அப்படி ட்வீட் போட்டுட்டு நேரா இங்கதான்..? - வெங்கையா நாயுடுவால் ‘தர்ம சங்கடத்தில்’ திமுக தலைமை!
சென்னை : கருணாநிதி சிலையை இன்று திறந்து வைக்க இருக்கும் குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு, சாவர்க்கர் குறித்து இன்று ட்வீட் செய்துள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது.
திராவிடக் கட்சித் தலைவரான கருணாநிதியின் சிலையை பாஜக தலைவராக இருந்த வெங்கையா நாயுடுவை வைத்து திறப்பது தொடர்பாக திமுக விமர்சனங்களை எதிர்கொண்டது.
இந்நிலையில், இன்று மாலை கருணாநிதியின் சிலையை திறந்து வைக்கும் வெங்கையா நாயுடு தொடர்பாக இன்னொரு அதிருப்தியும் திமுகவினர் மத்தியில் கிளம்பியுள்ளது.
கருணாநிதி சிலை இன்று திறப்பு.. குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைக்கிறார்.. திமுக குஷி

கருணாநிதி சிலை
மறைந்த தி.மு.க தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு, தமிழக அரசு சார்பில், சென்னை அண்ணா சாலை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் ரூ. 1.70 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. 16 அடி உயரத்தில் அமையும் இந்த சிலைக்கான பீடம் 12 அடி உயரத்தில் உருவாக்கப்பட்டு உள்ளது. சிலையை சுற்றி மெழுகுப்பூச்சுடன் கூடிய கருங்கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.

வெங்கையா நாயுடு
கருணாநிதி சிலை திறப்பு விழா இன்று மாலை 5:30 மணிக்கு நடக்கிறது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடக்கும் இந்த சிலை திறப்பு விழாவில், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, கருணாநிதியின் சிலையைத் திறந்து வைக்க உள்ளார். பின்னர், கலைவாணர் அரங்கில் நடைபெறும் விழாவில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பேச உள்ளனர்.

விமர்சனங்கள்
திராவிடக் கட்சித் தலைவரான கருணாநிதியின் சிலையை பாஜக தலைவராக இருந்த வெங்கையா நாயுடுவை வைத்து திறப்பது தொடர்பாக திமுக விமர்சனங்களை எதிர்கொண்டது. திருவாரூரில் கருணாநிதியின் பெயரை தெருவுக்கு சூட்டுவதற்கு எதிராக பெரிய போராட்டத்தை நடத்தி அந்த முயற்சியையே பின்வாங்க வைத்தது பாஜக. அப்படிப்பட்ட பாஜகவின் முன்னாள் தலைவரை ஏன் கருணாநிதி சிலை திறப்புக்கு அழைக்க வேண்டும் என அக்கட்சியின் தொண்டர்களே ஆதங்கப்பட்டனர்.

கூட்டணிக்கு அச்சாரமா?
அரசியல் களத்தில் திமுகவும் பாஜகவும் பரம எதிரிகளாக உள்ள நிலையில், கருணாநிதியின் சிலை திறப்புக்கு திமுக, வெங்கையா நாயுடுவை அழைத்திருப்பது பல்வேறு யூகங்களையும் கிளப்பியுள்ளது. நீட் தேர்வு விலக்கு போன்ற விஷயங்களில் மத்திய பாஜக அரசின் ஆதரவு தேவை என்பதற்காக, கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்கு வெங்கையா நாயுடுவை அழைத்து சமாதானம் பேச முயல்கிறதா திமுக என்றும் பலர் கேள்வி எழுப்பி வந்தனர்.

மீண்டும் சர்ச்சை
இந்நிலையில், இன்று மாலை கருணாநிதியின் சிலையை திறந்து வைக்கும் வெங்கையா நாயுடு தொடர்பாக இன்னொரு அதிருப்தியும் திமுகவினர் மத்தியில் கிளம்பியுள்ளது. அதற்குக் காரணம் அவர் இன்று பதிவிட்டுள்ள ட்வீட் தான். ஆர்.எஸ்.எஸ் தலைவரான சாவர்க்கரின் பிறந்தநாளான இன்று அவரைப் புகழ்ந்து ட்விட்டரில் பதிவு செய்துள்ளார் துணை குடியரசு தலைவர் வெங்கயா நாயுடு

வீர் சாவர்க்கர்
சாவர்க்கரின் தளர்வுறாத மனப்பான்மையும், தாய்நாட்டின் மீதான அவரின் நிலையான அன்பும் ஒவ்வொரு இந்தியருக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கிறது. சமூக நல்லிணக்கத்தைக் கொண்டுவரவும், சாதிவெறி மற்றும் தீண்டாமை போன்ற தீமைகளை வேரறுக்கவும் வீர் சாவர்க்கர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டார் என ட்வீட் செய்துள்ளார் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு.

ட்வீட் செய்துவிட்டு நேராக
ஆர்.எஸ்.எஸ், பாஜகவினர் கொண்டாடும் தலைவரான சாவர்க்கரை வாழ்த்தி ட்வீட் செய்துவிட்டு, அவரை கடுமையாக விமர்சிக்கும் திமுகவின் தலைவர் கருணாநிதி சிலையை திறந்து வைக்க வருகிறார் வெங்கையா நாயுடு என சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் கிளம்பியுள்ளன. இதனால், திமுகவினர் தர்மசங்கடத்திற்கு ஆளாகியுள்ளனர்.