பாஜகவுக்கு அதிமுக 20- அப்ப காங்-க்கு 18 போதுமே... திமுகவுக்கு பி.கே. அட்வைஸ்.. கதறும் கதர் தலைகள்
சென்னை: அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 இடங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதால் திமுக கூட்டணியிலும் காங்கிரசுக்கு 18 அல்லது 20 சீட்டுகள் ஒதுக்கப்படும் என அறிவாலயம் தரப்பில் காங்கிரசிடம் தெரிவிக்கப் பட்டிருக்கிறதாம்.
காங்கிரஸ் செயற்குழுவில், திமுக நடத்தும் விதம் குறித்து ஆதங்கப்பட்டு பேசிய கே.எஸ்.அழகிரி, ஒவ்வொரு தேர்தலில் போதும் காங்கிரஸ் போட்டியிடும் இடங்கள் குறைந்து கொண்டே போனால் விரைவில் காங்கிரஸ் கட்சி அழிந்து விடும் என கண்ணீர்விட்டார். திமுக சார்பு நிலை உள்ள கே.எஸ். அழகிரியே, இப்படி ஆதங்கப்பட்டு கண்ணீர் சிந்தியதை சீனியர் நிர்வாகிகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லையாம்.
குறைந்த எண்ணிக்கையில் சீட்டுகளை வாங்கி போட்டியிடும் பொழப்பு நமக்கும் வேண்டாம் தலைவரே ! 35 சீட் கொடுக்கிறார்களா என பாருங்கள். முடியாது என சொன்னால் கூட்டணியே வேண்டாம் என உதறிவிட்டு வாருங்கள். எந்த முடிவையும் எடுக்கும் அதிகாரத்தை இந்த செயற்குழு உங்களுக்கு தருகிறது என்றனர் செயற்குழு உறுப்பினர்களான மாவட்ட தலைவர்கள்.

திமுக நிலவரம்
இந்த சூழலில், ஒரு கட்டத்தில் 27 வரை காங்கிரசுக்கு தரலாமா ? என்கிற ஆலோசனையை திமுகவின் பேச்சுவார்த்தை குழுவினரிடம் மு.க.ஸ்டாலின் நடத்தியிருந்தார். ஆனால் குழுவினரோ, பிரசாந்த் கிஷோரிடம் கேட்டுப்பாருங்க; அவரது யோசனையின் படியே செய்யலாம் என ஜகா வாங்கியிருக்கிறார்கள்.

பாஜகவுக்கு 20 சீட்ட்டுகள்
இந்த நிலையில், தற்போது அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 இடங்கள் கிடைத்திருப்பதால் அதே எண்ணிக்கையை காங்கிரசுக்கு ஒதுக்க முடிவு செய்து அதனை டி.ஆர்.பாலுவிடம் தெரிவித்துள்ளாராம் ஸ்டாலின்.

18 முதல் 20 சீட்
இதற்கிடையே, காங்கிரசுக்கு 18 இடங்கள் போதும் ; கெஞ்சினால் 20 சீட்டுக்கு ஒப்புக்கொள்ளலாம். இதற்கு காங்கிரஸ் ஒப்புக்கொள்ள வில்லையெனில் காங்கிரசை கழட்டி விடுங்கள். காங்கிரஸ் இல்லாமலே திமுக 160 இடங்களை ஜெயிக்கும் என ஸ்டாலினிடம் சொல்லியுள்ளார் பிரசாந்த் கிஷோர் என்பதாக அறிவாலயத் தரப்பில் சொல்கின்றனர்.

சோனியா ஒப்புதல்
திமுக-காங்கிரசுக்கு இடையே இன்று நடக்கும் மூன்றாம் கட்ட பேச்சு வார்த்தையில் காங்கிரசை எந்த வகையில் திமுக கையாளுகிறது என்பதை பொறுத்தே காங்கிரசின் முடிவு இருக்கும் என்கிறார்கள். அதேசமயம், எந்த எண்ணிக்கையை திமுக கொடுத்தாலும் அதனை ஏற்கும் முடிவில் சோனியாவை சில மூத்த தலைவர்கள் சம்மதிக்க வைத்திருக்கிறார்கள்.

சத்தியமூர்த்தி பவனில் கலகக் குரல்
ஆனால், கட்சியின் மூத்த நிர்வாகிகள் இதை ஏற்க கூடாது என இப்போதும் கொடி பிடித்து வருகிறார்கள். இதனால் சத்தியமூர்த்தி பவனில் வருத்தமும் கவலையும் கோபமும் மாறி மாறி அலை அடித்துக் கொண்டிருக்கிறது.