சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திமுக என்ன சாதிக்கும்? என கேட்டோருக்கு வாய்ப்பூட்டுதான் 'தபால்துறை தேர்வு ரத்து' - ஸ்டாலின்

Google Oneindia Tamil News

Recommended Video

    தபால் துறை தேர்வுகள் ரத்து : நாடாளுமன்றத்தில் அதிமுக, திமுக கடும் அமளி- வீடியோ

    சென்னை: இந்தியை திணித்த தபால்துறை தேர்வுகளை ரத்து செய்ய வைத்ததன் மூலம் திமுக வெற்றி பெற்று என்ன சாதிக்கும் என கேள்வி கேட்டோருக்கு வாய்ப்பூட்டு போடப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:

    அஞ்சல் துறை போட்டித்தேர்வுகள் தமிழ் மொழியில் நடத்தப்படும் என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்திருப்பதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்பினைப் பாதிக்கும் வகையில், அஞ்சல் துறையின் சார்பில் 14.7.2019 அன்று இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டும் நடத்தப்பட்ட போட்டித் தேர்வினை ரத்து செய்திருப்பது மிகுந்த ஆறுதல் அளிக்கிறது.

    DMK Welcomes to Centres decision to cancel of Postal Exams

    அஞ்சல் துறையில் வேலை வாய்ப்புகளுக்காக தமிழில் நடைபெற்று வந்த போட்டித் தேர்வினை திடீரென்று "ஆங்கிலத்திலும், இந்தியிலும் மட்டுமே நடத்துவோம்" என்று சுற்றறிக்கை வெளியானவுடன், முதலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சரிடமும் தயாநிதி மாறன் எம்.பி. மூலம் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு- "சுற்றறிக்கையைத் திரும்பப் பெற வேண்டும்" என்று வலியுறுத்தப்பட்டது.

    தமிழக சட்டமன்றத்திலும் பிரதான எதிர்கட்சித் தலைவர் என்ற முறையில், இந்தப் பிரச்சினை குறித்து சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சிகளில் திராவிட முன்னேற்றக் கழகம் தீவிரமாக ஈடுபட்டது.

    திராவிட முன்னேற்றக் கழக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள், இரு அவைகளிலும் இது குறித்துப் பிரச்சினையைக் கிளப்பி, கடுமையாக எதிர்த்ததோடு மட்டுமின்றி, "மீண்டும் அஞ்சல் துறைத் தேர்வுகளை தமிழிலும், மாநில மொழிகளிலும் நடத்திட வேண்டும்" என்று தீவிரமான அழுத்தம் கொடுத்து வந்தனர்.

    தமிழக இளைஞர்களின் நலனுக்காக மாநிலங்களவையில் தொடர்ந்து வலிமையாகப் போராடி மத்திய அரசின் கவனத்தையும், இந்தக் கோரிக்கையினை வலியுறுத்தி மாநிலங்களவைத் தலைவரின் கவனத்தையும் ஈர்த்து - தமிழகத்தின் உரிமைகளுக்காக - தமிழ் மொழியின் உரிமைக்காக பாராட்டுக்குரிய பணிகளில் ஈடுபட்டனர் நமது உறுப்பினர்கள். இந்த நிலையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுதியாக வாதாடும் - போராடும் குணத்திற்கு கிடைத்த இன்னொரு வெற்றியாக "தேர்வு ரத்து" "தமிழ் மொழியிலும் இனிமேல் தேர்வு" என்ற அறிவிப்பை மத்திய சட்டத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.

    தி.மு.க. வெற்றி பெற்று என்ன சாதிக்கப் போகிறது என்று வீண்வாதம் - விதண்டாவாதம் செய்தவர்களுக்கு இப்போது கிடைத்துள்ள வெற்றி, நிரந்தரமான வாய்ப்பூட்டு போடும் என்று நம்புகிறேன்.

    திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை மாநில உரிமைகளுக்காகவும், மாநில நலன்களுக்காகவும், நம் தாய் மொழியாம் செம்மொழித் தமிழுக்காகவும் தொடர்ந்து பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஆணித்தரமாகக் குரல் கொடுக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

    அரசியல் சட்ட அங்கீகாரம் பெற்ற தமிழ் மொழியைப் புறந்தள்ளி- ஒருதலைப் பட்சமாக இந்தி மொழிக்கு மட்டும் தனிமுக்கியத்துவம் கொடுக்கும் முயற்சிகளை மத்திய பா.ஜ.க. அரசு இனிமேலாவது கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். ஜனநாயக நெறிகளுக்கு மாறாக, இந்தியைத் தூக்கி நிறுத்த எத்தனிப்பதும், கடுமையான எதிர்ப்பு ஏற்பட்டதும் கைவிடுவதும் என்பது, இதுவே இறுதி நிகழ்வாக இருக்கட்டும் எனச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். பன்மைத்தன்மை கொண்ட இந்தியாவில்,குறுகிய மனப்பான்மை ஒழிந்து, அகண்ட விசாலமான மனப்பான்மை வளர்ந்து செழித்தால்தான், நாட்டுப்பற்று மேன்மையுறும் என்று, அனைவரும் அறிந்திருப்பதை நினைவுபடுத்துவது எனது கடமை என எண்ணுகிறேன்.

    இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    English summary
    DMK President said in a Statement, his party welcome the centre's decision to the cancel of Postal Exams.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X