சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மத்திய அரசு பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27% இடஒதுக்கீட்டை 50% ஆக உயர்த்த திமுக கோரிக்கை

Google Oneindia Tamil News

சென்னை: மத்திய அரசு பணிகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27% இடஒதுக்கீட்டை 50% ஆக உயர்த்த வேண்டும் என்று திமுக பொதுக்குழு வலியுறுத்தியுள்ளது.

சென்னையில் இன்று நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் எட்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள 22 தேசிய மொழிகளையும் இந்தியாவின் ஆட்சி மொழியாக்குவது; நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் பெற்ற வாக்கு எண்ணிக்கையின் விகிதாச்சார அடிப்படையில் பிரதிநிதித்துவ முறையை (Proportional Representation) கொண்டுவருவது ;

அரசியல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எஞ்சிய அதிகாரங்கள் (Residuary Powers) அனைத்தும் தற்போது மத்திய அரசுக்கே உள்ள நிலையை மாற்றி, மாநில அரசுகள் சட்டங்களை இயற்றிக் கொள்ள வழிவகை செய்வது; நிதி, கல்வி, மான்யம், கடன் வழங்குதல் போன்றவற்றில் மத்திய அரசு கையாண்டு வரும் "பெரிய அண்ணன்" மனோபாவம் தவிர்க்கப்பட்டு, மாநிலங்களுக்கு உரிய அதிகாரங்களை வழங்குவது; உள்ளிட்டவற்றை நிறைவேற்றிடும் வகையில் தேவையான திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்று திமுக பொதுக்குழு மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறது.

மாநிலங்கள், மாவட்டங்களை நீக்கிவிட்டு 200 ஜன்பத்கள் உருவாக்கும் முயற்சியை கைவிட திமுக வலியுறுத்தல்மாநிலங்கள், மாவட்டங்களை நீக்கிவிட்டு 200 ஜன்பத்கள் உருவாக்கும் முயற்சியை கைவிட திமுக வலியுறுத்தல்

10% இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு

10% இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு

திராவிட முன்னேற்றக் கழகத்தின் மற்றொரு தலையாய கொள்கை "சமூக நீதி" யாகும். சமூகநீதியைப் பெறுவதிலும், பெற்ற சமூக நீதியைக் காப்பதிலும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தனித்த, தொடர்ச்சியான அரசியல் போராட்ட வரலாறு உண்டு. சமூக நிலையிலும், கல்வியிலும், பின்தங்கியுள்ள தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அரசியல் சட்டத்தில் உறுதியளிக்கப்பட்டு, நடைமுறையில் இருந்து வரும் இடஒதுக்கீட்டுக் கொள்கையில் "பொருளாதாரத்தில் பின்தங்கிய இதர வகுப்பினர்'' என்று புதிதாக ஒரு வரையறையை ஏற்படுத்தி, இடஒதுக்கீட்டுக் கொள்கையையே நீர்த்துப் போகச் செய்கின்ற செயலை மத்திய அரசு அண்மையில் அரசியல் சட்டத்திருத்த வாயிலாக மேற்கொண்டுள்ளதை இந்தப் பொதுக்குழு வன்மையாகக் கண்டிப்பதுடன், அந்தத் திருத்தத்தை திரும்பப் பெற வேண்டுமென்று வலியுறுத்துகிறது.

ஓபிசி- 50% இடஒதுக்கீடு

ஓபிசி- 50% இடஒதுக்கீடு

பிற்படுத்தப்பட்டோர்க்கு வழங்கப்பட வேண்டிய 27 சதவிகித ஒதுக்கீடும், தாழ்த்தப்பட்டோர் - பழங்குடியினர்க்கான 22.5 சதவிகித ஒதுக்கீடும் மத்திய அரசு முழுமையாகச் செயல்படத்திடவில்லை. எனவே, சமூகநீதியின் இந்தக் குறைபாடு துடைக்கப்பட வேண்டும் என்றும்; நிரப்பப்படாத சதவிகிதப் பணி இடங்களை முன்கொணர்ந்து நிரப்பவும் (Carry Forward) கொள்கை முடிவெடுக்க வேண்டும் என்றும்; நாட்டில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மக்கள் தொகையைக் கருத்தில் கொண்டு, தற்போதுள்ள 27 சதவிகித இடஒதுக்கீட்டை 50 சதவிகிதமாக உயர்த்தி நியாயம் வழங்கிட வேண்டும் என்றும்; இந்தப் பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தனியார் துறை இடஒதுக்கீடு

