சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ராஜீவ் வழக்கு: 7 தமிழரை ஏன் விடுதலை செய்ய வேண்டும்? ஆளுநரிடம் கொடுத்த கடிதத்தில் ஸ்டாலின் விளக்கம்

Google Oneindia Tamil News

சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 தமிழரை உடனே ஏன் விடுதலை செய்ய ஒப்புதல் வழங்க வேண்டும் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் கொடுத்த கடிதத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

சென்னையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான குழுவினர் இன்று நேரில் சந்தித்தனர். அப்போது ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 தமிழரை விடுதலை செய்ய உடனே ஒப்புதல் வழங்க வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தினார்.

7 தமிழர் விடுதலையை வலியுறுத்தி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் ஸ்டாலின் கொடுத்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை தொடர்பான வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு, ஏறத்தாழ 30 ஆண்டுகளாக சிறையில் நீண்டகாலம் வேதனையை அனுபவித்து வரும், திருமதி. நளினி, திரு.ஸ்ரீகரன் என்கிற முருகன், திரு. சாந்தன், திரு. பேரறிவாளன், திரு. ஜெயக்குமார், திரு. ராபர்ட் பயாஸ் மற்றும் திரு. பி. ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரை விடுவிக்குமாறு தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தி வருவதை, தங்களுக்கு எடுத்துக் கூற விரும்புகிறேன்.

7 தமிழர் விடுதலை குறித்து உடனே முடிவெடுக்க ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் ஸ்டாலின் வலியுறுத்தல் 7 தமிழர் விடுதலை குறித்து உடனே முடிவெடுக்க ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் ஸ்டாலின் வலியுறுத்தல்

உச்சநீதிமன்ற தலையீடு

உச்சநீதிமன்ற தலையீடு

நாங்கள் வலியுறுத்திய போதும், அ.தி.மு.க. அரசு அவர்களை விடுதலை செய்யப் பரிந்துரைக்கவில்லை. மாண்பமை உச்சநீதிமன்றம் கடந்த 06.09.2018 அன்று பிறப்பித்த உத்தரவில், "அரசியலமைப்புச் சட்டத்தின் 161 ஆவது பிரிவின் கீழ், பேரறிவாளன் தமிழ்நாடு ஆளுநரிடம் ஒரு கோரிக்கை மனுவை அளித்துள்ளார். இயல்பாகவே, சம்பந்தப்பட்ட அதிகாரத்தில் உள்ளவர்கள் இந்த விவகாரத்தில் பொருத்தமான முடிவை எடுக்கச் சுதந்திரம் உள்ளது" என்று தெரிவித்துள்ளது.

அமைச்சரவை தீர்மானம்

அமைச்சரவை தீர்மானம்

மாண்பமை உச்சநீதிமன்றத்தின் இந்த வழிகாட்டுதலின் படியும் மற்றும் தி.மு.க. கொடுத்த அழுத்தத்தாலும், தமிழ்நாடு அரசின் அமைச்சரவை இந்த விவகாரத்தைப் பரிசீலித்து, 7 பேரும் உடனடியாக விடுதலை செய்யப்படும் வகையில், மீதமுள்ள தண்டனைக் காலத்தைக் குறைக்க வேண்டும் என்று, 09.09.2018 அன்று தங்களுக்கு பரிந்துரைத்தது. அமைச்சரவையின் இந்தப் பரிந்துரை தங்களுடைய ஒப்புதலுக்காகவும் அனுப்பி வைக்கப்பட்டது. மாநில அதிகார வரம்பிற்கு உட்பட்ட எந்த ஒரு குற்றத்திற்காகவும், தண்டிக்கப்பட்ட ஒரு நபருடைய தண்டனையை ரத்து செய்யவோ, குறைக்கவோ அல்லது மாற்றவோ ஒரு மாநில ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதாக, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 161 தெளிவாக எடுத்துரைக்கிறது. அமைச்சரவை பரிந்துரைத்த போதும், மாண்புமிகு ஆளுநர் அவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக முடிவெடுக்காமல் நிறுத்தி வைத்திருப்பது, பாதிக்கப்பட்டவர்களுக்குக் கடுமையான, சரிசெய்ய முடியாத துயரத்தை ஏற்படுத்துவதுடன், அநீதி இழைப்பதும் ஆகும்.

