கருணாநிதியின் 99-வது பிறந்தநாள்! பட்டிதொட்டியெங்கும் கோலாகல விழா! திமுக மாவட்டச் செயலாளர்கள் முடிவு!
சென்னை: கருணாநிதியின் 99-வது பிறந்தநாளை தமிழகம் முழுவதும் பட்டிதொட்டியெங்கும் சிறப்பாக கொண்டாடுவது என திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்து அந்தக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அந்த தீர்மானங்களின் விவரம் வருமாறு;
ரூ.1.17 கோடியில் 16 அடி உயர கருணாநிதி கம்பீர சிலை! சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?

அளவில்லா மகிழ்ச்சி
இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, கலைஞரின் ன் திருவுருவச் சிலையினைத் திறந்து வைக்கும் பெருமைமிகு நிகழ்வுக்கு, கழக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிக்கிறது. 6-வது முறையாக கழக ஆட்சி அமைந்திடவும், கலைஞரின் முழு உருவச் சிலையினை அரசின் சார்பில் நிறுவிடவும் உழைத்து, ஓராண்டு சாதனைகளால், இந்திய மாநிலங்களின் முதலமைச்சர்களில் முதன்மை இடத்தைப் பிடித்துள்ள மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்டுகளைத் தெரிவித்து இந்தக் கூட்டம் அளவிலா மகிழ்ச்சி அடைகிறது

ஸ்டாலினுக்கு நன்றி
கலைஞர் அவர்களின் பிறந்தநாளான ஜூன் 3-ஆம் நாள், தமிழ்நாட்டு வரலாற்றில் முக்கிய இடம் பெறத்தக்க வகையில், அரசு விழாவாகக் கொண்டாட ஆணையிட்ட கழகத் தலைவரும் தமிழ்நாட்டின் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, கழக மாவட்டச் செயலாளர்களின் இந்தக் கூட்டம் நன்றி நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

சிறப்பாக விழா
கலைஞர் அவர்களின் பிறந்தநாளையொட்டி, மாவட்டக் கழகங்கள் தொடங்கி ஒன்றிய - நகர - பேரூர் - பகுதி - வட்ட - கிளைக் கழகங்கள் வரை, அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி புகழ் வணக்கம் செலுத்தி, கழகக் கொடியேற்று விழாவையும், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவையும் சிறப்பாக நடத்துவது என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

கோபாலபுரம் நோக்கி
தேர்தல் களத்தினை 13 முறை எதிர்கொண்டு, நின்ற தொகுதிகள் அனைத்திலும் வென்று, 5 முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்து,
19 ஆண்டுகள் ஆட்சிப் புரிந்து, தமிழ்நாட்டை நயமாகச் செதுக்கிய ‘நவீனத் தமிழ்நாட்டின் தந்தையாகத்' திகழ்ந்தவர். இந்திய ஒன்றியத்தில் அரசியலில் நெருக்கடிகள் ஏற்பட்ட சூழல்களின் போதெல்லாம், டெல்லிப்பட்டணத்தின் பார்வை கோபாலபுரம் நோக்கியே திரும்பியிருக்கிறது என்பது கடந்தகால வரலாறு.

ஜனாதிபதிகள்
பல குடியரசுத் தலைவர்களையும், பிரதமர்களையும் தேர்வு செய்வதில் முக்கிய பங்காற்றி, சமூகநீதிக் கொள்கையை இந்தியாவின் அரசியல் - சமுதாயக் கொள்கையாக நிலைநிறுத்தியவர் கலைஞர். இவ்வாறு கருணாநிதியை புகழ்ந்து திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் வாசிக்கப்பட்டது.