திமுகவுக்கு 2 முதலமைச்சர்கள்.. அப்போ கூட பாஜகவால்.. ம்ஹூம்! - நயினாருக்கு டிகேஎஸ் இளங்கோவன் ரிப்ளை!
சென்னை : தனி நாடு கோருவது தி.மு.கவின் கொள்கை அல்ல, மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட வேண்டும், மாநில சுயாட்சி என்பதுதான் திமுகவின் நிலைப்பாடு என திமுக செய்தித் தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
மாநில சுயாட்சி வழங்கப்படவில்லை என்றால் தனி தமிழ்நாடு கோரிக்கை எழுப்பப்படும் எனப் பேசிய திமுக எம்பி ஆ.ராசாவின் பேச்சு சர்ச்சையானதைத் தொடர்ந்து அது குறித்து விளக்கமளித்துள்ளார் திமுகவின் டி.கே.எஸ்.இளங்கோவன்.
தனி தமிழ்நாடு கோரிக்கை..ஆ.ராசாவை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: சு.சுவாமி
தமிழ்நாட்டை இரண்டாகப் பிரித்தால், இரண்டு முதல்வர்கள் திமுகவுக்குத்தான் கிடைப்பார்கள். நயினார் நாகேந்திரனால் எம்எல்ஏவாக கூட ஆக முடியாது என டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

தனித் தமிழ்நாடு
திமுக துணைப் பொதுச் செயலாளரும், எம்.பியுமான ஆ.ராசா, கடந்த ஞாயிறன்று நாமக்கல்லில் நடைபெற்ற திமுக நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் பேசும்போது, "தனித் தமிழ்நாடு கோரிக்கையை கைவிட்டு, தி.மு.க மாநில சுயாட்சி முழக்கத்திற்கு வந்துவிட்டது. அண்ணா வழியில் பயணிக்கும் எங்களை தனி தமிழ்நாடு கோரிக்கை எழுப்பி பெரியார் வழியில் செல்ல வைத்துவிடாதீர்கள். மாநில சுயாட்சி தாருங்கள். அதுவரை நாங்கள் ஓயமாட்டோம்." எனத் தெரிவித்தார்.

இரண்டாகப் பிரிப்போம்
இந்தப் பேச்சுக்கு பாஜகவினர் எதிர்வினை ஆற்றி வருகின்றனர். பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, நாராயணன் திருப்பதி ஆகியோர் இதுதொடர்பாக கருத்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இன்று பேசிய பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன், "ஆ.ராசாவின் பேச்சை கேட்ட பிறகு எனக்கும் தமிழ்நாட்டை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்படுகிறது. தமிழ்நாட்டை இரண்டாகப் பிரிக்க வேண்டும். பிரிக்க முடியாது என நினைக்க வேண்டாம். பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்று நினைத்தால் பிரித்து விடுவோம்." எனப் பேசினார்.

யார் பிரிக்கச் சொன்னது?
இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செய்தித் தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "என்ன காரணத்தின் அடிப்படையில் தமிழ்நாட்டைப் பிரிக்க வேண்டும் என நயினார் நாகேந்திரன் கூறுகிறார்? தமிழ்நாட்டைப் பிரிக்கவேண்டும் என்று மக்கள் கேட்டார்களா? எங்காவது கோரிக்கை எழுந்திருக்கிறதா? 403 தொகுதிகளைக் கொண்டுள்ள உத்தர பிரதேசத்தையே பிரிக்க முடியவில்லை.

2 முதலமைச்சர்கள்
தனி நாடு கோருவது திமுகவின் கொள்கையாக இருந்ததில்லை. மாறாக, மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வேண்டும், மாநில சுயாட்சி வேண்டும் என்பதற்காகப் போராடி வருகிறோம். திமுகவின் நிலைப்பாடு மாநில சுயாட்சி. தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும், மூன்றாகப் பிரிக்க வேண்டும் என எப்படிச் சொல்கிறார்கள்? இரண்டாகப் பிரித்தால், 2 முதலமைச்சர்கள் திமுகவுக்குத்தான் கிடைப்பார்கள். அப்போதும் பாஜகவின் நயினார் நாகேந்திரனால் எம்.எல்.ஏ-வாகக்கூட ஆக முடியாது.

மாநிய சுயாட்சி
அரசியல் அமைப்புச் சட்டத்தை மதிக்காத கட்சி பா.ஜ.க. மத்தியில் ஆட்சி அதிகாரத்தை வைத்துக்கொண்டு அதிகார போதையில் பேசுகின்றனர். ருவாய் என்ன என்பதே தெரியாமல் மாநில அரசின் அதிகாரங்களைப் பறித்துக்கொள்கின்றனர். இரண்டு பணக்காரர்களுக்கான ஆட்சியாக மத்திய பாஜக ஆட்சி உள்ளது உள்ளது." எனத் தெரிவித்தார்.