• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

கொரோனா= டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்- திமுக இளைஞரணி சிறப்பு கூட்டத்தில் 21 தீர்மானங்கள்

|

தி.மு.கழக இளைஞரணி தொடங்கி 40 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி அணியின் மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர்-துணை அமைப்பாளர்கள் கலந்துகொண்ட சிறப்புக் கூட்டம் காணொலிக் காட்சி வாயிலாக இன்று நடைபெற்றது.

இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம் - 1

தமிழர்களின் நலனுக்காகவும், தமிழகத்தின் ஏற்றத்துக்காகவும் பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் அயராது பாடுபட்டு வரும் நமது கழகத்தலைவர், கழகத்தின் போர்ப்படையாம் இளைஞரணியை ஜூலை 20, 1980-ம் ஆண்டு மதுரை ஜான்சிராணி பூங்காவில் ஆரம்பித்து 40 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன.

DMK Youth Wing urges to close TASMAC shops

எத்தனை தியாகங்கள், எத்தனை போராட்டங்கள், எத்தனை எத்தனை மக்கள் நலப்பணிகள். தேர்தல் காலமானாலும் சரி, பேரிடர் காலமென்றாலும் சரி கழகத்தின் முன்னணி அணியாக நின்று களத்தில் பம்பரமாக சுழல்வது நம் தலைவர் தந்த இளைஞரணி அல்லவா.

கலைஞருக்கு முரசொலி முதல் பிள்ளை என்றால், நம் கழகத் தலைவருக்கு முதல் குழந்தை இளைஞரணிதானே. நமது தலைவர் மாணவப் பருவத்திலேயே கோபாலபுரம் இளைஞர் திமுகவை ஆரம்பித்து முத்தமிழறிஞர் கலைஞருக்கும், கழகத்தின் வளர்ச்சிக்கும் பக்கபலமாக நின்று வளர்ச்சிப்பணிகளில் ஈடுபட்டார்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்ட நமது தலைவர், மிசா கொடுமைகளால் பெற்ற தியாகத் தழும்புகளுடன்தான் திமுக இளைஞரணி என்னும் பேரமைப்பை 40 ஆண்டுகளுக்கு முன்பு கழக சட்டதிட்ட விதிகளின் அங்கீகாரத்துடன் தொடங்கினார்.

கோபாலபுரத்தில் ஒரு சலூன் கடையில் துளிர்த்து, மதுரை ஜான்சிராணி பூங்காவில் வேர்விட்டு, திருச்சி மாநாட்டில் தடம் பதித்து இன்று இந்தியாவிலேயே மிகப்பெரிய இளைஞர் பட்டாளத்தை அதிகம் கொண்ட அமைப்பாக திமுக இளைஞரணி உருவாகியுள்ளது என்றால் அதற்கு முழு முதற் காரணம் நம் கழகத் தலைவர் அவர்கள்.

தேர்தல் பிரச்சாரங்கள், கழகக் கொடி ஏற்றும் நிகழ்ச்சிகள்... என்று இளைஞரணி செயலாளராக நம் கழகத் தலைவர் அவர்களின் கால் படாத கிராமங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு உழைத்ததால்தான், முத்தமிழறிஞர் கலைஞரின் வாயாலேயே, 'உழைப்பு உழைப்பு உழைப்பு என்றால் அது தம்பி ஸ்டாலின்தான்'என்று பாராட்டைப் பெற முடிந்தது.

திமுக இளைஞரணியை உறுதியான, கட்டுக்கோப்பு மிக்க போர்வீரர்களைக் கொண்ட தன்னலமற்ற அணியாக வளர்த்தெடுத்து அதனை 40 ஆண்டுகள் கடந்தும் வீருநடை போடும் பேராற்றல் மிக்க அணியாக உருவாக்கி, தமிழ் சமூகத்தின் தொண்டுக்காக அர்ப்பணித்துள்ள நமது கழகத்தலைவர் அவர்களின் உழைப்புக்கு இக்கூட்டம் நன்றி செலுத்தித் தலைவணங்குகிறது!

தீர்மானம் - 2

தமிழகத்தில் அனிதா, பிரதீபா போன்ற தங்கைகளை நீட் நுழைவுத்தேர்வின் மூலமாகக் காவு வாங்கிய மத்திய அரசு, ஏழை, எளிய பின் தங்கிய கிராமப்புற அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவர் கனவைத் தகர்க்க வழிவகுக்கும் நீட் நுழைவுத்தேர்வினை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

நாடு முழுவதும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் (Syllabus) இல்லாத நிலையில் குறிப்பிட்ட சில பாடத்திட்டங்களைப் படிக்கும் மாணவர்கள் மட்டும் எளிதில் தேர்ச்சிபெறும் வண்ணம் உள்ள நீட் நுழைவுத் தேர்வு எளிய குடும்பத்திலிருந்து அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கனவுகளைத் தகர்க்கிறது. நீட் தேர்வினால் மேலும் பிஞ்சு உயிர்களை இழக்கத் தமிழகம் தயாராகயில்லை.

