• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

என்னதான் மோடி வந்தாலும், அமித்ஷா வந்தாலும், அது ஜீரோ தான். நாம் தான் ஹீரோ... மு.க.ஸ்டாலின்

|

சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்கு என்னதான் மோடி வந்தாலும் அமித்ஷா வந்தாலும் அது ஜீரோதான்; நாமதான் ஹீரோ என விமர்சித்திருக்கிறார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்.

சென்னை துறைமுகம் தொகுதியில் இன்று ஸ்டாலின் பிரசாரத்தின் போது பேசியதாவது: துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் நம்முடைய கழக வேட்பாளராக நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளராக உங்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டு இருக்கும் வேட்பாளர் பி.கே.சேகர்பாபு அவர்களுக்கு நீங்கள் எல்லாம் உதயசூரியன் சின்னத்தில் ஆதரவு தந்து வெற்றி பெற வைக்க வேண்டும்.

நம்முடைய வேட்பாளர் சேகர்பாபு அவர்களைப் பற்றி உங்களுக்கு அதிகம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஏற்கனவே, இந்தத் தொகுதியில் உங்களிடத்தில் வேட்பாளராக நின்று உங்களால் வெற்றி பெற்று சட்டமன்றத்தில் ஒரு உறுப்பினராகப் பொறுப்பேற்று அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டவர். அவர் எப்படி எல்லாம் பணியாற்றியிருக்கிறார்? எப்படி எல்லாம் தொண்டாற்றியிருக்கிறார்? என்பதைப் பற்றி நீங்கள் நன்கு அறிவீர்கள். கொரோனா காலத்தில் மக்களோடு மக்களாக இருந்து மக்களுக்கு ஏற்பட்ட துன்பங்களை துயரங்களைக் களைவதற்காக, வாழ்வாதாரத்தை இழந்து தவித்துக் கொண்டிருக்கும் மக்களுக்காக, திராவிட முன்னேற்ற கழகம் 'ஒன்றிணைவோம் வா' என்ற திட்டத்தின் மூலமாக, வீட்டில் அடைந்திருந்த மக்களுக்கு அவர்களுக்கு வேண்டிய உணவு, மளிகைப் பொருட்கள், மருந்து - மாத்திரைகள், காய்கறிகள் ஆகியவற்றை வழங்கி பல வகைகளில் திராவிட முன்னேற்றக் கழகம் உதவி செய்திருக்கிறது.

செயல் வீரர் சேகர்பாபு

செயல் வீரர் சேகர்பாபு

அவ்வாறு உதவி செய்து இருப்பவர்கள் பட்டியலில் நம்முடைய மாவட்டச் செயலாளர் சேகர்பாபு அவர்கள்தான் முதலிடத்தில் இருப்பார் என்பது எல்லோருக்கும் தெரியும். தன்னுடைய உயிரைப் பற்றிக் கவலைப்படாமல், உயிரையே பணயம் வைத்துப் பணியாற்றி இருக்கும் ஒரு சிறந்த செயல் வீரர்தான் நம்முடைய சேகர்பாபு அவர்கள். அவரை மீண்டும் இந்தத் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக நீங்கள் தேர்ந்தெடுக்கப் போகிறீர்கள். அதில் எந்த மாற்றமும் இல்லை.

ஜீரோ-ஹீரோ

ஜீரோ-ஹீரோ

ஆனால் அதே நேரத்தில் நம்மை எப்படியாவது அழித்துவிட, ஒழித்துவிட மத்தியில் மதவெறி பிடித்திருக்கும் பாஜக அரசு எவ்வளவோ திட்டங்களை முயற்சிகளை செய்து கொண்டிருக்கிறது. இந்தத் தேர்தலுக்காக பிரதமர் மோடி வருகிறார். உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகிறார். என்னதான் மோடி வந்தாலும், அமித் ஷா வந்தாலும், அது ஜீரோ தான். நாம் தான் ஹீரோ.

