பக்கா கேம்பிளான்.. சதுரங்க வேட்டையில் முறையாக காய் நகர்த்தும் இபிஎஸ் - ஸ்டாலின்.. இதை கவனிச்சீங்களா?
சென்னை: கூட்டணி கட்சிகளுக்கு இடம் ஒதுக்குவதில் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதை முதல்வர் பழனிசாமியும், எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலினும் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளனர்.
தமிழகத்தில் ஜெயலலிதா vs கருணாநிதி என்று இருந்த போட்டி முடிவிற்கு வந்து தற்போது அதிமுக, திமுக இரண்டிலும் அடுத்தகட்ட தலைவர்கள் தங்கள் வலிமையை நிரூபித்து வருகிறார்கள். அதிலும் முதல்வர் பழனிசாமியும், எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலினும் தாங்கள் எந்த அளவிற்கு ஆளுமை மிக்க தலைவர்கள் என்பதை ஒவ்வொரு முறையும் நிரூபித்து வருகிறார்கள்.
தேர்தல் சமயத்தில் இவர்கள் இருவரும் எடுக்கும் முடிவுகள் அவர்களின் கட்சியினர் இடையே உற்சாகத்தையும் , நம்பிக்கையும் அதிகரித்துள்ளது. அதிலும் கடந்த 10 நாட்களாக கூட்டணி பேச்சுவார்த்தையில் இவர்கள் செயல்பட்ட விதம் இரண்டு கட்சியின் தொண்டர்களையும் கவர்ந்துள்ளது.

போட்டி
கூட்டணி கட்சிகளுக்கு இடம் ஒதுக்குவதில் இரண்டு பேருமே ஒரே மாதிரிதான் செயல்பட்டார்கள். கூட்டணி கட்சிகளுக்கு அதிக இடம் ஒதுக்காமல் முடிந்த அளவு இடங்களை குறைத்து கொடுத்தனர். கூட்டணி பேச்சுவார்த்தையில் சிறப்பாக விவாதம் செய்து, தங்கள் தரப்பு நியாயத்தை சிறப்பாக எடுத்துரைத்து கூட்டணி உடையாமல், அதே சமயம் அதிக இடங்களையும் விட்டுக்கொடுக்கமால் இரண்டு பேருமே செயல்பட்டுள்ளனர்.

சிறப்பு
அதிலும் தாங்கள் எந்த அளவிற்கு ஸ்டிரிக்ட் என்பதை சிறிய கட்சிகளை இவர்களை அணுகிய விதத்தை வைத்தே சொல்லிவிடலாம். 165+ இடங்களில் கண்டிப்பாக போட்டியிட வேண்டும் என்று திட்டமிட்டே இரண்டு கட்சிகளும் கூட்டணி ஆலோசனைகளை செய்துள்ளது. அதிலும் திமுக 180+ இடங்களில் கண்டிப்பாக போட்டியிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்துள்ளது.

உறுதி
அதன்படி கூட்டணி பேச்சுவார்த்தையில் திமுக 180 இடங்களை எடுத்துக்கொண்டு சாதனை படைத்துவிட்டது. காங்கிரசுக்கு வெறும் 25, விசிக, மதிமுக, இந்திய கம்யுனிஸ்டுக்கு தலா 6 என்று திமுக கறார் காட்டி உள்ளது. அதிமுகவும் இதேபோல் பாஜகவிற்கு 20, பாமகவிற்கு 23 என்று பெரிய அளவில் இடங்களை ஒதுக்கவில்லை. தேமுதிகவுக்கு போக அதிமுக 160+ இடங்கள் வரை போட்டியிட வாய்ப்புகள் உள்ளன.

கடந்த முறை
கடந்த முறை லோக்சபா தேர்தலிலும் இதேபோல்தான் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளிடம் திமுக கறார் காட்டியது. அதேபோல் பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளிடம் அதிமுக ஸ்டிரிக்ட்டாக இருந்தது. தற்போதும் அதே ஸ்டைலை இரண்டு கட்சிகளுமே பயன்படுத்தி உள்ளது.

வாய்ப்பு
திமுக, அதிமுக இரண்டுமே கூட்டணி பேச்சுவார்த்தையில் ஒரே மாதிரிதான் கிட்டத்தட்ட காய் நகர்த்தி உள்ளன. தனிப்பெரும்பான்மை என்பதைத்தான் இரண்டு கட்சியும் கேம் பிளானாக வைத்துள்ளது. காங்கிரஸ், பாமக போன்ற பெரிய கட்சிகள் இருந்தாலும் தனிப்பெரும்பான்மை பெற வேண்டும் என்பதில் திமுக, அதிமுக இரண்டுமே தீவிரமாக ஆர்வம் காட்டி வருகிறது.

போட்டி போடலாம்
இதன் காரணமாக திமுக அதிமுக எதிர் எதிராக மோதும் இடங்கள் அதிக கவனம் பெறும். இரண்டு கட்சிகளும் அதிகபட்சம் 120 இடங்களில் நேருக்கு நேர் மோத வாய்ப்புள்ளது. இந்த இடங்கள்தான் பெரும்பாலும் முடிவை தீர்மானிக்கும். அதிமுக திமுக இரண்டில் எது வலிமையான கட்சி என்பதையும் இதுதான் தீர்மானிக்கும்!