முதல்வர் இன்றி சாத்தியமாகி இருக்காது.. மருத்துவத்தில் ஓபிசி இடஒதுக்கீடு.. எம்பி வில்சன் நெகிழ்ச்சி
சென்னை: மருத்துவ படிப்புகளில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான 27 சதவிகித இடஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது எப்படி, இதற்கான சட்ட போராட்டம் நடந்தது எப்படி என்று திமுக எம்பி வில்சன் தேசிய இணையக் கருத்தரங்கு ஒன்றில் பேசி இருக்கிறார். திமுக மூலம் இந்த சட்ட போராட்டம் முன்னெடுக்கப்பட்டது எப்படி என்று அவர் விளக்கி உள்ளார்.
மிக நீண்ட சட்ட போராட்டத்திற்கு பின் மருத்துவ படிப்புகளில் அகில இந்திய அளவில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான 27 சதவிகித இடஒதுக்கீட்டிற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டுமின்றி நாடு முழுக்க ஓபிசி பிரிவினர் இடையே இந்த தீர்ப்பு பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
திமுக எம்பி வழக்கறிஞர் வில்சன் மற்றும் திமுக வழக்கறிஞர் அணியின் இடைவிடாத சட்ட போராட்டம் காரணமாக இந்த இடஒதுக்கீடு கிடைத்துள்ளது. இந்த நிலையில் குடியரசுத் தினத்தை முன்னிட்டு இன்று 'சமூகநீதிப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லுதல்' என்ற தேசிய இணையக் கருத்தரங்கு நடத்தப்பட்டது.
24 குடும்பங்களை காத்த ஹீரோ.. திமுக வட்டசெயலாளருக்கு வழங்கப்பட்ட வீர தீர விருது.. ஏன் தெரியுமா?

கருத்தரங்கு
சமூகநீதிக்குத் திமுகவின் பங்களிப்பு குறித்து இதில் விவாதம் செய்யப்பட்டது. தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், திமுக எம்பி வில்சன், திக தலைவர் கி வீரமணி, ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். ஓபிசி இடஒதுக்கீட்டை உறுதி செய்ததற்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் ஏ.ஐ.பி.சி.எப், எஸ்.ஆர்.ஏ உள்ளிட்ட பல அமைப்புகள் மூலம் இந்த கருத்தரங்கு நடத்தப்பட்டது. பல்வேறு முற்போக்கு அமைப்புகள், சமூக நீதி அமைப்புகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டன.

எம்பி வில்சன்
ஓபிசி பிரிவினருக்கான 27 சதவிகித மருத்துவ இடஒதுக்கீடு சட்ட போராட்டம் குறித்து இந்த நிகழ்வில் திமுக எம்பி வில்சன் பேசினார். இந்த சட்ட போராட்டம் எப்படி நடந்தது என்று அவர் இந்த நிகழ்வில் விளக்கினார். அதில், மக்கள் அனைவருக்கும் சமமான உரிமை மற்றும் சமத்துவமான கல்வியை கொண்டு செல்வதன் மூலம் அவர்களை சமுதாயத்தில் மேலே கொண்டு வர முடியும் என்பதே திராவிட அரசியலின் கோட்பாடாக இருந்து வருகிறது. ஜாதி கொடுமைகளையும், தீண்டாமையையும் அகற்றினால் மட்டுமே இதை சாதிக்க முடியும் என்பதை திமுக உணர்ந்து கொண்டு செயலாற்றி வருகிறது

இடஒதுக்கீடு அவசியம்
அனைத்து படிநிலைகளிலும் இருக்கும் மக்களுக்கு கல்வி சேர வேண்டும் என்றால் அதற்கு இடஒதுக்கீடு அவசியம் என்பதை திமுகவை உணர்ந்து செயல்பட்டு வருகிறது. பல நூறு வருடங்களாக கல்வி கிடைக்காமல் இருந்தவர்களுக்கு முறையான இடஒதுக்கீடு கிடைக்க திமுக காரணமாக இருந்து வருகிறது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முறையான சமூக நீதி பின்பற்றுவதை திமுக தொடர்ந்து உறுதி செய்து வருகிறது. அனைத்து தரப்பினரும் அர்ச்சகர் ஆகும் திட்டம் தொடங்கி மூன்றாம் பாலினத்தவருக்கான நலத்திட்டங்கள் வரை அனைத்திலும் முதல்வர் ஸ்டாலின் நாடு முழுமைக்கும் முன்னோடியாக இருக்கிறார்.