பாசிச அதிகாரம்

பாசிச அதிகாரம்

கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் வந்தார்கள். என்ன ஆனது? ஒரு இடத்தில்கூட அவர்கள் வெற்றி பெற முடியவில்லை என்பது நாட்டுக்கு நன்றாகத் தெரியும். வேறு மாநிலங்களில் உங்கள் பாச்சா பலிக்கலாம். ஆனால் தமிழ்நாட்டில் உங்கள் மோடி மஸ்தான் வேலைகள் பலிக்காது. அதைத்தான் இன்றைக்கு நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். உங்கள் பாசிச அதிகாரம் தமிழ்நாட்டில் எடுபடாது. இது ‘எங்க ஏரியா, உள்ள நுழையவே முடியாது'.

நீட் தற்கொலைகள்

நீட் தற்கொலைகள்

இன்றைக்கு மத்திய அரசிற்கு அடிபணிந்து, கூனிக்குறுகி, சேவகனாக, அடிமையாக, எடுபிடியாக பழனிசாமி தலைமையில் தமிழ்நாட்டில் ஒரு ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. நீட் தேர்வை தமிழ்நாட்டில் நுழைத்து, நம்முடைய வீட்டுப் பிள்ளைகள் மருத்துவராக வர முடியாத சூழ்நிலையை ஏற்படுத்தி இருக்கிறார்கள். அதனால் அரியலூர் பகுதியில் ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த அனிதா என்ற ஒரு மாணவி தற்கொலை செய்து மாண்டு போனார். அதைத் தொடர்ந்து பல மாணவ - மாணவியர்கள் தற்கொலை செய்து இறந்திருக்கிறார்கள்.

அனிதா அச்சீவர்ஸ் அகாடமி

அனிதா அச்சீவர்ஸ் அகாடமி

அதனால்தான் அனிதாவின் நினைவாக கொளத்தூர் தொகுதியில் அந்த மாணவி பெயரில் ‘அனிதா அச்சீவர்ஸ் அகாடமி' என்ற ஒரு பயிற்சி மையத்தைத் தொடங்கி, இதுவரை அந்தப் பயிற்சி மையத்தின் மூலமாக ஆயிரம் பேருக்கு நான் வேலை வாங்கிக் கொடுத்திருக்கிறேன் என்பதைப் பெருமையோடு சொல்ல விரும்புகிறேன். எப்படி கொளத்தூரில் ‘அனிதா அச்சீவர்ஸ் அகாடமி' ஒன்றை அமைத்து அதன் மூலமாக வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்து இருக்கிறோமோ, அதே போல தமிழ்நாடு முழுவதும் இருக்கும் எல்லா மாவட்டங்களிலும் ‘அனிதா அச்சீவர்ஸ் அகாடமி' தொடங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் அறிவித்து இருக்கிறோம்.

 ஜெ மர்ம மரணம்

ஜெ மர்ம மரணம்

அம்மையார் ஜெயலலிதா அவர்கள் ஆட்சிக்கு வந்தார். அவர் மீது பல வழக்குகள் போடப்பட்டன. அந்த வழக்கின் காரணமாக அவர் பதவி விலக வேண்டிய ஒரு சூழ்நிலை வந்தது. அவர் சிறைக்குப் போனார். பிறகு வெளியில் வந்தார். அதற்குப் பிறகு அவர் உடல் நலிவுற்று இறந்து போனார். அவர் இறந்தது கூட ஒரு மர்ம மரணமாக இருக்கிறது. நாம் ஆட்சிக்கு வந்தவுடன் அந்த விசாரணைக் கமிஷனை முறைப்படுத்தி வேகப்படுத்தி, தவறு செய்தவர்கள் யார் என்பதைக் கண்டுபிடித்து வெளியில் கொண்டு வருவேன். அதை இந்த ஸ்டாலின் நிச்சயமாகச் செய்வான்.

