சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மருத்துவப் படிப்புகளில் ஓ.பி.சி. இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு மறுப்பு: ஸ்டாலின், வைகோ சாடல்

Google Oneindia Tamil News

சென்னை: மருத்துவ படிப்புகளில் நடப்பாண்டில் ஓபிசி இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு மறுத்துள்ளதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இதர பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மற்றும் பழங்குடியின சமுதாயத்திற்கு, மத்திய அரசின் 49.5 சதவீத இடஒதுக்கீட்டினை பின்னப்படுத்தி, சிதைத்தெடுத்து, பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கியிருக்கும் மத்திய பா.ஜ.க. அரசின் அராஜக, சட்டவிரோதப் போக்கிற்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா, பஞ்சாப் மற்றும் சிந்த் வங்கி, யூகோ வங்கி ஆகியவற்றிற்கு வங்கி அதிகாரிகள் பணிக்கான தேர்வில், இடஒதுக்கீடு என்னும் பெயரில் இப்படியொரு மோசடியை, வங்கிப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்தியிருக்கிறது. சமூகநீதியைக் கிள்ளுக்கீரையை விடக் கீழானதாக நினைத்துப் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின சமுதாயத்தினருக்குத் தொடர்ந்து மத்திய அரசு கேடு விளைவித்து வருவதும், இடஒதுக்கீடு உரிமை படைத்த பெரும்பான்மை மக்களை எள்ளி நகையாடி வருவதும் மிகுந்த வேதனையளிக்கிறது.

மருத்துவ படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு 50% இடஒதுக்கீடு இந்த ஆண்டு வழங்க முடியாது - மத்திய அரசுமருத்துவ படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு 50% இடஒதுக்கீடு இந்த ஆண்டு வழங்க முடியாது - மத்திய அரசு

பாஜகவின் இடஒதுக்கீடு துரோகம்

பாஜகவின் இடஒதுக்கீடு துரோகம்

2019-ஆம் ஆண்டிற்கான இந்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினரை விடக் குறைந்த "கட் ஆப் மதிப்பெண்களை" பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு அளித்து - மற்ற சமுதாயங்கள் சார்பில் ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ் அதிகாரிகள் ஆவதை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் மத்திய பா.ஜ.க. அரசு தடுத்தது. அதற்கு முன்பு - பாரத ஸ்டேட் வங்கியின் பணியாளர் தேர்விலும் இடதுக்கீட்டுப் பிரிவினரைக் காட்டிலும் குறைவான "கட் ஆப்" மதிப்பெண்களை முன்னேறிய வகுப்பினருக்கு அளித்து - இளைஞர்களின் வேலை வாய்ப்புகளைக் கெடுத்தது. மத்திய சட்டப் பல்கலைக்கழகங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டினைக் கடைப்பிடிக்காமல்- பிற்படுத்தப்பட்ட சமுதாயம் அறிவுசார்ந்த வழக்கறிஞர்களாக, நீதிபதிகளாக - நீதித்துறையைச் சிறப்பிக்கும் வாய்ப்பினை திட்டமிட்டுத் தடுத்து வருகிறது.

இடஒதுக்கீட்டுக்கு எதிரான வஞ்சகம்

இடஒதுக்கீட்டுக்கு எதிரான வஞ்சகம்

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றமே தீர்ப்பளித்த பிறகும், அகில இந்தியத் தொகுப்புக்கு மாநிலங்களில் இருந்து ஒதுக்கப்படும் மருத்துவ மற்றும் மருத்துவ மேல்படிப்பிற்கான இடங்களில் 50 சதவீத இடஒதுக்கீடு மட்டுமல்ல - அந்த இடஒதுக்கீட்டைச் செயல்படுத்துவது குறித்த நடைமுறையை முடிவு செய்யும் வரை ஏற்கனவே இதர பிற்படுத்தப்பட்டோருக்கு உள்ள 27 சதவீத இடஒதுக்கீட்டைக் கூட இந்த ஆண்டு வழங்க முடியாது என இன்று உச்சநீதிமன்றத்தில் மத்திய பா.ஜ.க. அரசு பிடிவாதமாக வாதிட்டிருப்பது - சத்திய பிரமாண வாக்குமூலமாகவே தாக்கல் செய்து எதிர்த்திருப்பது, மத்திய அரசின் இடஒதுக்கீட்டிற்கு எதிரான வஞ்சக மனப்பான்மையைக் காட்டுகிறது.