இந்தக் கொரோனா பேரிடர் சூழலிலும் நீட் தேர்வை நடத்தியே தீருவேன் என்று விடாப்பிடியாக நிற்கும் மத்திய அரசுக்கும், அதை வாய்மூடி மவுனியாக ஏற்றுக்கொண்டு அமைதிகாக்கும் அடிமை அதிமுக அரசுக்கும் இக்கூட்டம் தன் கடும் கண்டனங்களைப் பதிவு செய்கிறது.

கழகத் தலைவர் அவர்கள் அறிவுறுத்தியபடி, '12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில்தான் இனி மருத்துவப் படிப்புக்கான சேர்க்கை நடைபெறும். நீட் தேர்வு ரத்து செய்யப்படுகிறது' என்ற அவசரச் சட்டத்தைக் கொண்டுவந்து நிறைவேற்றிடுமாறு மத்திய, மாநில அரசுகளை இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் - 3

மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கைக்கு அகில இந்தியத் தொகுப்பு (All India Quota) முறை 1986-ல் வழங்கப்பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் அமலிலிருந்து வருகிறது. இதற்காக இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கு 15% இடங்களையும், முதுநிலை படிப்புகளுக்கு 25% சதவீத இடங்களையும் மாநில அரசு தன் பங்கீட்டிலிருந்து ஒதுக்கி வந்தது.

இதில் முதுநிலை (Post Graduate) சேர்க்கையிடமான 25% என்னும் மாநில பங்கீட்டு விகிதம் 2005-ம் ஆண்டு முதல் 50% சதவீதமாக்கப்பட்டு அகில இந்தியப் பகிர்வுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதில், பட்டியல் இனத்தவர்களுக்கு 15% இடங்களையும், பழங்குடியினருக்கு 7.5% இடங்களையும் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் 2007-ல் தீர்ப்பளித்தது. இதில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கென பிரத்தியேக இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை.

எனவே, முதுநிலை மருத்துவச் சேர்க்கைக்கான இடங்களில் மாநில பகிர்விலிருந்து அனைத்து இந்தியப் பகிர்வுக்கு அளிக்கப்படும் இடங்களில் (State Surrendered Seats) பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இதற்காகத் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் திமுக சட்டப்போராட்டம் நடத்தி வருகின்றது.

பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு கோரிக்கைக்கு எதிராக நீதிமன்றங்களில் வாதங்களை முன் வைத்து சமூக நீதிக்கு எதிராகச் செயல்படும் பாஜக அரசை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.

வரும் காலங்களில் மத்திய தொகுப்பிற்கு மாநிலங்கள் மருத்துவக் கல்வி இடங்களை அளிக்கும் முறையை அறவே ஒழித்திடும் வகையில் நடவடிக்கை எடுத்திட வேண்டும் எனவும் இக்கூட்டம் மத்திய-மாநில அரசுகளை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் - 4

இதர பிற்படுத்தப்பட்டோருக்கான கல்வி மற்றும் அரசுப்பணியிடங்களில் கிரிமிலேயர் வரம்பினை கணக்கிடச் சம்பளமும் ஒரு அளவுகோளாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்ற பிபி சர்மாவின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. இது பிற்படுத்தப்பட்ட இளைஞர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் முடிவாகும்.

அரசியல் அமைப்புச்சட்டத்தால் அமையப்பெற்ற தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வி மற்று சமூகச் சூழல்களை ஆய்வு செய்யவும் கண்காணிக்கவும் அதன்படி அரசுக்கு பரிந்துரைகள் அளிக்கவும் செயல்பட்டு வரும் நிலையில், அரசியல் அமைப்பின் சட்ட அங்கீகாரம் இல்லாத ஒரு பரிந்துரைக்குழு இட ஒதுக்கீட்டில் கிரிமிலேயர் வரம்பினை எளிதாக்குகிறோம், முறைப்படுத்துகிறோம் என்ற பெயரில் அளித்துள்ள பிற்படுத்தப்பட்டோர் விரோத பரிந்துரையை மத்திய அரசு ஏற்கக்கூடாது.

ஆரம்பத்தில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் இப்போது அமைதி காப்பது வருத்தமளிக்கும் ஒன்று. கிரிமிலேயர் வரம்பினை முடிவு செய்யும்போது மாத சம்பளத்தைக் கணக்கில் கொள்ளாமல், இதர வருமானத்தையே கணக்கில் கொள்ள வேண்டும் என்பது மத்திய அரசு முன் எடுத்த முடிவாகும்.

