• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

என்.பி.ஆர், என்.ஆர்.சியை அனுமதிக்க மாட்டோம் என முதல்வர் அறிவிக்காவிட்டால் போராட்டம்: ஸ்டாலின்

|

சென்னை: தமிழகத்தில் என்.பி.ஆர், என்.ஆர்.சியை அனுமதிக்க மாட்டோம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிக்காவிட்டால் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கை:

நாடு முழுவதும் மக்கள் கொதித்து எழுந்து போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்ற நேரத்தில், "தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கும், தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கும்" உள்ள வேறுபாடு தெரியாமல் அ.தி.மு.க. அரசு தொடர்ந்து மவுனம் காத்து வருவது தமிழக மக்களுக்கு அதிர்ச்சியளித்திருக்கிறது. மத்திய பா.ஜ.க. அரசு தற்போது தேசிய மக்கள் தொகை பதிவேடு கொண்டு வருவதின் உள்நோக்கம் குடிமக்கள் பதிவேடு தயாரிப்பதற்குத்தான் என்ற அடிப்படை உண்மையை மறைக்கும் முயற்சியில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமாரும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் "தேசிய குடிமக்கள் பதிவேடு கிடையாது. நாங்கள் கணக்கெடுக்கவில்லை" என்று கூறி, தமிழக மக்களை திசை திருப்பி வருவது கவலையளிக்கிறது.

சிறுபான்மையின மக்கள் மட்டுமின்றி- ஒட்டுமொத்த தமிழர்களுக்குமே இந்த தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிக்கும் பணியால் பெரும் பாதிப்பு என்பதை அறிந்துதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நானே இந்த பிரச்சினையை எழுப்பினேன். "தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்தோ அல்லது தேசிய குடிமக்கள் பதிவேடு செயல்படுத்தப்படும் என்றோ அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதும் வரவில்லை" என்று கூறிய வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், "எதிர்க்கட்சிகளின் அச்சம் அடிப்படையற்றது" என்று அபத்தமாக வாதாடினார்.

திமுகவின் முழுவெற்றிக்கு தடையாக இருந்தது யார்...? அறிவாலயத்தில் குவியும் புகார் கடிதங்கள்

தேசிய குடிமக்கள் பதிவேடு

தேசிய குடிமக்கள் பதிவேடு

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளித்து, வாக்களித்து நாடு முழுவதும் போராட்டமும், கலவரமும் ஏற்பட காரணமான அ.தி.மு.க. அரசு, பிரதான எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நான் கொடுத்த தனிநபர் தீர்மானத்தை விவாதத்திற்கே ஏற்க மறுத்தது. கேரள மாநில அரசு "குடியுரிமை திருத்தச் சட்டத்திருத்தம் -2019-ஐ திரும்பப் பெற வேண்டும்" என்று தீர்மானம் நிறைவேற்றிய பின்னரும், அதைப் பின்பற்றி ஒரு தீர்மானத்தை அரசின் சார்பில் நிறைவேற்ற தைரியம் இன்றி அஞ்சி நடுங்கி மத்திய பா.ஜ.க. அரசிற்கு "கைகட்டி" நின்றது அ.தி.மு.க. அரசு. இந்நிலையில், தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிக்கும் பணிக்கு தற்போது புதிய படிவம் வெளியிடப்பட்டிருக்கும் செய்திகளும், மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு கேட்கும் விவரங்கள் எல்லாம் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கும் பணிக்கு தேவையானவை என்ற விவரங்களும் பொதுவெளிக்கு வந்து விட்டன.

நிதிஷ்குமார் திட்டவட்டம்

நிதிஷ்குமார் திட்டவட்டம்

மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடுமையாக போராடிக் கொண்டிருக்கின்றன. பா.ஜ.க. ஆதரவுடன் கூட்டணி ஆட்சி செய்யும் பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமாரே "நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு தேவையற்ற ஒன்று. அதை பீகார் மாநிலத்தில் அனுமதிக்க மாட்டேன்" என்று துணிச்சலாக அறிவித்துள்ளார்.

அதிமுகவுக்கு கண்டனம்

அதிமுகவுக்கு கண்டனம்

தன் சொந்தக் கட்சி என்று கூட பாராமல் அஸ்ஸாம் மாநில பா.ஜ.க. முதல்வரே இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இவ்வளவுக்குப் பிறகும் அ.தி.மு.க. அரசும், முதலமைச்சர் எடப்பாடி திரு. பழனிசாமியும், தமிழகத்தில் தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிக்கப்படுவதற்கு ஆதரவாக இருப்பதும், தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்க கண்ணை மூடிக்கொண்டு வழி விடுவதும் கடும் கண்டனத்திற்குரியது.