தனியார் துறை இடஒதுக்கீடு

மேலும், அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் அளித்திடும் வேலைவாய்ப்புகள் இன்றைய நிலையில் வெகுவாகக் குறைந்துவிட்டன. பொதுத்துறை நிறுவனங்களும் படிப்படியாக தனியார் மயமாக்கப்பட்டு வரும் நிலையில், தனியார் துறையிலும் இடஒதுக்கீடு செய்திட வேண்டியது கட்டாயமாகிறது. அதுவே, சமூகநீதியின் சரியான பாதையாக இருக்கும். இதுபோன்ற உறுதியான செயல்திட்டம் ஏற்கனவே அமெரிக்காவில் உள்ளது என்பதும் குறிப்பிடத் தக்கதாகும். எனவே, தனியார் துறையிலும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு முறையை அமல்படுத்த ஏதுவாக அரசியல் சட்டப்பிரிவுகளில் உரிய திருத்தங்களைக் கொண்டு வந்து சமூகநீதியைக் காப்பாற்ற மத்திய அரசு முன்வர வேண்டுமென்று இப்பொதுக்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

தமிழக இளைஞர்களுக்கு வாய்ப்பு

தமிழக இளைஞர்களுக்கு வாய்ப்பு

வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து விட்டு 80 லட்சம் தமிழக இளைஞர்கள் பல ஆண்டுகளாக காத்திருந்து சோர்வடைந்திருக்கின்ற நிலையில், மாநிலத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களிலும், அதன் பொதுத்துறை நிறுவனங்களிலும் வடமாநிலத்தவருக்கு அத்தனை வேலைவாய்ப்புகளையும் வாரி வழங்கிவரும் பச்சை துரோகத்திற்கு இந்த பொதுக்குழு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களிலும், இதர மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களிலும் 90 சதவீதத்திற்குக் குறையாமல் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கட்டாயம் அளிக்கப்பட வேண்டும் என்றும், மத்திய அரசுப் பணிகளுக்கு நடத்தப்படும் எழுத்து மற்றும் நேர்முகத்தேர்வுகள் தமிழில் நடத்தப்பட வேண்டும் என்றும், மத்திய பா.ஜ.க. அரசை இந்த பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

கீழடி சான்றுகள்

கீழடி சான்றுகள்

சிவகங்கை மாவட்டம், வைகை ஆற்றுப் படுகையின் தென் பகுதியில் அமைந்துள்ள கீழடி கிராமப் பகுதியில், இதுவரையில் நடத்தப்பட்ட தொல்லியியல் அகழ்வாய்வுகளில், ஆயிரக்கணக்கான சான்றுப் பொருள்கள் கிடைத்துள்ளன. இந்தப் பகுதி "தொன்மையான நகர நாகரீகத்தின் அடையாளங்களுடன் உள்ளது" என ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். இந்தப் பொருட்களை கார்பன் பரிசோதனைக்கு அனுப்பி ஆய்வு செய்தபோது, 2600 ஆண்டுகளுக்கு முந்தைய தடயங்களும், சான்று பொருட்களும் கிடைத்துள்ளதாக தொல்லியியல் ஆய்வறிஞர்கள் தெரிவித்துள்ளார்கள். இதனுடைய தொன்மை கி.மு. 6ஆம் நூற்றாண்டுக்கு முந்தையதாக இருக்க வேண்டும் என்று அறிஞர்கள் கருதுகிறார்கள்.