ஆனால், இப்போதைய பரிந்துரையால் ஒரு பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கணவனும் மனைவியும் மாதம் தலா ரூ.35,000 சம்பளம் வாங்கினால் அவர்களின் குழந்தைக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே, இந்த முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று திமுக இளைஞரணி வலியுறுத்துகிறது.

தீர்மானம் - 5

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அமைந்த நாள் முதல் பொதுத்துறை நிறுவனங்களில் தனியாரின் ஊடுருவல் ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. சில நேரங்களில் தனியார் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக பிஎஸ்என்எல் போன்ற பொதுத்துறை நிறுவனங்களே பலியாக்கப்பட்டும் வருகின்றன. தமிழகத்தில் கலைஞரின் பெருமுயற்சியால் கொண்டு வரப்பட்ட சேலம் உருக்காலை ரயில்வே, விமான சேவை, ராணுவத்தளவாடம், நிலக்கரி என அனைத்து பொதுத்துறைகளையும் தனியாருக்கு தாரை வார்ப்பதிலேயே அரசு குறியாகவுள்ளது.

இப்படி தனியாரை பொதுத்துறை நிறுவனங்களுக்குள் அனுமதிப்பதால், வேலை இழப்பு ஏற்படும் சூழல் வரும். அதுமட்டுமன்றி, இட ஒதுக்கீடு என்னும் முறை ஒழிக்கப்பட்டு சமூக நீதி புறந்தள்ளப்படும். எனவே, பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு ஒதுக்குவதைவிட அதன் பங்குகளை தகுதியும் விருப்பமும் கொண்ட மாநில அரசுகளுக்கு வழங்க மத்திய அரசு முன் வர வேண்டும் என்று திமுக இளைஞரணி கேட்டுக்கொள்கிறது.

மத்தியில் ஐமு கூட்டணி அரசின் போது முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியதன் மூலம் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை மாநில அரசுகள் வாங்க இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை கழகம் (Securities and Exchange Board of India -SEBI) கூட ஒப்புதல் அளித்தது. அதன் நீட்சியாகவே என்எல்சி-யின் 5% பங்குகள் தமிழக அரசால் வாங்கப்பட்டன.

எனவே, இப்போதும் இது போன்ற முறைகளை பின்பற்றலாம், உதாரணத்துக்கு ரயில் இயக்கத்தில் தனியாரை அனுமதிப்பதற்கு பதிலாக மாநில அரசுகளை பயன்படுத்திக்கொள்ளலாம். இது மாநில அரசுக்கு வருவாய் தருவதோடு, மத்திய அரசுக்கும் நன்மை பயக்கும். இதனால் தரமான சேவையும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் உறுதி செய்யப்படும். எனவே, இந்த யோசனையை கழகத் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி திமுக இளைஞரணி இக்கூட்டத்தின் வாயிலாக முன் வைக்கிறது.

தீர்மானம் - 6

கொரோனாவின் பிடியில் தமிழகமே தவித்து வரும் நிலையில், இதையும் கொள்ளையடிப்பதற்கான வாய்ப்பாகவே அதிமுக அரசு பார்ப்பது அநியாயமானது. பல இடங்களில் கிருமிநாசினி வாங்குகிறேன், மருந்து தெளிக்கிறேன் என்று ஆளுங்கட்சியினர் ஊழலில் திளைக்கும் செய்திகள் தினசரி வந்து கொண்டேயிருக்கின்றன.

எல்லாவற்றுக்கும் மேலாக, தொற்று அதிகமுள்ள சென்னை மாநகராட்சி பகுதிகளில் தொற்றைக்குறைக்க நடவடிக்கைகள் எடுக்காமல், தெர்மல் ஸ்கேனர், முகக்கவசம் உள்ளிட்ட மருத்துவக்கருவிகளை அதிக விலை கொடுத்து வாங்கும் முறைகேடுகளும் வெளி வந்துள்ளன.

ஏற்கனவே, தரமற்ற ரேபிட் கிட் பரிசோதனைக்கருவியை அதிக விலை கொடுத்து வாங்கி பேரிடரிலும் சட்டைப்பையை நிரப்பிக்கொண்ட தமிழக அரசு, தொடர்ந்து இத்தகைய ஊழல்களில் ஈடுபடுவது கண்டனத்துக்குரியது. ஊழலுக்கு எதிரான ஆட்சியைத் தருகிறேன் என்று சொல்லும் பிரதமரும், பாஜகவினரும், தங்களது கூட்டணிக்கட்சியின் அரசு இப்படி ஊழலில் மூழ்கி முத்தெடுப்பதைக் கண்டுகொள்ளாமல் இருப்பது அவர்களின் ஊழல் ஒழிப்பு முகத்திரையையும் சேர்த்தே கிழிக்கிறது.

