ஸ்டாலின் அதிரடி.. திருவொற்றியூர் எம்எல்ஏ சங்கர் கட்சி பதவி பறிப்பு! கட்டம் கட்டி தூக்கிய திமுக! ஏன்?
சென்னை: மாநகராட்சி பொறியாளரை தாக்கியது தொடர்பாக, திருவொற்றியூர் திமுக எம்எல்ஏ கே.பி.சங்கர் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்து உள்ளது பெரும் பரபரப்பை கட்சிக்குள் ஏற்படுத்தி உள்ளது.
என்ன நடந்தது? யார் இந்த கே.பி.சங்கர்?
திருவள்ளூர் மாவட்டத்தை பொறுத்தவரை, அங்குள்ள 10 சட்டமன்ற தொகுதிகளையும் மொத்தமாக திமுக கூட்டணியே கையில் வைத்துள்ளது.. இவைகளில் மிக முக்கியமான தொகுதியான திருவொற்றியூர் எம்எல்ஏ தான் இந்த கே.பி.சங்கர்.
இந்த முறைதான் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு, முதல்முறையாக எம்எல்ஏவாகி உள்ளார்.. முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் கேபிபி சாமியின் சகோதரர்தான் இந்த கே.பி.சங்கர்.
பொய் தகவல்,மதக்கலவரத்தை தூண்ட முயற்சி என புகார் பாஜக பிரமுகர் மீது பாய்ந்த வழக்கு.. எச்சரித்த போலீஸ்

மீன்வளத்துறை
2006-2011-ல் தமிழக மீன்வளத்துறை அமைச்சராக பணியாற்றியவர் கே.பி.பி. சாமி.. ஆனால், அவர் உடம்பு சரியில்லாமல் இறந்துவிட்டார்.. எனவே, நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் கே.பி.பி. சாமியின் சகோதரரான கே.பி.சங்கருக்கு வாய்ப்பு தரப்பட்டது.. அதுவும் திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதியில் சீமானை எதிர்த்து போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டதுமே மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.. சீமானை போட்டியிட போவது இவர்தானா? என்று அப்போதே தன்மீது கவனங்களை திருப்பியவர்தான் சங்கர்..

திருவொற்றியூர்
மோதினால் ஸ்டாலினுடன்தான் கொளத்தூரில் மோதுவேன் என்று சொல்லி கொண்டிருந்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், திடீரென தன்னுடைய தொகுதியை மாற்றி திருவொற்றியூரில் போட்டியிட்டார்.. அப்போது சீமானுக்கும் சங்கருக்கும் கடும் போட்டி ஏற்பட்டது.. இறுதியில் ஏகப்பட்ட வாக்கு வித்தியாசத்தில் சீமானை வீழ்த்தி சங்கர் அபார வெற்றி பெற்றார்.

மாநகராட்சி
இவர் ஏற்கனவே, சென்னை மாநகராட்சியில் 5வது வார்டு கவுன்சிலராக இருந்துள்ளார்... இப்போது, திருவொற்றியூர் மேற்குப் பகுதி கழக செயலாளராக பொறுப்பில் உள்ளார்.. எம்எல்ஏ மற்றும் கட்சி பொறுப்பு என படுசெல்வாக்குடன் சங்கர் வலம் வருபவர்.. சமீபத்தில் சென்னை திருவொற்றியூரில் இடிந்து விழுந்த அடுக்குமாடி கட்டட விபத்தின்போது, அங்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பாதிக்கப்பட்டவருக்கு வீடு கட்டித் தருவதாகவும், அவர்கள் வீட்டிற்கு தேவையான பொருட்களை தானே வாங்கி தருவதாகவும் வாக்குறுதி கொடுத்திருந்தார்...

ஒப்பந்ததாரர்
இப்படிப்பட்ட சூழலில்தான் இவர் மீது ஒரு புகார் எழுந்தது.. சென்னையில் சாலை அமைக்கும் பணியை ஒப்பந்ததாரர்களுடன தகராறு செய்து, அதை நிறுத்திய நிலையில், அங்கு ஆய்வு செய்ய வந்த மாநகராட்சி பறக்கும்படை பொறியாளரை, கே.பி.சங்கரின் உதவியாளர் அடித்து உதைத்ததாக புகார் கூறப்பட்டது... மேலும் நிறைய ரவுடியிசம் செய்வதாகவும், கட்டப்பஞ்சாயத்து நடத்துவதாகவும் தலைமைக்கு இவர் மீது புகார்கள் வந்து கொண்டே இருந்தன.. இதனால் சங்கர் மீது தலைமையும் அதிருப்தி கொண்டிருந்தது..

அன்புமணி ராமதாஸ்
இதனிடையே, பாமகவின் அன்புமணி ராமதாசும் ஒரு கண்டன அறிக்கையை சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தார்.. அதில், திருவொற்றியூரில் சாலை பணியில் ஈடுபட்டிருந்த மாநகராட்சி பொறியாளரை திமுக எம்.எல்.ஏ கே.பி.சங்கரும், அவரது ஆதரவாளர்களும் தாக்கியுள்ளனர்; 13 லாரிகளில் வந்த தார்-ஜல்லி கலவையையும் திருப்பி அனுப்பியுள்ளனர். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அன்புமணி கேட்டுக் கொண்டிருந்தார்.

திமுக செயலாளர்
இந்நிலையில், அவரை மேற்குப் பகுதி திமுக செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அதிரடியாக அறிவித்துள்ளார்.. திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர், கட்சி கட்டுப்பாட்டை மீறி வருவதால் திருவொற்றியூர் திமுக மேற்கு பகுதிச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுவதாக துரைமுருகன் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எம்பி கனிமொழி
இத்தனை நாள் சங்கர் மீது புகார்கள் வந்த நிலையில், திடீரென திமுக மேலிடம் இப்படி ஒரு முடிவு எடுக்க 2 காரணங்கள் சொல்லப்படுகின்றன.. முதலாவதாக, திமுக எம்பி கனிமொழியின் தீவிர ஆதரவாளராக இருந்து வந்தவர்தான் கே.பி.சங்கர் என்கிறார்கள்.. இந்த உள்ளாட்சி தேர்தலில் கனிமொழி ஆதரவாளர்களுக்கும், தனக்கு சாதகமானவர்களுக்கு வாய்ப்பு வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்களும் வெளியாகிய நிலையில்தான் சங்கரின் பொறுப்பு பறிக்கப்பட்டுள்ளது.

திமுக அதிரடி
அதுமட்டுமல்ல, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்யும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. நேற்றுகூட அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது.. அநேகமாக இந்த கூட்டத்தில் சங்கரின் விவகாரமும் எழுப்பப்பட்டிருக்கலாம், அதன் விளைவாகவே இந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சொல்கிறார்கள்.. எப்படியோ, தன்னுடைய கட்சியில் யார் தவறு செய்தாலும்சரி, அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து வருவதை இந்த அரசு சரியாக செய்து வருவதாக தெரிகிறது.. ஆனாலும் சங்கரின் பதவி பறிப்பு கட்சிக்குள் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.