• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

சென்னையில் நாளை மறுநாள் திமுக சார்பில் நாவலர் நெடுஞ்செழியன் நூற்றாண்டு விழா

|

சென்னை: திராவிடர் இயக்க முதுபெரும் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் தமிழக அமைச்சருமான நாவலர் நெடுஞ்செழியனின் நூற்றாண்டு விழாவை சென்னையில் திமுக நாளை மறுநாள் நடத்தும் என்று அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: மதிப்பிற்குரிய நாவலர் அவர்கள். தந்தை பெரியாரின் தகவமைந்த தொண்டராக, பேரறிஞர் அண்ணாவின் பெருமைமிகு தம்பியாக, முத்தமிழறிஞர் கலைஞரின் இனிய தோழராக, மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் மனம் கவர்ந்த நண்பராக அரசியலில் பயணித்த நாவலர் அவர்கள் எந்நாளும் பகுத்தறிவுக் கொள்கையுடனும் சுயமரியாதை உணர்வுடனும் வாழ்ந்தவர்.

மாலை நேரக் கல்லூரிகளாக விளங்கிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்கூட்டங்களில், வலிமை மிகு கருத்துகளை அழகு மிளிரும் அடுக்குமொழித் தமிழில் மக்களிடம் எடுத்துரைப்பதில் அவருக்கிருந்த ஆற்றலின் காரணமாக, மேடைப் பேச்சில் நாவலர் பாணி என்கிற ஒரு முறையையே உருவாக்கியவர். புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் பாடல்களை எழுச்சி நிறைந்த குரலில் நாவலர் அவர்கள் எடுத்துரைக்கும்போது, கேட்போரின் உணர்வுகளில் சுயமரியாதைக் கொள்கை ஊற்றெடுக்கும்.

நாவலரை அழைத்த அண்ணா

நாவலரை அழைத்த அண்ணா

திராவிட இயக்கத் தலைவர்கள் பலரும் கொள்கை முழக்கம் செய்யும் இதழ்களை நடத்தி, பட்டிதொட்டி வரை படிப்பகங்கள் வாயிலாக மக்களிடம் சிந்தனைப் புரட்சியை ஏற்படுத்திய காலத்தில், நாவலரின் ‘மன்றம்' இதழ் அந்தப் பணியைச் செய்த முன்னணி இதழ்களில் ஒன்றாகச் சிறந்து விளங்கியது. 1955-ல் பேரறிஞர் அண்ணாவின் அன்புக்கட்டளையின்படி சொல்லின் செல்வர் ஈ.வெ.கி.சம்பத் முன்மொழிய, முத்தமிழறிஞர் கலைஞர் உள்ளிட்டோர் வழிமொழிய நாவலர் அவர்கள் கழகத்தின் பொதுச் செயலாளராக ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வும், 1956-ல் திருச்சியில் நடைபெற்ற கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டிற்கு அவர் தலைமையேற்றபோது, பேரறிஞர் அண்ணா அவர்கள், "தம்பி வா.. தலைமையேற்க வா.. உன் ஆணைக்குக் கட்டுப்பட்டு நடக்கிறோம்" என அழைத்ததும் நாவலர் வாழ்க்கைப் புத்தகத்தின் பொன்னான பக்கங்கள் என்றால் மிகையல்ல!

அண்ணா அமைச்சரவையில் நெ.2

அண்ணா அமைச்சரவையில் நெ.2

கழகம் நடத்திய மும்முனைப் போராட்டம், விலைவாசி உயர்வுப் போராட்டம், இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டம் ஆகியவற்றில் தன் பங்களிப்பைச் செலுத்திய நாவலர் அவர்கள், 1967-ல் பேரறிஞர் அண்ணாவின் தலைமையில் ஆட்சி அமைந்தபோது, அவரது அமைச்சரவையில் இரண்டாம் இடம் வகித்தவர்.பேரறிஞர் அண்ணாவின் மறைவுக்குப் பிறகு, கழக அமைப்பு விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதன் தொடர்ச்சியாக, தலைவர் பதவிக்கு ஒருமனதாக கருணாநிதியால் தேர்வு செய்யப்பட்டபிறகு, கழகத்தின் பொதுச் செயலாளராகவும், கலைஞர் தலைமையிலான அமைச்சரவையில் இரண்டாம் இடமும் வகித்த நாவலரின் எண்ண உணர்வுகள் குறித்து தலைவர் கலைஞர் தன் வாழ்க்கை வரலாறான நெஞ்சுக்கு நீதியில் எழுதியிருப்பதுடன் பல நிகழ்வுகளிலும் அதனைப் பதிவு செய்திருக்கிறார்.

நாவலர் என அழைக்க சொன்ன கருணாநிதி

நாவலர் என அழைக்க சொன்ன கருணாநிதி

1969 முதல் 1976 வரையிலான தலைவர் கலைஞர் தலைமையிலான அரசில் நிறைவேற்றப்பட்ட எண்ணற்ற திட்டங்களுக்கும், வள்ளுவர் கோட்டம் - பூம்புகார் கலைக்கூடம் போன்ற கவின்மிகு கட்டடக்கலைகளுக்கும் தலைவர் கலைஞருக்குத் துணையாக நின்று அவை நிறைவேற உதவியவர் நாவலர் அவர்கள். அரசியல் சூழல்களால் நாவலர் அவர்கள் தனிக்கட்சி கண்டு, பின்னர் மாற்று முகாம் சென்ற நிலையிலும் அவர் மீது கொண்ட அன்பு என்றும் மாறாமல் ‘நாவலர்' என்றே எப்போதும் குறிப்பிட்ட கருணாநிதி, கழகத்தினர் அனைவரும் அப்படியே குறிப்பிட வேண்டும் என வலியுறுத்தியவர்.