எனவே, அதிமுக அரசில் கடந்த பத்தாண்டுகளாக நடக்கும் கொள்ளைகளுக்கும், இப்போது நடக்கும் கொரோனா கால ஊழலுக்கும் உரிய விசாரணை நடத்தி ஊழல்வாதிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

DMK Youth Wing urges to close TASMAC shops

தீர்மானம் - 7

ஆட்சியாளர்களின் செயலற்ற தன்மையால் கொரோனா தொற்று அதிகம் உள்ள மாநிலமாகவும். தொற்று வேகமாகப் பரவும் மாநிலமாகவும் தமிழகம் உள்ளது. ஆனால், இந்த நேரத்தில்கூட அரசுக்கு டாஸ்மாக் வருமானத்தை விட்டுக்கொடுக்க மனம் வரவில்லை. தொற்று அதிகம் உள்ளதால் சென்னையில் டாஸ்மாக் கடைகளைத் திறக்கவில்லை என்று முடிவெடுத்த அரசு, இப்போது தமிழகம் முழுக்கவே கொரோனா வேகமாகப் பரவி வரும் போது டாஸ்மாக் கடைகளை மூடாமல் இருப்பது ஏன்?

தங்களுக்குச் சாதகமான தீர்ப்பு வந்தால், நீதிமன்றமே சொல்லிவிட்டது என்றும், பாதகமான தீர்ப்பென்றால் உச்சநீதிமன்றம் வரை செல்வது, சீராய்வு மனு செய்வது என்று அலங்கோல ஆட்சி செய்யும் இவர்களுக்கு மக்கள் மீது கிஞ்சித்தும் அக்கறை இல்லை என்பதற்கான சான்றே தமிழகம் முழுவதும் திறந்துவைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடைகள்.

எத்தனையோ ஊர்களில் டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கும், கடைக்கு வருபவர்களுக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா இப்படி காட்டுத்தீயாகப் பரவி உயிர்களைப் பலி வாங்கி வரும் வேலையில், தமிழக அரசு டாஸ்மாக் கடைகள் திறந்து வைத்திருப்பது ஏன்? நோய்ப்பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் - 8

சென்னை - சேலம் எட்டு வழிச்சாலையைச் செயல்படுத்தினால் வாழ்வாதாரம் பறிபோகும் என்று காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் என பல்வேறு வட மாவட்டங்களின் பொதுமக்களும், விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த பிரச்சினையில் கழகத்தலைவர் அவர்கள் மக்கள் பக்கம் நின்று இந்த திட்டத்திற்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

இந்த திட்டத்துக்கு எதிரான மனுக்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இத்திட்டத்துக்கான நிலம் கையகப்படுத்தலைக் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் ரத்து செய்தது. இத்திட்டத்துக்கான அரசாணைகளும் அறிவிப்புகளும் கூட உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டன. இது விவசாயிகளுக்கு நிம்மதி அளித்தது.

2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது மக்கள் விரோத திட்டங்களைத் தமிழக அரசு செயல்படுத்தாது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் உறுதியளித்தார். ஆனால், தேர்தல் முடிந்த கையோடு சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்குத் தொடுத்தது.

'இதில் நிறையத் தவறுகள் உள்ளன' என்று உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. மேலும், இதுபற்றி விரிவாக விசாரணை நடத்த வேண்டிய தேவையும் உள்ளது என்று உச்சநீதிமன்றம் கடந்தாண்டு ஜூனில் சொல்லியிருந்தது.

இப்படி மக்கள் மன்றத்திலும் நீதிமன்றத்திலும் அதிருப்திகளைச் சம்பாதித்த எட்டுவழிச்சாலைத் திட்டத்தினை செயல்படுத்தத் துடிக்கும் மத்திய அரசு சமீபத்தில் அந்த வழக்கினை விரைந்து விசாரிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்திடம் கோரிக்கை வைத்துள்ளது.

