“அந்த மனசுதான் சார்..” - கொடூரமாக சிதைக்கப்பட்டு உயிருக்குப் போராடும் சிறுமிக்கு உதவிய திமுக எம்.பி!
சென்னை: மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவருக்கு தருமபுரி தி.மு.க எம்.பி செந்தில்குமார் நிதியுதவி அளித்துள்ளார்.
ம.பியில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 11 வயது சிறுமிக்கு தி.மு.க எம்.பி செந்தில்குமார் ரூ. 1 லட்சம் நிதி வழங்கியுள்ளார்.
சிறுமிக்கு சிகிச்சையளிக்க அவரது பெற்றோர் பணமின்றி தவித்ததைக் கேள்விப்பட்டு மத்திய பிரதேசத்திற்கே நேரில் சென்று இந்த உதவியைச் செய்துள்ளார் செந்தில்குமார் எம்.பி.
Exclusive: திருச்சி சிவா மகன்.. பாஜக அடக்கி வாசிக்கனும்!

மத்திய பிரதேச சிறுமி
பா.ஜ.க ஆளும் மத்திய பிரதேச மாநிலம் கர்கோன் மாவட்டத்தின் மலார்கன்ச் கிராமத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமி கடந்த மாதம் வீட்டில் தனியாக இருந்தபோது, அதே கிராமத்தைச் சேர்ந்த தீபக் யாதவ் என்ற இளைஞன் வீடுபுகுந்து அந்தச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தான். இதில் அந்தச் சிறுமியின் பிறப்புறுப்பு கிழிந்தது. குடலுக்கும் பிறப்புறுக்கும் இடையே துளை ஏற்பட்டது. சிறுமியை கொடூரமாகச் சிதைத்த அந்த இளைஞன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்.

பாதிக்கப்பட்ட சிறுமி
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அந்த 11 வயது சிறுமி தற்போது உயிருக்குப் போராடி வருகிறார். அவருக்கு இந்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ரூ.5 லட்சம் செலவில் அறுவை சிகிச்சை நடந்துள்ளது.
சிறுமியைக் காப்பாற்ற அவரது பெற்றோர் வீட்டை விற்று மருத்துவமனைக்கு செலவு செய்துள்ளனர். தங்கள் குழந்தையின் சிகிச்சைக்கு உதவுமாறு அவர்கள் கர்கோன் மாவட்ட ஆட்சியரிடம் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், அவர் ரூ.50,000 மட்டுமே அளித்துள்ளார்.

சிறுமியை காப்பாற்ற
இதையடுத்து, பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமியைக் காப்பாற்ற உதவுங்கள் எனும் பதிவு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. இது தருமபுரி தி.மு.க எம்.பி செந்தில்குமாரின் கவனத்திற்கும் சென்றது.
இதையடுத்து அந்தச் சிறுமியின் மருத்துவ சிகிச்சைகாக நேரடியாக இந்தூருக்கே சென்று சிறுமியின் தாயாரிடம் ரூ. 1 லட்சத்தைக் கொடுத்துள்ளார் செந்தில் குமார்.

திமுக எம்.பி
இதுகுறித்துப் பேசியுள்ள செந்தில் குமார் எம்.பி, மத்திய பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு முறையான இலவச சிகிச்சை கிடைக்கவில்லை. இது எனது கவனத்திற்கு வந்ததால் மனிதாபிமான அடிப்படையில் உதவினேன். சிறுமிக்கு தொடர் சிகிச்சை தேவைப்பட்டால் சென்னையில் அல்லது டெல்லியில் பெரிய மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளிக்கவும் தயார் எனத் தெரிவித்துள்ளார். ம.பி சிறுமிக்கு தமிழக எம்.பி உதவிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.