சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை தமிழர்களை உரசிப்பார்க்கும் செயல்: திமுக எச்சரிக்கை

Google Oneindia Tamil News

சென்னை: மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை என்பது தமிழர்களை உரசிப் பார்க்கும் செயல் என்று திமுக எச்சரிக்கி விடுத்துள்ளது.

சென்னையில் திமுக எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதில், மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை என்பது தமிழர்களை உரசிப் பார்க்கும் செயல். இருமொழிக் கொள்கைக்கு ஆபத்தை விளைவிக்கும் எந்த ஒரு முடிவையும் திமுக மிக கடுமையாக எதிர்க்கும்.

மக்களது கருத்தை அறியாமல் மத்திய அரசு எந்த ஒரு முடிவையும் மேற்கொள்ளாது என நம்புகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டி அண்ணா அறிவாலயத்தில் உள்ள கருணாநிதி சிலை மற்றும் மெரினா கடற்கரையில் உள்ள நினைவிடங்களில் திமுக தலைவர் ஸ்டாலின், திமுக எம்.பி. எம்.எல்.ஏக்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க..

தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க..

பருவமழை பொய்த்தது முன்கூட்டியே தெரிந்தும், எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்காமல், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டங்களையும் நிறைவேற்றாமல், கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் பற்றியே கவலை கொள்ளாமல் "கமிஷன், கரெப்சன், கலெக்சன்"என்பதில் மட்டுமே முழுமூச்சாக ஈடுபட்டு வரும் ஆளும் அதிமுக அரசால் தமிழ்நாட்டில் தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. ஒரு குடம் தண்ணீர் 15 ரூபாய்க்கு விற்கப்படும் அவலம் ஏற்பட்டுள்ளது. சென்னை மாநகரில் 15 நாட்களுக்கு ஒருமுறை லாரி டேங்கர் மூலம் குடிநீர் சப்ளை செய்யும் நெருக்கடி உருவாகியிருக்கிறது.

மாநிலம் முழுவதும் நடைபெறும் மக்கள் போராட்டங்கள் - தாய்மார்கள் சாலை மறியலில் ஈடுபடும் காட்சிகள், குடிநீர்ப் பிரச்சினை எந்த அளவிற்கு தமிழகத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது. எனவே, தமிழகத்தின் தண்ணீர்ப் பஞ்சத்தைப் போக்க ஆளும் அ.தி.மு.க. அரசு உடனடியாக போர்க்கால நடவடிக்கைகளில் ஈடுபடுவதோடு, கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்கள் மற்றும் கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் போன்ற தொலைநோக்குத் திட்டங்களையும் விரைந்து நிறைவேற்ற முன்வர வேண்டும் என்றும் இந்த கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

மும்மொழித் திட்டத்துக்கு எதிர்ப்பு

மும்மொழித் திட்டத்துக்கு எதிர்ப்பு

"இந்தி பேசாத மாநிலங்கள் விரும்பும் வரை ஆங்கிலமும் ஆட்சி மொழியாக நீடிக்கும்"என்று பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் பிரதமராக இருந்தபோது நாடாளுமன்றத்தில் கொடுத்த வாக்குறுதி, "இனி இந்தி தமிழ்நாட்டில் இல்லை"என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் கொண்டு வந்து நிறைவேற்றி "அன்னைத் தமிழை அரியணையில் அமர வைத்த"இருமொழிக் கொள்கை, "தமிழ் கட்டாயம் கற்க வேண்டும்"என்று தலைவர் கலைஞர் அவர்கள் கொண்டு வந்த சட்டம் ஆகியவற்றிற்கும் - மொழிவாரி மாநிலங்கள், கூட்டாட்சித் தத்துவம் போன்றவற்றிற்கும் எதிராக மோடி அரசு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், புதிய கல்விக் கொள்கை குறித்த ஆய்வு செய்வதற்கான குழு, இந்தியைத் திணிக்கும் மும்மொழித் திட்டத்தை பரிந்துரை செய்து, மத்திய அரசிடம் வழங்கியது.

அதன் தொடர்ச்சியாக, இந்தியா முழுவதும் இந்தி கட்டாய பாடம் ஆக்கப்படும் என்ற செய்தி பரவியது. தமிழ்நாடு உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் எதிர்ப்புக் குரல் கிளம்பியது. அதன் தொடர்ச்சியாக, மத்திய அமைச்சர்கள் அந்த அறிக்கையை, பலரையும் கலந்து ஆலோசித்த பிறகுதான், செயல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார்கள். இது தமிழர்களை உரசிப் பார்க்கும் செயலாகும்.

திமுக எதிர்க்கும்

திமுக எதிர்க்கும்

பன்மொழி, பண்பாட்டோடு விளங்கும் ஒரு நாட்டில் மக்களின் கருத்துகளை அறியாமல் மத்திய அரசு எந்த முடிவையும் மேற்கொள்ளாது என நம்புகிறோம். அதைப்போல, தமிழர்களின் உணர்வோடு விளையாட வேண்டாம் என்று மத்திய பா.ஜ.க.அரசை இக்கூட்டம் கேட்டுக் கொள்வதோடு;

தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கைக்கு ஆபத்தை விளைவிக்கும் எந்தவொரு முடிவுகளையும், அது எந்த நேரத்தில் வந்தாலும் திராவிட முன்னேற்றக் கழகம் ஜனநாயக வழி நின்று மிகக் கடுமையாக எதிர்க்கும் என்பதை இக்கூட்டம் உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறது.

வேளாண் மண்டலமாக அறிவித்திடுக.

வேளாண் மண்டலமாக அறிவித்திடுக.

நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி விளையாட வேண்டிய காவிரி டெல்டா மாவட்டங்களை, வறண்ட பாலைவனமாக்கும் விதத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை அறிவித்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தைச் சிதைக்க நினைக்கும் மத்திய பாஜக அரசின் விவசாய விரோத நடவடிக்கைகளையும், அதற்கு அட்சரம் பிசகாமல் துணை போகும் அ.தி.மு.க. அரசையும் இந்தக் கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.

விவசாயிகளும் பொதுமக்களும் ஜனநாயக ரீதியாகப் போர்க்குரல் எழுப்பியும் அறவழிப் போராட்டங்களை தொடர்ந்து நடத்தியும் மத்திய மாநில அரசுகள் மீண்டும் மீண்டும் விவசாயிகளை வஞ்சிக்கும் வகையில் செயல்படுவது வேதனைக்குரியது. இதைச் சாதாரண சட்டம்-ஒழுங்குப் பிரச்சினையாக எண்ணி, போராடுபவர்களைக் கைது செய்வது, வெந்த புண்ணில் வேல்பாய்ச்சும் காரியமாகும்.நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் வேளாண்மையையும், அதற்கு உயிரோட்டமாக இருக்கும் விவசாயிகளையும் மத்திய மாநில அரசுகள் துளியும் மதிக்காமல் செயல்படுவது மக்களாட்சி இலக்கணத்திற்கு நிச்சயம் அழகு சேர்க்காது. ஆகவே விவசாயிகளின் உண்மையான உணர்வுகளுக்கு மதிப்பளித்து, காவிரி டெல்டா மாவட்டங்களில் அறிவிக்கப்பட்டுள்ள ஹைட்ரோ கார்பன் திட்டங்களை, மறுசிந்தனை ஏதுமின்றி, திரும்பப் பெற வேண்டும் என்றும், காவிரி டெல்டா மாவட்டங்களை "பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக"உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றும் இந்தக் கூட்டம் மத்திய பாஜக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

English summary
DMK has warned the Centre over the Hindi Imposition.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X