ஸ்டாலின் முன்னோடி
தந்தை பெரியார் பிறந்த நாளை சமூக நீதி நாளாக அறிவித்ததும் முதல்வர் ஸ்டாலின்தான். ஒப்பிட்டு பார்க்க இயலாக அளவிற்கு முதல்வர் ஸ்டாலின் சமூக நீதி திட்டங்களை தொடங்கி வருகிறார். ஓபிசிக்கு மருத்துவ துறையில் இடஒதுக்கீடு கிடைக்க கூடாது என்பதில் மத்திய அரசு உறுதியாக இருந்தது. 4000 மருத்துவ மற்றும் 1000 பல் மருத்துவ இடங்களை ஒவ்வொரு வருடமும் இதனால் ஓபிசி பிரிவு மாணவர்கள் இழந்து வந்தனர்.

ஓபிசி பிரிவினர் இழப்பு
எம்பிபிஎஸ் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான இடங்களை ஓபிசி பிரிவினர் இழப்பதை அறிந்தபோது முதல்வர் மு.க. ஸ்டாலின் மக்கள் மன்றம், நாடாளுமன்றம், நீதிமன்றம் என மும்முனைகளில் அதற்கெதிராகப் போராட முடிவெடுத்தார். நான் ராஜ்ய சபா சென்றதும் என்னை மருத்துவ ஓபிசி இடஒதுக்கீடு பற்றி பேசும்படி முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். நானும் அவையில் இதை பற்றி 26-7-2019 அன்று பேசி தேசிய அளவில் இந்த விஷயத்தை கொண்டு சென்றோம்.

ஓபிசி பிரிவு இடஒதுக்கீடு
ஓபிசி பிரிவு இடஒதுக்கீடு குறித்து வெள்ளை அறிக்கை கேட்டு முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தார். இதற்கு மத்திய அரசு பதில் அளிக்காத நிலையில் நானும், திமுக எம்பி டிஆர் பாலு உள்ளிட்ட எம்பிக்கள் சிலரும் இதை பற்றி அவையில் மீண்டும் குரல் எழுப்பினோம். ஆனால் நாங்கள் பேசி 4 மாதங்கள் ஆகியும் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து மாணவர்களின் உரிமையை நிலைநாட்டும் வகையில் அனைத்து கட்சி கூட்டம் திமுக சார்பாக நடத்தப்பட்டது. இந்த கூட்டத்திற்கு பின்பாக மருத்துவத்தில் ஓபிசி இடஒதுக்கீடு வேண்டி சட்ட போராட்டம் நடத்த முடிவு எடுக்கப்பட்டது. சட்ட போராட்டத்திற்கான பொறுப்பை முதல்வர் ஸ்டாலின் என்னிடம் கொடுத்தார்.

சட்ட போராட்டம்
உச்சநீதிமன்றத்தில் இந்த இட ஒதுக்கீட்டுக்காகப் பொதுநல வழக்கு போட்ட முதல் அரசியல் கட்சி திமுகதான். அதன்பின் நாங்கள் சட்ட போராட்டம் நடத்தினோம். இதில் சென்னை உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவில் 2021ல் இருந்தே ஓபிசி இடஒதுக்கீட்டை மருத்துவ படிப்பில் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு, இதற்கு 4 பேர் கமிட்டியும் உருவாக்கப்பட்டது. ஆனால் மத்திய அரசு 2021 மருத்துவ சேர்க்கையில் இந்த உத்தரவை பின்பற்றவில்லை. இதையடுத்து நாங்கள் உடனடியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்தோம்.

பொதுநல வழக்கு
இந்த வழக்கில் மீண்டும் ஓபிசி இடஒதுக்கீட்டை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு, உடனடியாக இந்த இடஒதுக்கீட்டை பின்பற்றி மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவிடப்பட்டது. ஆனால் இதை எதிர்த்து சில மருத்துவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். முதல்வர் ஸ்டாலின் உடனடியாக என்னையும் மனு தாக்கல் செய்ய சொன்னார். அங்கு நடத்த போராட்டத்தில் மதிப்பெண் மட்டுமே தகுதியைத் தீர்மானிப்பது இல்லை என உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் நான் கூறிய வாதத்தை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர். தீர்ப்பு நமக்கு சாதகமாக வந்தது.

உச்ச நீதிமன்றம்
இதையடுத்து மருத்துவ சேர்க்கையில் அகில இந்திய அளவில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான 27 சதவிகித இடஒதுக்கீட்டிற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டது. மருத்துவக் கல்வியில் இதர பிற்படுத்தப் பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை உச்சநீதிமன்றத்தில் உறுதிப்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பணி பாராட்டத்தக்கது. முதல்வரின் முயற்சியும்.. திராவிட இயக்கமும் இன்றி இந்த சாதனை சாத்தியம் ஆகி இருக்காது என்று எம்பி வில்சன் தனது பேச்சில் குறிப்பிட்டுள்ளார்.