• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

கூடங்குளம் அணுமின் நிலையப் பாதுகாப்பு- மத்திய அரசு விளக்கம் அளிக்க திமுக வலியுறுத்தல்

|

சென்னை: கூடங்குளம் அணுமின் நிலையப் பாதுகாப்பு குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என திமுக பொதுக்குழு வலியுறுத்தியுள்ளது.

சென்னையில் இன்று நடைபெற்ற திமுக பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

அணுமின் நிலையங்கள் ஓர் நாட்டினுடைய பாதுகாப்பிற்கு நெருக்கமான தொடர்புடையது. எனவே எந்தவொரு நாடும் அணுமின் நிலையங்கள் பற்றிய விவரங்களை தெரிவிப்பதில்லை.

அந்த அணுமின் நிலையங்களுக்கு நாட்டினுடைய உச்சபட்ச பாதுகாப்பு அம்சங்கள் செயல்படுத்தப்படும். அத்தகைய தேசிய பாதுகாப்போடு தொடர்புடைய அணுமின் நிலையங்களில் உள்ள கணினிகள் சந்தேகப்படத்தக்க வகையில் ஊடுருவப்பட்டிருக்கிறது என்பது நாட்டின் பாதுகாப்பிற்கு, அந்நிய சக்திகளால் மிகப்பெரிய ஆபத்தை உருவாக்கும். எனவே மத்திய அரசு இதுகுறித்து மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில், உண்மை நிலையை விளக்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டு, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமெனவும், ஏற்கனவே உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள பாதுகாப்பு அம்சங்களை முழு அளவில் நிறைவேற்றிட வேண்டும் என்றும் இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

மாநிலங்கள், மாவட்டங்களை நீக்கிவிட்டு 200 ஜன்பத்கள் உருவாக்கும் முயற்சியை கைவிட திமுக வலியுறுத்தல்

சென்னை காற்று மாசு

சென்னை காற்று மாசு

டெல்லியில் காற்று மாசு ஏற்பட்டு மக்கள் கடும் இன்னல்களுக்கு உள்ளாகியிருப்பதைத் தொடர்ந்து, சென்னை மாநகரமும் காற்று மாசு தாக்கத்திற்கும், பாதிப்பிற்கும் உள்ளாகும் அபாயம் இருக்கிறது என்பதையும், கடல் மட்டம் தொடர்ந்து உயர்வதால் 2050ஆம் வருடத்தில் சென்னை மாநகரம் பாதிக்கப்படக்கூடும் என்றும் வெளிவரும் ஆய்வுச் செய்திகளையும் இந்த பொதுக்குழு மிகுந்த கவலையுடன் பதிவு செய்கிறது. பருவநிலை மாற்றங்களை சமாளிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ஆக்கபூர்வமாக எடுத்திடவும், மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்திடவும், சென்னையை காற்று மாசு பாதிப்பிலிருந்து பாதுகாக்கவும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய - மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என்றும் இந்த பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

மேகதாது அணை

மேகதாது அணை

உச்சநீதிமன்றம் அளித்த இறுதித் தீர்ப்பிற்கு எதிராக தன்னிச்சையாக காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக மாநில அரசு முயற்சிப்பதற்கு இந்தப் பொதுக்குழு எதிர்ப்பு தெரிவிக்கிறது. பரம்பிக்குளம் - ஆழியாறு நீர் பங்கீட்டு ஒப்பந்த மறுஆய்வு, முல்லைப் பெரியாறு உள்ளிட்ட கேரள அரசுடனான நதிநீர்ப் பிரச்சினைகளை மீண்டும் மீண்டும் கமிட்டிகளை நியமித்து காலம் தாழ்த்தக் கூடாது என்று இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது. மாநிலத்திற்குள் தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட நதிநீர் இணைப்புத் திட்டங்களை அதிமுக அரசு விரைந்து செயல்படுத்திட வேண்டும் என்றும், நாடு முழுவதும் நதிநீர் இணைப்புத் திட்டங்களை மத்திய அரசு மேலும் தாமதிக்காமல் தொடங்கி, நிறைவேற்றிட முன்வர வேண்டும் என்றும் இந்த பொதுக்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

