• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

திராவிட இயக்க வரலாற்றில் தனித்த புகழை கொண்டவர் நாவலர் நெடுஞ்செழியன்- ஸ்டாலின் புகழாரம்

|

சென்னை: திராவிட இயக்க வரலாற்றில் தனித்த புகழையும் தகுதி மிகுந்த அடையாளத்தையும் கொண்டவர் நாவலர் நெடுஞ்செழியன் என திமுக தலைவர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

இது தொடர்பாக ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

திராவிட இயக்கத்தின் சமூக நீதி இலட்சியத்தை நெஞ்சில் ஏந்தி, தந்தை பெரியாரின் பகுத்தறிவுத் தெளிவுடனும்- பேரறிஞர் அண்ணாவின் தமிழ் மொழிப் பற்றுடனும் - கருணாநிதியுடன் இயக்க உறவுடனும் தொடர்ந்து பயணித்தவரான நாவலர் அவர்களுக்கு நூற்றாண்டு விழா என்பது திராவிட இயக்கத்தைச் சேர்ந்த அனைவருக்கும் தேனென இனிக்கின்ற செய்தியாகும்.

திராவிடர் கழகத்திலிருந்து, இரட்டைக் குழல் துப்பாக்கியாக உருவான திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொடக்கத்திலும், அதன் வளர்ச்சியிலும், பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு உற்ற துணையாகவும் உறுதியான நம்பிக்கையாகவும் விளங்கியவர் நாவலர் அவர்கள். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவராக- தாடி வைத்த இளைஞராக- சக தோழர்களான மதிப்பிற்குரிய கே.ஏ.மதியழகன், இனமானப் பேராசிரியர் உள்ளிட்டோருடன் அண்ணாவின் அன்பைப் பெற்று, இயக்க மேடைகள் தோறும் இன உணர்வை ஊட்டும் எழுச்சிமிகு தமிழ் முழக்கம் செய்தவர் நாவலர்.

நாவலருக்கு தனி பாணி

நாவலருக்கு தனி பாணி

"பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு திறந்தது- சிறுத்தையே வெளியே வா' எனப் புரட்சிக் கவிஞரின் பாடல் வரிகளை மேடைகளில் நாவலர் எடுத்துரைக்கும் நயமும், அவரது உடல்மொழியும் எதிரில் இருப்போரை, உணர்ச்சி கொள்ளச் செய்து, சுயமரியாதை வீரர்களாக்கும் வலிமை கொண்டவையாக இருந்தன. திராவிட இயக்கப் பேச்சுக்கலையில் ‘நாவலர் பாணி' என்று அடையாளப்படுத்தும் வகையில், அவருடைய சொற்பெருக்கு அமைந்திருந்தது. அவர் நடத்திய "மன்றம்" இதழ், திராவிட இயக்கப் படைப்பாயுதங்களில் ஒன்றாக விளங்கியது.

அண்ணா அழைப்பு

அண்ணா அழைப்பு

திருவாரூரில் பள்ளி மாணவராக இருந்த கருணாநிதி, தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றத்தினைத் தொடங்கி, முரசொலியை துண்டுப்பிரசுரமாக வெளியிட்டு வந்த காலத்தில், அதன் ஆண்டுவிழாவில் பங்கேற்று சிறப்புரையாற்றியவர் நாவலர். 1955ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா விருப்பப்படி, சொல்லின் செல்வர் ஈ.வெ.கி.சம்பத் முன்மொழிய, கருணாநிதி உள்ளிட்டோர் வழிமொழிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக நாவலர் அவர்கள் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். தேர்தலில் பங்கேற்பது என உள்கட்சி ஜனநாயகமுறைப்படி வாக்கெடுப்பு நடத்தப்பட்ட 1956 திருச்சி மாநில மாநாட்டில், அண்ணா அவர்களால் மாலை சூட்டப்பட்டு, கழகக் கொடியேற்றி, மாநாட்டுத் தலைமை தாங்கிய நாவலரை மேடையில் பேரறிஞர் அண்ணா விளித்தபோது, "தம்பி வா.. தலைமையேற்க வா.. உன் ஆணைக்குக் கட்டுப்பட்டு நடக்கிறோம்" எனச் சொன்ன வார்த்தைகள், நாவலரின் அரசியல் வரலாற்றில் மைல்கல்லாக அமைந்தன.

