“கொஞ்ச நாள் கம்முனு இருங்க.. அவர் பார்த்துக்குவாரு” - மேயர் பிரியாவுக்கு பறந்த உத்தரவு!
சென்னை: சென்னை மேயர் பிரியா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியதால், அவர் கவனமாகப் பேசும்படியும், விஷயம் தெரியவில்லை என்றால் துணை மேயரை பேசச் சொல்லவும் திமுக தலைமை அறிவுறுத்தியுள்ளதாம்.
சென்னை மேயர் பிரியா சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், கடந்த ஆட்சியில் துவங்கப்பட்ட அம்மா உணவகங்கள் பல இடங்களில் பயன்பாடின்றி பூட்டிக் கிடக்கின்றன எனத் தெரிவித்தார்.
அம்மா உணவகங்கள் மூடப்படாது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து வரும் நிலையில், சென்னை மேயரின் இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியதால் கட்சித் தலைமை அதிருப்தி அடைந்துள்ளது.
நிறுத்துங்க! நிறுத்துங்க! சட்டென நின்ற மேயர் பிரியா! யோசித்த ககன் தீப்! அடுத்து நடந்ததுதான் ட்விஸ்ட்

சென்னை மேயர் பிரியா
சென்னை மாநகராட்சி மேயராக பலர் போட்டி போட்ட நேரத்தில், 28 வயது இளம் பெண்ணான பிரியா மேயராக அறிவிக்கப்பட்டார். பிரியா மேயராகப் பதவியேற்ற பின்னர் செய்தியாளர்களைச் சந்திக்கும் போதெல்லாம் அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்ட சீனியர்கள் அவருக்கு அருகிலேயே இருந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர். அமைச்சர் சேகர்பாபு ஒருமுறை, 'அவருக்கு பேச தெரியாது. அவர் ஒரு குழந்தை' எனத் தெரிவித்தார். மதிப்பிற்குரிய பதவியில் இருப்பவரை சேகர்பாபு இவ்வாறு குறிப்பிட்டது விவகாரமானது

சேகர்பாபு வருவதில்லை
இதையடுத்து, மேயர் பிரியாவுடன் செய்தியாளர் சந்திப்புகளுக்கு வருவதை பெரும்பாலும் தவிர்த்து வந்தார் அமைச்சர் சேகர்பாபு. தற்போது துணை மேயர் மகேஷ் குமார் செய்தியாளர்கள் சந்திப்பின்போது எப்போதும் உடன் இருந்து வருகிறார்.
மேயர் பிரியா செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும்போது, பல நேரங்களில் விஷயம் தெரியாமல் திணறி வருகிறார். இதனால் அவருக்கு அருகில் இருப்பவர்களே நெளிந்து வருகின்றனர்.

அம்மா உணவகம்
இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற மண்டல ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மேயர் பிரியா, கடந்த ஆட்சியில் துவங்கப்பட்ட அம்மா உணவகத்தை பெருந்தன்மையோடு நடத்தி வருகிறோம். பல இடங்களில் அம்மா உணவகங்கள் மக்கள் பயன்பாடின்றி பூட்டிக் கிடக்கின்றன எனத் தெரிவித்தார்.
அம்மா உணவகங்கள் மூடப்படாது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து வரும் நிலையில், மேயரின் இந்தப் பேச்சு அங்கிருந்தவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சமாளித்த துணை மேயர்
உடனடியாக சுதாரித்துக்கொண்ட துணை மேயர் மகேஷ் குமார், ஒரு அம்மா உணவகத்தால் மாநகராட்சிக்கு மாதத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. எனினும் தொடர்ந்து நடத்தப்படுகிறது எனக் கூறி சமாளித்தார்.
அம்மா உணவகம் பயன்படுத்தாமல் பூட்டிக் கிடப்பதாக, மேயர் பிரியா பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து கண்டனங்கள் எழுந்தன. இதுகுறித்த புகார் முதல்வர் ஸ்டாலினுக்கும் சென்றுள்ளது.

ஸ்டாலின் உத்தரவு
இதன் காரணமாக, மேயர் பிரியா தெரியாத விஷயங்கள் பற்றி பேசி சர்ச்சையில் சிக்கிக் கொள்ளக் கூடாது என்றும், முடிந்தவரை பத்திரிகையாளர் சந்திப்பை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அப்படியே செய்தியாளர்களை சந்திக்க நேரிட்டால், சரியாகத் தெரியாத விஷயங்கள் குறித்த கேள்விகளுக்கு துணை மேயர் மகேஷ் குமார் பதிலளிக்கட்டும் என்றும் உத்தரவு பறந்துள்ளதாம்.

மகேஷ் குமார்
ஏற்கனவே, மாநகராட்சி மேயர் செய்யவேண்டிய பணிகளை துணை மேயர் தான் கவனித்து வருவதாக கவுன்சிலர்களும், மாநகராட்சி அதிகாரிகளும் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பை மேனேஜ் செய்யும் பொறுப்பும் தற்போது துணை மேயர் மகேஷ் குமாருக்கே வழங்கப்பட்டுள்ளது மாநகராட்சி அதிகாரிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.