ஏழு தமிழர் விடுதலை

ஏழு தமிழர் விடுதலை

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர், கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனையை அனுபவித்து வருகிறார்கள். அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பிய பின்னரும், தமிழக ஆளுநர், அவர்களை விடுவிப்பதில் ஏன் காலதாமதம் செய்கிறார் என்பது யாருக்கும் புரியாத புதிராக உள்ளது. "அந்தத் தீர்மானத்தை ஏற்றுக் கொள்ள முடியாது" என்று தமிழக ஆளுநர் அவர்கள், முதலமைச்சரிடம் கூறிவிட்டதாக வெளிவந்த செய்தியையும் முதலமைச்சர் மறுக்கவில்லை. ஆகவே அதிமுக அரசு உடனடியாக 7 பேர் விடுதலையை வலியுறுத்த வேண்டும் என்றும், அமைச்சரவை முடிவின்படி தமிழக ஆளுநர் அவர்கள், 7 பேரையும் உடனே விடுதலை செய்ய வேண்டுமெனவும் இப்பொதுக்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

குடிநீர் திட்டங்கள்

குடிநீர் திட்டங்கள்

சென்னை மாநகரமும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளும் குடிநீர் பஞ்சத்தில் சிக்கும் விதத்தில் அலங்கோல ஆட்சி நடத்தும் அதிமுக அரசுக்கு இந்த பொதுக்குழு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. காலிக்குடங்களுடன் மக்களை அலைய விட்டு - ஒரு குடம் தண்ணீர் 10 அல்லது 15 ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்கிட வேண்டிய நிலை ஏற்பட்டு, ஜோலார்பேட்டையிலிருந்து ரயிலில் தண்ணீர் கொண்டு வந்தும் தவித்த வாய்க்குத் தண்ணீர் கொடுக்க முடியாத அவலமான அரசாக அதிமுக அரசு இருந்து வருகிறது. மழை பெய்ததால் "தற்காலிகமாக" குடிநீர் பிரச்சினை தீர்ந்தது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி இருந்தாலும், சென்னைக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகளில் போதிய தண்ணீர் இல்லை. இந்நிலையில் குடிநீர்ப் பிரச்சினையை நிரந்தரமாகத் தீர்ப்பதற்கு "மெகா குடிநீர்த் திட்டங்களையும்", "கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டங்களையும்" விரைந்து நிறைவேற்றிட வேண்டும் என்று இந்த பொதுக்குழு அதிமுக அரசைக் கேட்டுக் கொள்கிறது.

திருவள்ளுவர் சிலை

திருவள்ளுவர் சிலை

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற உயரிய கோட்பாட்டினை உலகிற்குச் சொன்ன அய்யன் திருவள்ளுவருக்கு, "காவி" வண்ணம் பூசி கொச்சைப்படுத்திய பா.ஜ.க.வினருக்கும், தஞ்சை - பிள்ளையார்பட்டியில் அய்யன் திருவள்ளுவர் சிலைக்கு அவதூறு ஏற்படுத்தியவர்களுக்கும் - அதன் பின்னணியில் உள்ள மதவாத சக்திகளுக்கும் இந்தப் பொதுக்குழு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. மேலும், அதிமுக அரசு தனது மவுனத்தைக் கலைத்து; அய்யன் திருவள்ளுவரைச் சிறுமைப்படுத்துவது, தமிழுக்கும், தமிழர்களுக்கும் ஏற்படுத்தப்படும் மாறாத அவமானம் என்பதை உணர வேண்டும் என்றும்; இந்த மாதிரி விபரீத விளையாட்டுகளை நடத்தி - தமிழகத்தில் நிலவும் மத நல்லிணக்கம் மற்றும் சகோதர மனப்பான்மையைச் சீரழிக்கவும், கவனத்தைத் திசைதிருப்பவும் நினைக்கும் அழிவு சக்திகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து - அவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என்றும் அ.தி.மு.க. அரசை இந்தப் பொதுக்குழு வலியுறுத்துகிறது.

உள்ளாட்சி தேர்தல்

உள்ளாட்சி தேர்தல்

கடந்த மூன்று வருடங்களாக, பல்வேறு காரணங்களைக் கூறி, உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளை எல்லாம் அவமதித்து, உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் - "பஞ்சாயத்து ராஜ்" சட்டத்தின் நோக்கத்தைச் சிதறடித்து - உள்ளாட்சி ஜனநாயகத்தை சீர்குலைத்துள்ள அதிமுக அரசுக்கு இந்தப் பொதுக்குழு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. இனியும் நீதிமன்றங்களை ஏமாற்றி காலதாமதம் செய்யாமல், விரைந்து உள்ளாட்சித் தேர்தலை நடத்திட வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

இவ்வாறு திமுக பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 
 
 
English summary
DMK General Council Passed a resolution on the safety measures at Kudankulam Nuclear Power Plant.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X