எடப்பாடியின் துரோகம்

எடப்பாடியின் துரோகம்

அந்த அம்மையார் இறந்ததற்குப் பிறகு, இப்போது கடந்த நான்கு வருடங்களாக பழனிசாமி ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். அவர், நான் விருது வாங்கி விட்டேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இவர் எப்படி முதலமைச்சரானார்? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதலமைச்சரானாரா? மண்புழு போல ஊர்ந்து சென்று, தவ்வித் தவ்விச் சென்று காலில் விழுந்து முதலமைச்சரானார். இதைச் சொன்னால், நான் என்ன பாம்பா? பல்லியா? என்று கேட்பார். பாம்பு, பல்லிக்கு விஷம் கம்மியாகத்தான் இருக்கும். இவர் செய்த துரோகத்திற்குதான் விஷம் அதிகம்.

 தமிழகத்தை காப்பாற்ற வேண்டும்

தமிழகத்தை காப்பாற்ற வேண்டும்

காலில் விழுந்து பதவி வாங்கி விட்டு அந்த அம்மாவையே தூக்கி எறிந்தவர். ஜெயலலிதாவின் மரணத்தை இன்னும் கண்டுபிடிக்க முடியாமல் இருக்கிறார்கள். இப்படி துரோகம் செய்து கொண்டிருப்பவர் மக்களைப் பற்றி கவலைப்படப் போகிறாரா? நிச்சயம் கவலைப்பட மாட்டார். எனவே இந்தத் தமிழகத்தை மீட்க வேண்டும். பாஜக ஆட்சிக்கு அடிமையாக இருக்கும் இந்தத் தமிழ்நாட்டை நாம் காப்பாற்ற வேண்டும். அதனால்தான் நம்முடைய தேர்தல் அறிக்கையில் நாம் பல உறுதி மொழிகளை தெளிவாகச் சொல்லி இருக்கிறோம்.

ஜோத்பூர்-சென்னை ரயில்

ஜோத்பூர்-சென்னை ரயில்

அதில் இந்தத் துறைமுகம் தொகுதிக்கு, ஜோத்பூருக்கு - சென்னை சென்ட்ரலில் இருந்து ரயில் விடப்படும். இது குறித்து நாடாளுமன்றத்தில் தயாநிதி மாறன் பேசியிருக்கிறார். ஐந்து ஆண்டுகளாக கிடப்பில் இருக்கின்ற யானை கவுனி மேம்பாலம் விரைந்து கட்டி முடித்து நடைமுறைக்குக் கொண்டு வரப்படும். வியாபாரத் தலமான குறுகிய சாலைப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தேர்தல் வாக்குறுதி

தேர்தல் வாக்குறுதி

வணிகத் தலங்கள் அதிகம் உள்ள பகுதி என்பதால், குப்பைகள் அதிகளவில் சேர்கின்றது. குப்பைகளை சுழற்சி முறையில் தினந்தோறும் 3 முறை எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தி.மு.க. தேர்தல் அறிக்கையில் 505 உறுதிமொழிகளைச் சொல்லி இருக்கிறோம். அதையெல்லாம் விரைவில் நிறைவேற்றப் போகிறோம். அதற்கு, நம்முடைய சேகர்பாபு அவர்கள் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். ஒரு மக்கள் தொண்டனாக, மக்கள் சேவகனாக கழகத்திற்கு மட்டுமல்ல, இந்த வட்டாரத்தில் இருக்கும் மக்களுக்கும் இந்த மாவட்டத்தில் இருக்கும் மக்களுக்கும் அவர் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கும் ஒரு ஆற்றலாளர். அவரை நீங்கள் தேர்ந்தெடுத்து சட்டமன்றத்திற்கு அனுப்ப உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு தர வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

English summary
DMK President MK Stalin has slammed PM Modi and Amit Shahs's Campaign in Tamilnadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X