சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

என்னது மு.க.ஸ்டாலின் மிசா கைதியே இல்லையா? திமுக தலைமை விளக்கம்

Google Oneindia Tamil News

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிசா கைதி இல்லை என்கிற கருத்தில் தனியார் டிவி சேனல் நிகழ்ச்சி நடத்தியதற்கு அக்கட்சியின் செய்தித் தொடர்பு செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கை:

DMK condemns TV Channels remarks against MK Stalin

முன்னாள் அமைச்சர் திரு பொன்முடியிடம் "நேர்காணல்" ஒன்றை எடுத்து - அதில் "எமெர்ஜென்சியில் மு.க.ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்படவில்லை" என்று ஒரு பொய்த் தோற்றத்தை உருவாக்க தனியார் டிவி சேனல் முயற்சி செய்திருப்பதற்கு கடும் கண்டத்தை தெரிவித்துக் கொள்கிறேன். பத்திரிக்கை சுதந்திரத்தை பாழ்படுத்தும் நோக்கில்- தங்களது டி.வி. சார்ந்துள்ள பாரதீய ஜனதா கட்சிக்காக பிரச்சாரம் செய்கிறோம் என்று இறங்கி, ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக திராவிட முன்னேற்றக் கழகம் தனது ஆட்சியையும் இழந்து நடத்திய வரலாற்று சிறப்பு மிக்க போராட்டத்தை கொச்சைப்படுத்த முயன்றிருப்பது அருவருக்கத்தக்கது.

நெருக்கடி நிலைமை அத்துமீறல்கள் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஷா ஆணையம் முக்கியமாக அப்போது பிரதமராக இருந்த மறைந்த இந்திரா காந்தி அம்மையார் தலைமையிலான மத்திய அரசு நேரடியாக செய்த அதிகார துஷ்பிரயோகம் பற்றிய குறிப்பிட்ட புகார்களை (Specific Allegations) விசாரித்தது. அந்த அறிக்கை காணாமல் போய் விட்டது என்ற காரணத்தை முன் வைத்து இரா. செழியன் "Shah Commission of Inquiry- Lost and Regained" என்று ஒரு தொகுப்பை வெளியிட்டார்.

அப்படி வெளியிடப்பட்ட அந்த கமிஷன் அறிக்கையில் உள்ள மூன்றாவது மற்றும் இறுதி பகுதியின் பக்கம் 42-ல் "நெருக்கடி நிலைமையின் போது மிசாவின் கடுமையான தொடர் தாக்குதலுக்கு உள்ளானது தி.மு.க. அக்கட்சியைச் சேர்ந்த 400 பேருக்கு மேல் மிசாவில் கைது செய்யப்பட்டார்கள்." என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் ஒவ்வொரு பெயரையும் மாநில வாரியாக அந்த அறிக்கையில் இடம்பெறவில்லை என்பதைக் கூட படித்து அறிந்து கொள்ளாத அந்த நிருபர், வேண்டுமென்றே தி.மு.க.வின் ஜனநாயகத்திற்கு எதிரான துணிச்சலான போராட்டத்தில் ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்பட்டதையே இழிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருப்பது கடுமையான கண்டத்திற்குரியது.

மிசா காலத்தில் ஒருவரை மிசா சட்டத்தில்தான் கைது செய்வார்களே தவிர, "பொடா" சட்டத்திலா கைது செய்வார்கள்? இதுகூட தெரிந்து கொள்ளாத அவரெல்லாம் ஒரு நிருபரா? "பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபரையும் குறிப்பிட்டிருக்கும் அந்த அறிக்கையில் ஸ்டாலின் அவர்கள் மிசாவில் கைதானார் என்று குறிப்பிடப்படவில்லையே" என்று அந்த நிருபர் விதண்டவாதமாக ஒரு கேள்வியை எழுப்பியதில் அவரது உள்நோக்ககும், எந்த எஜமானர்களுக்காக அந்த கேள்வியை எழுப்பினார் என்பதும் புரிகிறது. சுதந்திரமாக கருத்துக்களை வெளியட வேண்டிய "மீடியா" ஒன்று இப்படி "Made in BJP"ஆக மாறுவது மிகுந்த வேதனையளிக்கிறது.