6-ம் கட்ட அகழாய்வுகள்

6-ம் கட்ட அகழாய்வுகள்

வெளிநாடுகளோடு இங்கு வணிக தொடர்பு இருந்தமைக்கான தரவுகளும், சான்றுப் பொருட்களும் கிடைத்துள்ளன. இந்தப் பொருட்களை காட்சிப்படுத்துவதற்கு அங்கேயே அருங்காட்சியகம் அமைக்கப்படுமென்று தற்போது தமிழக அரசு அறிவித்த போதிலும், அந்தப் பணிகளைத் தீவிரப்படுத்தி, 6-வது கட்டப் பணிகளும் உடனே மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதோடு, அருகிலே உள்ள கிராமங்களான கொந்தகை, மாரநாடு, அகரம் ஆகிய பகுதிகளிலும் அகழ்வாய்வு நடத்தப்பட வேண்டுமென்கிற தொல்லியல் ஆய்வாளர்களின் கருத்தின் அடிப்படையில், அங்கும் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று இப்பொதுக்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

புதிய கல்வி கொள்கை

புதிய கல்வி கொள்கை

புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவு என்பது, இந்தி, சமஸ்கிருதத்தை திணிக்கின்ற முயற்சியாகவும், ஆழப் புதைக்கப்பட்டுவிட்ட குலக்கல்வித் திட்டத்தைத் தோண்டியெடுத்த மீண்டும் புத்துயிர் கொடுக்கின்ற வகையிலும், அறிக்கையின் ஷரத்துக்கள் அமைந்திருக்கின்ற காரணத்தால், அந்த அறிக்கை விரிவாக ஆய்வு செய்யப்பட வேண்டுமென 10 பேர் கொண்ட ஒரு குழுவினை ஸ்டாலின் அமைத்தார். அந்தக் குழுவின் அறிக்கை, மு.க.ஸ்டாலினிடம் 26.7.2019ல் அளிக்கப்பட்டது. ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, அந்த அறிக்கையினை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சரிடம் கழக நாடாளுமன்றக் குழு துணைத் தலைவர் கனிமொழி, எம்.பி., தலைமையில் நாடாளுமன்ற மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் வழங்கியிருக்கின்றனர்.

அதிகாரங்கள் பறிப்பு

அதிகாரங்கள் பறிப்பு

மேலும் புதிய தேசிய கல்விக் கொள்கை பிற்போக்குத்தனமானது; அரசியல் அமைப்புச் சட்டத்திற்கும், கூட்டாட்சித் தத்துவத்திற்கும், சமூகநீதிக்கும் சமத்துவத்திற்கும் எதிரானது; இந்தியாவின் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கான கருத்துகளை இவ்வறிக்கை பரிந்துரைக்கவில்லை; மாநில அரசிடம் உள்ள கல்வி தொடர்பான அதிகாரங்களை முழுமையாக ஆக்கிரமித்து மத்திய அரசிற்கு மடை மாற்ற முயற்சிக்கிறது; கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கு இதனால் எந்தவிதமான பயனும் ஏற்படப் போவதில்லை. எனவே இந்த தேசிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கையை திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் இதுவரையிலும் மத்திய அரசு அறிவித்த தேசிய கல்விக் கொள்கையில் எந்தவிதமான மறுபரிசீலனையும் மாற்றங்களும் செய்ததாகத் தெரியவில்லை. திராவிட முன்னேற்றக் கழகம், இந்த வரைவு அறிக்கையை ஏற்றுக் கொள்ளாது என்று பிரகடனம் செய்வதோடு; பொதுப்பட்டியலில் உள்ள கல்விக்கான அதிகாரத்தை மாநிலப் பட்டியலுக்கு உடனடியாக மாற்றிட வேண்டுமென இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது,

இவ்வாறு திமுக பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

English summary
DMK general council has demanded that Centre should increase the OBC Reservation from 27% to 50%.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X