விவசாயமே இந்தியாவின் முதுகெலும்பாக உள்ள நிலையில், விவசாயிகளுக்கு எதிரான எட்டுவழிச்சாலை திட்டம் தேச நலனுக்கான திட்டம் என்று ஆட்சியாளர்கள் நீதிமன்றத்தில் சொல்வது வேடிக்கையானது. இந்த திட்டத்தைச் செயல்படுத்த எத்தனிக்கும் மத்திய அரசுக்கும், பின்னால் நின்று வேடிக்கை பார்க்கும் மாநில அரசுக்கும் திமுக இளைஞரணி வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்வதுடன், இத்திட்டத்தை நிரந்தரமாகக் கைவிடும்படியும் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் - 9

இந்த கொரோனா பெருந்தொற்று நேரத்தில் சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை லட்சக்கணக்கானவர்கள் நாடெங்கும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த சூழலில், இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளைச் செப்டம்பர் அல்லது ஆண்டின் இறுதிக்குள் நடத்தியே தீருவது என்ற நிலைப்பாட்டில் மத்திய மனிதவளத் துறையும், பல்கலைக்கழக மானியக்குழுவும் உறுதியாக இருப்பது ஏற்கத்தக்கதல்ல.

ஏற்கனவே, கர்நாடகம், கேரளம் போன்ற மாநிலங்களில் அண்மையில் நடந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் பங்கேற்ற மாணவர்கள் பலர் கொரோனா தொற்றுக்கு ஆளாகினர். தேர்வு நடக்கும் போது மாணவர்களும், தேர்வறை கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட தேர்வுப்பணியாளர்களும் ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்துக்குப் பயணிக்கும் தேவை உள்ளது. மேலும், இந்த ஊரடங்கினால் பல நாட்கள் கழித்துச் சந்திக்கும் மாணவர்கள், திடீரென ஒன்று கூடும் போது கொரோனா பரவ அது வாய்ப்பாகிவிடும்.

திமுக தலைவர் உள்ளிட்ட பலர் ஆரம்பத்திலேயே குரல் கொடுத்தபோது கண்டுகொள்ளாமல் கொரோனா தடுப்பில் கோட்டைவிட்ட அரசு, இப்போது தேர்வுகளை நடத்தித் தொற்று பரவுவதற்கு வழிவகை செய்யக்கூடாது. மாணவர்கள் முந்தைய செமஸ்டர்களில் எழுதிய தேர்வு முடிவுகள் அடிப்படையில் இறுதியாண்டு செமஸ்டருக்கான முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்று திமுக இளைஞரணி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் - 10

11-ம் வகுப்புக்குப் பொதுத்தேர்வு கட்டாயம் என்ற முடிவினை தமிழக அரசு அமல்படுத்தியதிலிருந்து 12-ம் வகுப்புக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை வருடா வருடம் குறைந்து கொண்டேபோகிறது. பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் எனத் தொலைநோக்கு மிக்க தலைவர்களால் தமிழகம் கல்வியில் தலைநிமிர்ந்த காலம் போய், தவறான முடிவுகளை எடுக்கும் ஆட்சியாளர்களால் இன்றைக்குப் பள்ளி இடைநிற்றல் விகிதம் அதிகரித்து வருவதைப் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.

நீட் உள்ளிட்ட அகில இந்திய நுழைவுத் தேர்வுகளுக்கான கேள்விகள் 11-ம் வகுப்பு பாடத்திலிருந்தே கேட்கப்படுவதாகக் காரணம் சொல்லி 11-ம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு முறையைக் கொண்டு வந்த தமிழக அரசே இதற்குக் காரணமாகும். 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சியடையாத மாணவர்கள் மீண்டும் துணைத் தேர்வெழுதி 12-ம் வகுப்பு வருவதற்கு மனரீதியாகத் தயங்குகின்றனர். அதோடு 12-ம் வகுப்பில் இன்னொரு பொதுத்தேர்வினை எதிர்கொள்ளும் மனோதிடமும் அவர்களிடம் இல்லாமல் போகிறது.

எனவே, அவர்களில் பலர் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியானால் 10-ம் வகுப்பு மதிப்பெண்ணை வைத்து பாலிடெக்னிக், ஐடிஐ போன்றவற்றைத் தேர்வு செய்து கொள்கின்றனர். இன்னும் பலர் பத்தாம் வகுப்போடு நின்றும் விடுகின்றனர். இதனால், மருத்துவம்,பொறியியல், கலை அறிவியல், உள்ளிட்ட உயர்கல்வி பட்டப்படிப்புகளில் அவர்கள் சேர முடியாத சூழலைத் தமிழக அரசே உருவாக்கி வருகிறது.