விலைவாசி உயர்வு போராட்டம்

விலைவாசி உயர்வு போராட்டம்

மும்முனைப் போராட்டம், விலைவாசி உயர்வுப் போராட்டம், இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டம் என கழகத்தின் போராட்டக் களங்களில் அண்ணாவுக்குத் துணையாக நின்றவர் நாவலர். 1967ல் இந்தியா திரும்பிப் பார்க்கும் வகையில் தமிழகத்தில் தி.மு.க. முதன்முறையாக ஆட்சி அமைத்தபோது, அண்ணா தலைமையிலான அமைச்சரவையில் இரண்டாம் இடம் பெற்றவர் நாவலர். அண்ணாவின் மறைவுக்குப் பிறகு, உள்கட்சி ஜனநாயகத்தின் அடிப்படையில் கழகத்தில் தலைவர் தேர்வு நடைபெற்றபோது, கருணாநிதிக்கும் நாவலருக்கும் இடையிலான உணர்வுகள் எப்படிப்பட்டவை என்பதை நெஞ்சுக்கு நீதியில் கருணாநிதி விரிவாக எடுத்துரைத்திருக்கிறார்கள். கழகத்தின் பொதுச்செயலாளராக, கருணாநிதி அமைச்சரவையில் இரண்டாம் இடம் கொண்ட அமைச்சராக, வள்ளுவர் கோட்டம் உள்ளிட்ட கருணாநிதியின் மகத்தான சாதனைகளில் துணை நின்ற தோழராக நாவலர் இருந்ததை மறக்க முடியாது. அரசியல் சூழல்களால் மக்கள் திராவிட முன்னேற்றக் கழகம் எனத் தனிக்கட்சி தொடங்கி, பின்னர் வேறு முகாமில் நாவலர் இணைந்தபோதும், திராவிட இயக்கத்தின் தீரம் மிக்க அடையாளமாகவே அவர் விளங்கினார்.

பெரியார் திடலில் இறுதிப் பேருரை

பெரியார் திடலில் இறுதிப் பேருரை

சுயமரியாதை-பகுத்தறிவு-சமூக நீதி இலட்சியத்தை இறுதிவரை கடைப்பிடித்தார். கேரள மாநிலம் வைக்கம் நகரில் தந்தை பெரியார் நடத்திய போராட்டத்தை நினைவுகூரும் வகையில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாட்டின் நிதியமைச்சராகப் பங்கேற்ற நாவலர் பேசிய உரையில், பகுத்தறிவும் திராவிட இயக்க உணர்வும் மிளிர்ந்தன. திருக்குறளுக்கு அவர் எழுதியுள்ள விரிவான உரை, திராவிட இயக்கப் பார்வையில் அமைந்ததாகும். மில்லின்னியம் எனப்படுகிற புத்தாயிரம் ஆண்டையொட்டி சென்னை பெரியார் திடலில் அவர் ஆற்றிய இறுதிப் பேருரை, நூறாண்டுகால திராவிட இயக்கத்தின் சாதனைகள் இனி வரும் காலத்தில் எத்தகைய வளர்ச்சிக்குத் துணை நிற்கும் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்தன.

கருணாநிதியின் வீரவணக்கம்

கருணாநிதியின் வீரவணக்கம்

நாவலர் அவர்கள் மறைவெய்தியபோது, அரசியல் மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு, திராவிடக் கொள்கை உணர்வுடன் அவரது இல்லம் சென்று, தனது மூத்த சகோதரருக்கு வீரவணக்கம் செலுத்தினார் கருணாநிதி. திராவிட இயக்க வரலாற்றில் தனித்த புகழையும், தகுதி மிகுந்த அடையாளத்தையும் கொண்டுள்ள நாவலர் அவர்களின் நூற்றாண்டில் அவரது பெருமைகளை நினைவுகூர்வோம். சமூகநீதி - சுயமரியாதை ஆகிய இலட்சியங்களைக் காக்கும் பயணத்தை வாழும் நாள் முழுதும் தொய்வின்றித் தொடர்ந்து மேற்கொள்ள சூளுரைப்போம்!

இவ்வாறு ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
DMK Statemenet on Navalar Nedunchezhiyan Cenetary.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more