தாமதங்களை தவிர்க்க வேண்டும்

தாமதங்களை தவிர்க்க வேண்டும்

அரசியல் சட்ட பதவிகளில் இருப்போர் உரிய காலவரம்பிற்குள், தங்களது கடமையை ஆற்றிட வேண்டும் என்பது சட்டத்தில் வழக்கமான நடைமுறை. அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி அதிகாரம் பெற்றவர்கள் முடிவு எடுப்பதில் தேவையற்ற கால தாமதங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் - அப்படித் தவிர்க்கவில்லையென்றால் அந்த பதவியில் இருப்போருக்கு உச்சநீதிமன்றமே வழிகாட்டுதல்களை வழங்கலாம் என்றும் பல்வேறு வழக்குகளில் உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியிருக்கிறது.

உச்சநீதிமன்றம் உத்தரவு

உச்சநீதிமன்றம் உத்தரவு

தண்டனை பெற்றவர்களில் ஒருவரான திரு. பேரறிவாளன் 21.01.2020 அன்று தாக்கல் செய்த எஸ்.எல்.பி. மீதான உத்தரவில் "இரு வாரங்களுக்கு இந்த வழக்கை ஒத்திவைக்கிறோம். 2014-ஆம் ஆண்டு ரிட் மனு (குற்றவியல் வரம்பு) 48-ன் மீது, 6.9.2018 அன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் அடிப்படையில் - மனுதாரரின் அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு 161-ன் படி முன்வைத்த கோரிக்கை தொடர்பாக, தமிழக அரசு ஏதாவது முடிவெடுத்துள்ளதா என்பதை நீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும்" என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிபிஐ பதில் மனு

சிபிஐ பதில் மனு

அண்மையில், 3.11.2020 அன்று இந்த வழக்கு மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது - உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் அனைத்தும் பொதுவெளியில் செய்திகளாக வெளிவந்துள்ளன. தற்போது, 20.11.2020 அன்று உச்சநீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்துள்ள உறுதிமொழி ஆவணத்தில், "பன்னோக்கு விசாரணை முகமை மேற்கொண்டு வரும் விசாரணையில் மனுதாரர் (திரு. பேரறிவாளன்) குறித்து விசாரிக்கவில்லை". (பத்தி 4.5.1) "மனுதாரரால் கோரப்பட்டுள்ள விடுதலையானது மனுதாரருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநருக்கும் இடைப்பட்ட விவகாரம்". (பத்தி 4.8) "இந்த விடுதலை விவகாரத்தில் சிபிஐக்கு எந்தப் பங்கும் இல்லை". (பத்தி 4.10) என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

ஆளுநருக்கு தடை இல்லை

ஆளுநருக்கு தடை இல்லை

சிபிஐ தாக்கல் செய்துள்ள மேற்காணும் பதில் மனுவின்படி, மாநில அமைச்சரவை சட்டப்பிரிவு 163-இன் படி தங்களுக்குச் செய்துள்ள பரிந்துரையை ஏற்க மாண்புமிகு ஆளுநருக்கு எந்தத் தடையும் இல்லை. மேலும், இது இரண்டு ஆண்டுகளாக தங்களது அலுவலகத்தில் நிலுவையில் இருப்பதென்பது மாநில நிர்வாகத்தைக் குறைத்துக் காண்பிப்பதோடு, மாநில அரசு சட்டத்தின்பாற்பட்டு நடைபெறவில்லையோ என்ற தோற்றத்தையும் ஏற்படுத்துகிறது.

விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும்

விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும்

எனவே, மாண்புமிகு ஆளுநர் அவர்கள் 9.9.2018 தேதியிட்ட மாநில அமைச்சரவையின் பரிந்துரையினை இப்போதாவது ஏற்று, திருமதி. நளினி, திரு. ஸ்ரீகரன் என்கிற முருகன், திரு. சாந்தன், திரு. பேரறிவாளன், திரு. ஜெயக்குமார், திரு. ராபர்ட் பயஸ் மற்றும் திரு. பி. ரவிச்சந்திரன் ஆகிய தண்டனை பெற்றுள்ள ஏழுபேரின் ஆயுள் தண்டனையையும் குறைத்து, அவர்களை உடனே விடுவிக்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் ஸ்டாலின் கூறியுள்ளார்.

English summary
DMK President MK Stalin has urged tha TN Governor to release Seven Tamils in Rajiv assassination Case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X