அந்த நிருபர் சுட்டிக்காட்டிய அதே புத்தகத்தின் பக்கம் 107-ல் மாநில வாரியாக கைது செய்யப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை பற்றிய விவரங்களை வெளியிடும் போது "தமிழ்நாடு" என்று குறிப்பிட்டு, "அரசியல் கைதிகளில் மிசாவின்கீழ் அதிகமாக கைது செய்யப்பட்டது தி.மு.க. மற்றும் அதன் துணை அமைப்புகளை சேர்ந்தவர்கள்தான் என்றும், அப்படி கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 419 பேர்" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைவிட மிசா கொடுமைக்குள்ளானது தி.மு.க.வும், அதன் தலைவர்கள்தான் என்பதற்கு வேறு என்ன உதாரணம் வேண்டும்? ஏன் ஸ்டாலின் அடைக்கப்பட்டிருந்த சென்னை மத்திய சிறையில் தி.மு.க.வினருக்கு நேர்ந்த மிசா சிறைக் கொடுமைகள் - அடக்குமுறைகள் குறித்து விசாரிக்க நீதியரசர் எம்.எம்.இஸ்மாயில் அவர்கள் தலைமையில் ஒரு தனி விசாரணை கமிஷனே அமைக்கப்பட்டது என்பதைக்கூட மறந்து இப்படியொரு உள்நோக்கம் கற்பிக்கும் பிரச்சாரத்தில் தனியார் டிவி ஈடுபட்டுள்ளது வருத்தத்திற்குரியது.

நாட்டில் பிரகடனப்படுத்தப்பட்ட நெருக்கடி நிலைமையை எதிர்த்து இந்தியாவிலேயே முதன் முதலில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானம் போட்ட தி.மு.க.வையும், ஜனநாயகத்தைப் பாதுகாக்க மிசா உள்ளிட்ட கொடுமையான சிறைவாசத்தை அனுபவித்து- சித்திரைவதைக்குள்ளான மு.க. ஸ்டாலின் மற்றும் திமுக முன்னோடிகளின் "மிசா வரலாற்றையும்" மறைக்க முயலும் புல்லுருவிகள் வரலாறு தெரியாத அப்பாவிகள். ஜனநாயகத்தை காக்க நடைபெற்ற போராட்டம் என்னவென்றே அறியாத பச்சிளங்குழந்தைகள்!

மு.க. ஸ்டாலின் உள்பட தி.மு.க.வின் சார்பில் மாவட்ட ரீதியாக மிசாவில் கைது செய்யப்பட்ட சிப்பாய்களின் பெயர்களையும் யாரேனும் அறிந்து கொள்ள வேண்டும் என்றால் தமிழகம் முழுவதும் உள்ள சிறைச்சாலை பதிவேடுகளை தாராளமாக படித்து தெரிந்து கொள்ளலாம். முக்கிய வரலாற்று சம்பவம் குறித்து பேட்டி எடுக்கும் முன்பு நிருபரோ அல்லது அந்த நிருபருக்கு இப்படி பேட்டி எடுக்கச் சொன்னவரோ அந்த பயிற்சியில் ஈடுபடலாம். அப்படியும் முடியாவிட்டால் - கருணாநிதியின் "நெஞ்சுக்கு நீதி" இரண்டாம் பாகத்தின் 527 முதல் 531 வரையுள்ள பக்கங்களை படித்துப் பார்த்தால் - சென்னை மாவட்டத்தின் மிசா பட்டியலில் மு.க.ஸ்டாலின் பெயரை கருணாநிதி குறிப்பிட்டிருப்பதையும், நெருக்கடி நிலைமை அமலில் இருந்த போது மிசாவில் கைது செய்யப்பட்ட அனைத்து தி.மு.க.வினரின் பெயர்களையும் தெரிந்து கொள்ளலாம். அதை விடுத்து "அரை வேக்காட்டு" தகவல்களை கையில் வைத்துக் கொண்டு - "ஆசைப்பட்ட கட்சிக்கு பிரச்சாரம்" செய்வதை தனியார் தொலைக்காட்சி ஈடுபடுவது பத்திரிக்கை சுதந்திரத்தை சுயநலத்திற்கு பயன்படுத்தும் செயல் என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இவ்வாறு இளங்கோவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

English summary
DMK Sporkesperson TKS Elangovan has condemned that Private TV Channel's comments against their President MK Stalin.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X