எனவே, தினம் தினம் புதுப்புது அறிவிப்பை வெளியிடுவதும் அதனைத் திரும்பப்பெறுவதுமாகக் குழப்ப நிலையிலிருக்கும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அதிலிருந்து விடுபட்டு மாணவர்களின் இடைநிற்றலைத் தடுப்பதற்கு முழுவீச்சில் செயல்பட வேண்டும் என இந்தக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் - 11

முன்னாள் பிரதமர் அமரர் ராஜீவ்காந்தி அவர்களின் கொலை வழக்கில் சிறை சென்று கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாகச் சிறைவாசத்தை அனுபவித்து வரும் பேரறிவாளன், முருகன், சாந்தன், உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய மத்திய அரசும், மாநில அரசும் உடனடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

இந்த வழக்கினை புலனாய்வு செய்த விசாரணை அதிகாரியே பேரறிவாளனின் வாக்குமூலத்தைச் சரியாகப் பெறவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த நிலையில், வாழ்நாளின் பெரும்பகுதியைச் சிறை கொட்டடியிலேயே கழித்துவிட்ட 7 தமிழர்களின் விடுதலையை மத்திய மாநில அரசுகள் உடனே உறுதி செய்ய வேண்டும் என்று இந்தக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் - 12

குறுவை நடவுக்குத் தயாராகி வரும் விவசாயிகளுக்கு நகைக்கடன் கிடையாது என்ற கூட்டுறவு வங்கிகளின் அறிவிப்பு பேரிடியாக அமைந்துள்ளது. இந்தக் கொரோனா காலத்தில், அரசின் தவறான முடிவுகளால் விவசாயிகள் வருவாயின்றி தவித்து வருகின்றனர். பணப்புழக்கம் என்பது ஊரடங்கினாலும், நோய்ப்பரவலாலும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

குறுவை நடுவதற்கு நிலத்தைத் தயார் செய்யும் பொருட்டு உழுவது, களைபறிப்பது, வாய்க்கால் வரப்பு வெட்டுவதற்கான கூலி கொடுக்கவும், உரம், நாற்றுக்கட்டு, விதைநெல் போன்றவற்றை வாங்கவும் பணமின்றி விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

குறிப்பாக நடுத்தர மற்றும் குறு விவசாயிகளின் வீட்டில் உள்ள பெண்கள் கையில், காதில் கிடக்கும் நகைகளைக் கூட்டுறவு வங்கிகளில் அடமானம் வைத்து பணம் புரட்டி அதன் மூலம் குறுவைக்கான பணிகளைத் தொடங்கலாம் என நினைத்திருந்தனர். ஆனால், கூட்டுறவு வங்கிகளின் முடிவால் அவர்கள் செய்வதறியாது திகைத்துப் போயுள்ளனர்.

கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியுடன் இணைக்கும் முடிவினை மத்திய அரசு எடுத்ததற்குப் பின்பே இத்தகைய விவசாயிகள் விரோத நிகழ்வுகள் அரங்கேறுகின்றன. எனவே, ஊரகப்பகுதிகளின் அட்சயப்பாத்திரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்குக் கைகொடுத்தும் வருகின்ற கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடனைத் தொடர்ந்து வழங்குவதை உறுதிப்படுத்திடவும், நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு போகும் முடிவினை கைவிட வேண்டும் என்றும் இக்கூட்டத்தின் வாயிலாக மத்திய-மாநில அரசுகளைக் கேட்டுக்கொள்கிறோம்.

தீர்மானம் - 13

கொரோனா ஊரடங்கினால் நிலவி வரும் பொருளாதார தேக்க நிலையைக் காரணம் காட்டி தனியார் நிறுவனங்கள் ஆட்குறைப்பில் ஈடுபட்டு வருகின்றன. பல நிறுவனங்கள் மூடப்படும் சம்பவங்களும் நடக்கின்றன. இந்த சூழலில் வேலையிழப்பாலும், ஊதிய இழப்பாலும் பாதிக்கப்படுபவர்களைக் கண்டு கொள்ளாமல் இருக்கும் தமிழக அரசு, தன் பங்கிற்கு தானும் புதிய அரசுப்பணிகளை உருவாக்குவதை நிறுத்தி வைத்து அரசாணை வெளியிட்டுள்ளது கொடுமையின் உச்சமாகும். இதனால், அரசுவேலை பெறுவதை இலக்காக வைத்து போட்டித்தேர்வுகளுக்கு தயாராகி வரும் லட்சக்கணக்கான பட்டதாரி இளைஞர்களின் கனவுகளில் மண் விழுந்துள்ளது.

ஏற்கனவே, பணிகளிலிருந்து ஓய்வுபெறுபவர்களின் ஓய்வுக்கால பலன்களை உடனே வழங்குவதைத் தாமதப்படுத்துவதற்காக அவர்களுக்குப் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதன் பின்னணியில்தான் புதிய பணியிடங்களுக்குத் தடை விதித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகப் பார்க்கமுடிகிறது. இதனை திமுக இளைஞரணி வன்மையாகக் கண்டிப்பதுடன், அரசாணையைத் திரும்பப் பெறுமாறும் அரசைக் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் - 14

சாத்தான்குளம் ஜெயராஜ்-பென்னிக்ஸை போலீசார் அடித்தேக்கொன்ற சோகத்தின் ஈரம் காய்வதற்குள், அதே சாத்தான்குளம் அருகே 8-வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட கொடூரமும் அரங்கேறியுள்ளது. இதற்கு முன்பாக, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஏம்பலில் 7-வயது சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த ஒருவன் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கொடூரமாகக் கொலை செய்த சம்பவமும் நடந்தது.

