"இதோ, இந்த முகத்தை பார்க்கதான் 5 கிலோமீட்டர் நடந்தே வந்தேன்".. மகிழ்ந்த நாகம்மாள்.. பூரித்த ஸ்டாலின்
சென்னை: "உங்களை நேரில் பார்க்கவே 5 கிலோ மீட்டர் நடந்து வந்தேன்.. என்று நாகம்மாள் சொல்ல சொல்ல பூரித்து போய்விட்டார் திமுக தலைவர் ஸ்டாலின்.
இன்று திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள், புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் - ஊனையூர் கிராமத்தில், "உங்கள் தொகுதியில் ஸ்டாலின்" என்ற மக்களின் குறைகேட்கும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.. மக்கள் தந்த மனுவையும் பெற்று கொண்டார்.. அவர்களின் குறைகளையும் நேரில் கேட்டறிந்தார்.
அப்போதுதான் நாகம்மாளை சந்தித்தார் ஸ்டாலின்.. சுதந்திரபுரம், கல்லூரைச் சேர்ந்தவர்தான் நாகம்மாள்.. 80 வயசு பாட்டி.. ஸ்டாலினை நேரில் பார்க்க வேண்டும் என்று 5 கிலோ மீட்டர் நடந்தே வந்தாராம்... ஸ்டாலின் அருகில் வந்த நாகம்மாள் பாட்டி, "இனி இந்த தமிழ்நாட்டின் முதலமைச்சராக நீங்கள்தான் எப்பவுமே இருக்க வேண்டும்" என்று மனசார வாழ்த்தினார்.

நிவர் புயல்
இப்படித்தான் சுப்பையா என்பவர் ஒரு கோரிக்கை வைத்திருந்தார்.. அவருடைய மகன் நிவர் புயல் காலத்தில் டிரான்ஸ்பார்மர் லைன் சரி செய்யும் போது இறந்துவிட்டாராம்.. ஆனால், இழப்பீடு யாரும் தரவில்லை என்று குறைபட்டு கொண்டார்.. உடனே ஸ்டாலின், "கவலைப்படாதீங்க.. அரசு செய்கிறதோ இல்லையோ நாங்கள் செய்கிறோம்.. இப்பவே இந்த நிகழ்ச்சியை அரசாங்கத்தினர் பார்த்துட்டு இருப்பாங்க.. கண்டிப்பா உதவி கிடைக்கும்.. இல்லாவிட்டாலும் நாங்க இருக்கோம்" என்றார்.

பெண்
பிறகு கூட்டத்தில் ஸ்டாலின் நடந்து வந்து கொண்டிருந்தபோதே ஒரு பெண் எதிரே வந்தார்.. அவர் தன் கையில் குழந்தை ரட்சிதாவை தூக்கி கொண்டு வந்து, மருத்துவ உதவி கேட்டார்.. உடனே ஸ்டாலின், "கவலைப்படாதே சகோதரி, நம்ம எம்எல்ஏ மெய்யநாதன், குழந்தைக்கு வேண்டிய உதவிகளை நிச்சயமாக செய்து கொடுப்பார்... கவலைப்படாதீங்க.. குழந்தை ரட்சிதாவுக்கு என்னென்ன மருந்து மாத்திரைகள் வாங்கி கொடுக்க வேண்டும்? என்ன நோய்க்கான சிகிச்சை பெற வேண்டும்? எல்லாத்தையும் மெய்யநாதன் பார்த்து கொள்வார்..' என்றார்.

பொய் பிரச்சாரம்
என் மீது நம்பிக்கை வைத்து நீங்கள் மனு கொடுத்துள்ளீர்கள்... ஆனால் பழனிசாமிக்கு இதைப் பார்த்தால் வயிற்றெரிச்சலாக இருக்கிறது... ஊர் ஊராகப் போய் புலம்பி வருகிறார். ''ஸ்டாலின் காது குத்துகிறார்" என்று பழனிசாமி சொல்லி இருக்கிறார். ''ஆட்சிக்கு வந்ததும் 100 நாளில் பிரச்னையை தீர்ப்போம் என்று காது குத்துகிறார்" என்று பழனிசாமி பேசி இருக்கிறார். பெரிய குத்து குத்தியதே பழனிசாமிதான்.. அதாவது, தமிழ்நாட்டு மக்களின் எல்லா வாக்குறுதிகளையும் தான் நிறைவேற்றிவிட்டதாகச் சொன்னதைப் போல இமாலயப் பொய் வேறு எதுவும் இருக்க முடியாது.

வெற்றி
நடக்கும் ஆட்சிக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்றால் இந்த புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் நீங்கள் ஒன்றிணைந்து, ஒருங்கிணைந்து, ஒற்றுமை உணர்வோடு, ஒருமித்த கருத்தோடு இந்த தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வழங்க வேண்டும் என்று ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.

செல்பி
இறுதியில் கூட்டத்தினருடன் சேர்ந்து ஸ்டாலின் செல்பி எடுத்து கொண்டார்.. வழக்கமாக செல்பி எடுக்க விரும்புவோர் செல்போனுடன் ஸ்டாலினை அணுகி போட்டோ எடுப்பார்கள்.. ஆனால் இந்த நிகழ்ச்சிகளில் ஸ்டாலினே செல்போனை பிடித்தபடி, மக்களுடன் சேர்ந்து செல்பி எடுத்தது செம்ம ஹைலைட்..!