது. ஆனால் மதசார்பற்ற - ஆன்மீக அரசியல் என்பது இரண்டும் முரண்பாடானது. மதச்சார்பற்றது என்பது ஆன்மீகத்துக்கு எதிரானது. ஆனால் ஆன்மீகம் என்று சொன்னால் அது மதத்துடன் சம்பந்தப்பட்டது. ஆகையால் மதச்சார்பற்ற ஆன்மீகம் என்று எப்படி சொல்ல முடியும்? ஆன்மீகம் என்பதே மதச்சார்பற்றது என்கிற விளக்கத்தை சொல்லி மக்களை தயார்படுத்தவே 25 ஆண்டுகளாகும். ஆன்மீகமும் மதமும் பிரிக்க முடியாதது என்பதுதான் இன்றைய மக்கள் மனதில் ஆழமாக பதிந்து இருக்கக் கூடியது. அது சரியா? தவறா? என்கிற விவாதத்துக்குள் போகவில்லை. மதம்தான் ஆன்மீகத்தோடு தொடர்புடையது; ஆன்மீகம்தான் மதத்தோடு தொடர்புடையது என்பது மக்களின் மனதில் பதிந்த ஒன்று.

ரிஷிகேஷுக்கு ஏன் போறீங்க?

ரிஷிகேஷுக்கு ஏன் போறீங்க?

நீங்கள் மதத்தை எல்லாம் எடுத்துவிட்டு ஆன்மீகம் என்று சொன்னால் அவர் ஏன் ரிஷிகேஷுக்கு போகிறார் என தெரியவில்லை? எங்கேயும் போகமாட்டேன்.. ஆன்மீகம் உள்ளத்தில் இருக்கிறது என்றும் உள்ளம் பெருங்கோவில் என்றும் சித்தர்கள் சொல்லி இருக்கிறார்கள். உள்ளம் பெருங்கோவில் என்கிற சித்தர்களின் ஆன்மீகத்தை ரஜினிகாந்த் சொல்லவில்லை. இவர் சொல்கிற ஆன்மீகம் வேற ஆன்மீகம். ரிஷிகேஷத்துக்கு போய்விட்டு வந்து ஆன்மீகம் என்று சொல்வதும் மதசார்பற்ற அரசியல் என்று சொல்வதும் சுயமுரண்பாடாகும்.

பாஜக பின்னணியா?

பாஜக பின்னணியா?

வலதுசாரிகள் அனைவரும் ரஜினி வருகையை ஆதரிக்கிறார்கள் எனில் ரஜினிகாந்தால் எப்படி மதசார்பற்ற அரசியலை முன்னெடுக்க முடியும்? வலதுசாரிகள் எப்படி மதச்சார்பின்மையானவர்களாக இருக்க முடியும்? அதற்கு வாய்ப்பே இல்லையே.. வலதுசாரிகள் ஒருபோதும் மதச்சார்பற்ற சக்திகளாக இருக்க முடியாது. ரஜினிகாந்துக்கு பின்னால் பாஜக இருக்கிறதா? என்பது பற்றி இப்போது கருத்து சொல்வது சரியான தருணம் அல்ல. அதற்காக கருத்து சொல்ல தயங்குகிறேன் என்பது அல்ல. ரஜினிகாந்த் தனது கட்சி கோட்பாடுகளை கொண்டுவரட்டும். அப்புறம் அதுபற்றி விவாதிப்போம். ரஜினி- அதிமுக கூட்டணி அமைந்தால் அதுபற்றி பேசுவோம்.

மக்கள் கோபத்தை காட்டுவார்கள்

மக்கள் கோபத்தை காட்டுவார்கள்

திமுக ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்பது மக்களுக்கு தெரியும். திமுக ஆட்சிக்கு வரவேண்டும் என்று விரும்புகிற மக்களுக்கு, திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என யார் யாரெல்லாம் விரும்புகிறார்கள் என்பதும் தெரியும். இப்போது தேர்தல் அறிவிக்காததால் அவர்கள் அமைதியான பார்வையாளர்களாக தெரிகிறார்கள். லோக்சபா தேர்தலில் திமுக 39 இடங்களில் வெல்லும் என எந்த ஊடகமும் சொல்லவில்லை. ஆனால் மக்கள் நடக்கின்ற நிகழ்வுகளை பார்த்து கொண்டு உள்வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். இப்போது அமைதியாக இருக்கிறார்கள். எப்போது கோபத்தை காட்ட வேண்டுமோ அப்போது காட்டுவார்கள். இவ்வாறு ஆ. ராசா கூறினார்.

English summary
DMK Deputy General Secretary A Raja has questioned over the Actor Rajinikanth's Secular and Spiritual Politics.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X