இப்படி தமிழகம் முழுவதும் சிறுமிகளுக்கும், இளம் பெண்களுக்கும் எதிரான குற்றங்கள் பெருகி வருவது காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதல்வர் பழனிசாமியின் செயல்படாதத்தன்மையும், தோல்வியையுமே காட்டுகின்றன. கொரோனா விவகாரத்தைப் போலவே, சட்டம் ஒழுங்கிலும் கோட்டைவிடும் பழனிசாமி அரசுக்கு திமுக இளைஞரணி கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறது. இத்தகைய குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

DMK Youth Wing urges to close TASMAC shops

தீர்மானம் - 15

சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை, மகனான ஜெயராஜ்-பென்னிக்ஸை போலீசார் அடித்தேக்கொன்ற சம்பவம் உலகையே உலுக்கியது. தமிழகம் மட்டுமன்றி சர்வதேச சமூகமும் இந்த அநீதிக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தது. நமது கழகத் தலைவர் அவர்கள் தொடர்ந்து கொடுத்த அழுத்தத்தின் காரணத்தாலும், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை காட்டிய அதிரடியாலும் இவ்வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.

ஏற்கனவே, பொள்ளாச்சி பாலியல் வன்முறைச் சம்பவத்தால் ஏராளமான பெண்கள் பாதிக்கப்பட்டபோது கழகம் கொடுத்த அழுத்தம் மற்றும் நீதிமன்ற நெருக்கடிகளாலும் அவ்வழக்கை சிபிஐ கையிலெடுத்து விசாரித்து வருகிறது. அந்த வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து ஓராண்டுக்கு மேலாகியும் குற்றவாளிகள் இன்னமும் தண்டிக்கப்படவில்லை என்பது வருத்தத்துக்குரிய செய்தி. குட்கா ஊழல் உள்ளிட்ட சில வழக்குகளும் இதேபோன்று முடிவு தெரியாமல் நீண்டு கொண்டே இருக்கின்றன.

அவற்றைப்போல, சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கிலும் தொய்வு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் கழகமும், கழகத் தலைவர் வழிகாட்டுதல் படி செயல்படும் இளைஞரணியும் உறுதியாகவுள்ளது. சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கில் குற்றவாளிகள் தப்பித்திடாத வண்ணம், சிபிஐ விசாரணைக்குத் தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்கி ஜெயராஜ், பென்னிக்ஸின் குடும்பத்துக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் பொள்ளாச்சி பாலியல் வன்முறை வழக்கைத் துரிதப்படுத்த வேண்டும் என்றும் இந்தக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் - 16

தமிழகத்தில் ஆன்லைன் வகுப்பு நடத்த அனுமதியில்லை என்று கடந்த மே மாதம் 27-ம் தேதி காலையில் சொன்ன பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அடுத்த சில மணி நேரங்களில் ஆன்லைன் வகுப்புக்குத் தடையில்லை என்று யு-டர்ன் அடித்தார். இதுபோல பல மாணவர் விரோத அறிவிப்புகளை வெளியிடுவதும், பின்னர் நமது கழகத் தலைவர் கண்டித்ததும் அதனைத் திரும்பப்பெறுவதுமே அமைச்சருக்கு வாடிக்கையாகிவிட்டது.

இந்நிலையில், டிவி சேனல்கள் மூலம் வகுப்புகள் எடுக்கப்படும் என்று அமைச்சர் சமீபத்தில் அறிவித்தார். ஆனால், மத்திய மனித வள மேம்பாட்டுத்துறையோ ஆன்லைன் வகுப்பு எடுக்கலாம் என்று கூறியுள்ளது. தனியார்ப் பள்ளிகளும் ஆன்லைன் வகுப்பு எடுக்கிறோம் என்று கல்விக்கட்டணம் வசூல் செய்ய ஆயத்தமாகி வருகின்றன.

இந்த சுழலில், அரசுப் பள்ளி மாணவர்கள் டிவி சேனலிலும், தனியார்ப் பள்ளி மாணவர்கள் ஸ்மார்ட்போனிலும் கல்விகற்பது என்பது ஏற்றத்தாழ்வுக்கு வழிவகுக்கும். மேலும், நடுத்தர குடும்பத்தினர் தங்களுடைய 2 அல்லது 3 குழந்தைகளைத் தனியார்ப் பள்ளியில் சேர்த்திருக்கும் பட்சத்தில், அவர்களுடைய ஸ்மார்ட்போனையே குழந்தைகளிடம் கொடுத்து ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கச் செய்யும் நிலை உள்ளது. இதனால் பெற்றோருக்கு மொபைல் அழைப்புகள் வரும்போது குழந்தைகளின் பாடம் தடைப்படும் வாய்ப்பும் உள்ளது.