இடஒதுக்கீடு மீது குறிவைத்து தாக்குதல்

இடஒதுக்கீடு மீது குறிவைத்து தாக்குதல்

பா.ஜ.க. மத்தியில் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, இடஒதுக்கீட்டுக் கொள்கை மீது குறி வைத்துத் தாக்குதல் நடத்தப்படுகிறது. பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின மக்களின் சமூகநீதி பறிக்கப்படுகிறது. இந்நாட்டின் முன்னேற்றத்தில் - நிர்வாகத்தில் அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை ஓரங்கட்டப்படுகிறது. தற்போதையை வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவன இடஒதுக்கீடு மோசடியைப் பொறுத்தவரை, "முதல் நிலைத் தேர்வு" மட்டுமே நடைபெற்று முடிந்திருக்கிறது. இன்னும் முதன்மைத் தேர்வும், நேர்முகத் தேர்வும் நடைபெறவில்லை. ஆகவே உடனடியாக மத்திய பா.ஜ.க. அரசு தலையிட்டு - 49.5 சதவீத இடஒதுக்கீட்டிலிருந்து 10 சதவீத இடஒதுக்கீட்டைப் பிய்த்துப் பிரித்துக் கொடுத்திருக்கும் வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனத்தின் முதன் நிலை தேர்வை ரத்து செய்து - புதிய தேர்வு அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின சமுதாயத்தினருக்கு உள்ள 49.5 சதவீத இடஒதுக்கீட்டிற்கு எந்த பாதகமும் விளைவிக்காத வகையில் புதிய பணியாளர் தேர்வு அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இதற்கான நடவடிக்கைகளை மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்! இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் ஏகப்பிரதிநிதி (OBC) என்று கூறிக் கொள்ளும் பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசில் பிற்படுத்தப்பட்டோரின் இடஒதுக்கீட்டினை, திட்டமிட்டுப் புறக்கணித்து - மண்டல் பரிந்துரையின் அடிப்படையில் மத்திய அரசின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 27 சதவீத இடஒதுக்கீட்டை முழுவதுமாக செயல்படுத்தாமல் - சமூகநீதியை சீர்குலைத்து வருவது வருத்தமளிக்கிறது. நாட்டின் பெரும்பான்மையான சமுதாயத்தின் சமூக நீதி உரிமையைப் பறிக்கும் மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்டோர் அமைப்புகளும், சமூகநீதியின் மீது அக்கறையுள்ள அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டிய தருணம் வேகமாக வந்து கொண்டிருக்கிறது என்று மத்திய பா.ஜ.க. அரசுக்கு எச்சரிக்க விரும்புகிறேன். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

சவக்குழியில் தள்ளிவிட்ட பாஜக

சவக்குழியில் தள்ளிவிட்ட பாஜக

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை: மருத்துவப் படிப்புக்கான இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகள், பல் மருத்துவ இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்புகளில் மாநிலங்களிலிருந்து மத்திய தொகுப்புக்குக் கடந்த 4 ஆண்டுகளில் மொத்தம் 42842 இடங்கள் அளிக்கப்பட்டு இருக்கின்றன. இதில் ஒரு இடம்கூட இதர பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கீடு செய்யாமல், மத்திய பா.ஜ.க. அரசு சமூக நீதியைச் சவக் குழியில் தள்ளி விட்டது. இந்நிலையில்தான் மருத்துவப் படிப்புகளில் மாநிலங்கள் மத்தியத் தொகுப்புக்கு வழங்கும் இடங்களில் பிற்படுததப்பட்டோருக்கு மத்திய அரசு அளிக்கும் 27 விழுக்காடு இடஒதுக்கீடு மற்றும் தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 50 விழுக்காடு ஓ.பி.சி. இட ஒதுக்கீட்டை நடப்பு ஆண்டிலேயே செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் விசாரணை நடைபெற்று வருகின்றது. இந்த வழக்கு விசாரணையில் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்துள்ள மனுவில், மருத்துவம் மற்றும் மருத்துவ மேற்படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மத்திய அரசு வழங்கும் 27 விழுக்காடு மற்றும் தமிழகத்தில் பின்பற்றப்படும் 50 விழுக்காடு இட ஒதுக்கீடு 2020 -21 நடப்புக் கல்வி ஆண்டில் வழங்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உரிய இடஒதுக்கீடு வழங்கிடுக

உரிய இடஒதுக்கீடு வழங்கிடுக

மருத்துவப் படிப்புக்கான இடஒதுக்கீடு தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்ற்த்தில் நிலுவையில் இருப்பதால், நடப்பு ஆண்டில் ஓ.பி.சி. இடஒதுக்கீடு வழங்க முடியாது என்று காரணம் கூறி உள்ள பா.ஜ.க. அரசு, நடப்பு ஆண்டில் வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் 1417 காலிப் பணியிடங்களை நிரப்பும்போது, பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராகவும் பல வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இருந்தபோதிலும் 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்குவதற்கு முனைந்து, முன்கூட்டியே அறிவிப்பாணை வெளியிட்டு இருக்கிறது. அகில இந்தியத் தொகுப்புக்கு மாநில அரசுகளால் வழங்கப்படும் மருத்துவக் கல்வி இடங்களில், ஓ.பி.சி. மாணவர்களுக்கு சட்ட ரீதியாகக் கிடைக்க வேண்டிய இடஒதுக்கீடு மறுக்கப்படுவது அநீதியாகும். பா.ஜ.க. அரசின் செயல்பாடு கடும் கண்டனத்துக்கு உரியதாகும். எனவே நடப்பு ஆண்டிலேயே மத்திய தொகுப்புக்கு அளிக்கப்படும் மருத்துவ இடங்களில், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு உரிய இடஒதுக்கீட்டை வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

English summary
DMK and MDMK had condemned on reduction OBC, SC and ST quota in Bank Jobs and OBC Reservation in Medical courses row.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X