சட்டசபையில் திமுக கோரிக்கை

சட்டசபையில் திமுக கோரிக்கை

நாவலர் அவர்கள் மறைந்தபோது, கட்சி மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு, நேரில் சென்று அவருக்கு தன் இறுதிவணக்கத்தைச் செலுத்திய அரசியல் பண்பாட்டுக்குரியவர் கருணாநிதி. அவருடைய நெஞ்சில் எப்போதும் தனி இடம்பெற்றிருந்த நடமாடும் பல்கலைக்கழகமாம் நாவலர் அவர்களின் நூற்றாண்டினை ஒட்டி, கடந்த 2019 ஜூலை 11 அன்று சட்டமன்றத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் அவர்கள், "நடமாடும் பல்கலைக்கழகம் எனப் போற்றப்படுபவரும், திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கையிலிருந்து மாறுபடாதவருமான நாவலர் நெடுஞ்செழியனின் நூற்றாண்டைச் சிறப்பிக்கும் வகையில், தமிழக அரசு அவருக்குச் சிறப்புச் செய்ய வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்தார்.

ஓராண்டு ஓடிவிட்டது

ஓராண்டு ஓடிவிட்டது

இதற்குப் பதிலளித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், "நாவலர் நெடுஞ்செழியன் நூற்றாண்டு குறித்து முதலமைச்சரிடம் ஆலோசனை நடத்தியுள்ளோம். திராவிட இயக்கத்தின் தூணான நெடுஞ்செழியனுக்கு அரசின் சார்பில் விழா எடுக்கப்படும். அவரின் பெயர் வரலாற்றில் இடம்பெறும் வகையில் முதல்வர் அறிவிப்பு வெளியிடுவார்" எனத் தெரிவித்தார். ஆளும் அரசின் துணை முதல்வரால் கடந்த ஆண்டு அளிக்கப்பட்ட உறுதிமொழியினை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றுவார் என எதிர்பார்த்திருந்தோம்.

அரசு மீது விமர்சனம்

அரசு மீது விமர்சனம்

ஓராண்டுக் காலம் ஓடிவிட்ட நிலையில், நாவலர் நூற்றாண்டு விழா குறித்து தமிழக அரசின் சார்பில் எந்த அறிவிப்பும் வெளியிடப்படாதது வேதனை அளிக்கிறது. என்ன செய்வது? கொரோனா விழிப்புணர்வையே சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியான தி.மு.கழகம்தான் எடுத்துரைக்க வேண்டியிருந்தது. அதன்பிறகும், அலட்சியம் காட்டி, இந்த அளவுக்கு நோய்த்தொற்றுப் பரவலுக்கு வழிவகுத்தவர்கள்தானே இன்றைய ஆளுந்தரப்பினர்! எந்த எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட கட்சியின் அடையாளமாகக் கொண்டு ஆட்சி செய்கிறார்களோ அந்த எம்.ஜி.ஆரின் நூற்றாண்டையே ஓராண்டு கழித்து தாமதமாகக் கொண்டாடிய அ.தி.மு.க. ஆட்சியில், நாவலரின் நூற்றாண்டு விழா அறிவிப்பை எப்படி எதிர்பார்ப்பது?

சென்னையில் நாவலர் நூற்றாண்டு விழா

சென்னையில் நாவலர் நூற்றாண்டு விழா

அதனால், நாவலரை என்றும் மறவாத தி.மு.கழகத்தின் சார்பில் அவரது ‘நூற்றாண்டு நிறைவு விழா' 11-7-2020 அன்று கொண்டாடப்பட இருக்கிறது. அன்றைய தினம், அறிவாலயத்தில் நாவலர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு, மரியாதை செலுத்திப் போற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெறும். வாழ்நாளெல்லாம் பகுத்தறிவு முழக்கம் செய்து, தந்தை பெரியாரின் கருத்துகளை எந்த மேடையிலும் வலுவாக எடுத்துரைத்து, பேரறிஞர் அண்ணாவின் பெருமைகளை எடுத்துக்கூறி, தன் வாழ்வின் இறுதிவரை சுயமரியாதை உணர்வினைத் தமிழர்களுக்கு ஊட்டிய நடமாடும் பல்கலைக்கழகம் நாவலர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை, அவரது வார்த்தைகளிலேயே சொல்ல வேண்டுமென்றால், சீரோடும் - சிறப்போடும், எழிலோடும் ஏற்றத்தோடும், மகிழ்வோடும் - நிறைவோடும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கொண்டாடி, நாவலர் அவர்களின் புகழினைப் போற்றுவோம்! இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்!

 
 
 
English summary
DMK President MK Stalin said that his party will celebrate Navalar Nedunchezhiyan centenary on July 11.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more