அதிமுகவின் நிலை

அதிமுகவின் நிலை

"தேசிய குடிமக்கள் பதிவேடு" தயாரிக்கும் 2003-ம் ஆண்டு குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு ஆதரவளித்த கட்சி அ.தி.மு.க. இப்போது ஈழத் தமிழர்களையும், சிறுபான்மையின மக்களையும் மட்டுமின்றி, ஒட்டு மொத்த இந்திய மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் 2019-ம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு பாராளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் ஆதரவளித்ததும் அ.தி.மு.க.

ஏமாற்ற வேண்டாம்

ஏமாற்ற வேண்டாம்

"இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக்குடியுரிமை கேட்டுள்ளோம்" என்று இப்போது கூறும் அ.தி.மு.க. அந்த நிலைக்குழு கூட்டத்தில் அதுபற்றி ஒரு முணுமுணுப்பைக் கூட காட்டவில்லை. இப்போது அந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு மக்களவையிலும், மாநிலங்களவையிலும் வாக்களித்து வெற்றி பெற வைத்தது அ.தி.மு.க. நாட்டையே ரணகளமாக்கியுள்ள சட்டத்திருத்தத்திற்கு ஆதரவளித்து விட்டு, இன்றைக்கு "மக்களுக்கு பாதிப்பு இல்லை" "என்.பி.ஆர், என்.சி.ஆர் பற்றி எங்களுக்கு அதிகாரபூர்வமான தகவல் ஏதும் இல்லை" என்றெல்லாம் தமிழக மக்களை ஏமாற்றி வருவதை உடனடியாக அ.தி.மு.க. நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இஸ்லாமிய இயக்கங்கள் கோரிக்கை

இஸ்லாமிய இயக்கங்கள் கோரிக்கை

நேற்றைய தினம் மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பின் சார்பில் என்னை சந்தித்து "தேசிய மக்கள் தொகை பதிவேட்டை செயல்படுத்த மாட்டோம் என்று தமிழக அரசு அறிவிக்கும் வரை திராவிட முன்னேற்றக் கழகம் போராட வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளார்கள். ஏற்கனவே தேசிய மக்கள் தொகை பதிவேடு, குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிற்கு வழிகோலும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து மக்களவையிலும், மாநிலங்களவையிலும் தி.மு.க. வாக்களித்துள்ளது.

பிடிவாதம் பிடிக்கும் அதிமுக அரசு

பிடிவாதம் பிடிக்கும் அதிமுக அரசு

அச்சட்டம் நிறைவேறிய பிறகு- அதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் பிரமாண்டமான பேரணியை நடத்தியிருக்கிறோம். சட்டமன்றத்திலும் இது குறித்து வலியுறுத்தி அ.தி.மு.க. அரசிற்கு போதிய அழுத்தம் கொடுத்துள்ளோம். ஆனாலும் அ.தி.மு.க. அரசு "நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்" என்று பிடிவாதம் பிடித்து வருகிறது. இந்த அலட்சியமான - மூன்று கால் மனப்பான்மையை திராவிட முன்னேற்றக் கழகம் மட்டுமல்ல- தமிழக மக்கள் யாரும் ஏற்றுக் கொள்ள முடியாது.

திமுக போராட்டம்

திமுக போராட்டம்

ஆகவே, தேசிய மக்கள் தொகை பதிவேடு மற்றும் குடிமக்கள் பதிவேடு தயாரிக்கும் பணியை தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டோம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மக்களுக்கு நெருக்கடியும் துயரமுமளிக்கும் கணக்கெடுப்பு குறித்து, தொடர்ந்து அ.தி.மு.க. அரசு அமைதி காத்தால், விரைவில் மாபெரும் போராட்டத்தை- நாடே திரும்பிப் பார்க்கும் ஜனநாயக ரீதியிலான அறப்போராட்டத்தை இணக்கமான கருத்துடைய கட்சிகள் மற்றும் பொதுமக்களின் ஆதரவுடன் திராவிட முன்னேற்றக் கழகம் நடத்திடும் என்று எச்சரிக்க விரும்புகிறேன். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

 
 
 
English summary
DMK President MK Stalin has warned that the Tamilnadu Govt on the NPR and NRC issues.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more
X