மேலும், ஆன்லைன் கல்வி கற்பிக்கக் குறிப்பிட்ட நேர இடைவெளியை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை வகுத்துள்ளது. அதனைப் பள்ளிகள் பின்பற்றுகின்றனவா என்பதைக் கண்காணிப்பது எப்படி? ஆன்லைன் வகுப்பால் குழந்தைகள் மனோரீதியாகவும், உடல்ரீதியாகவும் பாதிக்கப்பட்டால், அதற்கு யார் பொறுப்பேற்பது?

இப்படிப் பல கேள்விகளுக்கு அரசிடம் உரியப் பதில் இல்லை. எனவே, தெளிவில்லாமல் ஆன்லைன் வகுப்பு, டிவி சேனல் வகுப்பு என்று மாணவர்கள் வாழ்க்கையோடு விளையாடும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டிக்கும் இக்கூட்டம், பெற்றோர்-மாணவர்-ஆசிரியர் நலனை கருத்தில்கொண்டு தெளிவான முடிவை எடுத்திடுமாறு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் - 17

தமிழகத்தில் நிலவி வந்த ஈராயிரமாண்டு ஏற்றத்தாழ்வுகளையும், அடக்குமுறைகளையும், மூட நம்பிக்கைகளையும் ஒழிப்பதற்காக இறுதி வரை பெருந்தொண்டு செய்த தந்தை பெரியாரின் சிலைகளை சில வன்மக்காரர்கள் ஆங்காங்கே அவமதித்து வரும் சம்பவங்கள் எதற்கும் லாயக்கற்ற அதிமுக ஆட்சியில் தொடர்ந்து வருகின்றன.

சுயமரியாதையையும், பகுத்தறிதலையும் சொல்லித்தந்த பெரியாரின் சித்தாந்த வலிமைக்கு முன் மண்டியிட்ட இவர்கள்தான் பெரியார் இறந்து இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டபோதும் அவரது சிலைகளைக் குறிவைத்து வருகின்றனர்.

இப்படிச் செய்து சட்டம் ஒழுங்கை கெடுத்து அதன் மூலம் எப்படியாவது நோட்டாவை வெல்லத் துடிப்பவர்களுக்கு அண்ணா பெயரையும் பெரியார் போதித்த 'திராவிடம்' என்னும் பெயரையும் தாங்கியிருக்கும் அதிமுக அரசு துணை போவதை இக்கூட்டம் கண்டிக்கிறது.

தீர்மானம் - 18

மாணவர்களின் சுமைகளைக் குறைக்கிறேன் என்று சொல்லி சிபிஎஸ்இ பாடத்தில் ஜனநாயகத்தின் மாண்புகளை வலியுறுத்தும் பாடங்கள் திட்டமிட்டு நீக்கப்பட்டுள்ளன. சிபிஎஸ்இ 11-ம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடத்திலிருந்து குடியுரிமை, கூட்டாட்சி, ஜனநாயக உரிமைகள் உள்ளிட்ட பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் அரசியல் அறிவு பெற்றுவிடக் கூடாது என்பதுவே இதன் உள்நோக்கம்.

இதுமட்டுமன்றி, 'தலித்துகளின் வீடுகள் ஊருக்கு ஒதுக்குப்புறமாக மண்குடிசையாலும் ஓலையாலும் சிறிதாகக் கட்டப்பட்டிருக்கும்' என்ற ஏற்றத்தாழ்வைப் போதிக்கும் பாடத்தினை தக்கவைத்த சிபிஎஸ்இ-யால், பெரியார் சிந்தனைகள், இந்தியத் தேசிய ராணுவத்தில் தமிழர்களின் பங்கு, ம.பொ.சியின் எல்லை போராட்ட வரலாறு போன்ற பாடங்களை மட்டும் வைத்துக்கொள்ள முடியாமல் போனது ஏன்?

இத்தகைய தமிழர் விரோத, ஒடுக்கப்பட்டோர் விரோத மனப்பான்மையைப் பின்பற்றும் மத்திய பாஜக அரசுக்கு இந்தக்கூட்டம் கடும் கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறது.

தீர்மானம் - 19

தமிழகத்தில் நேரடியாக மக்களைச் சந்தித்து வெல்ல முடியாத சிலர் தங்களுக்கான ஏஜண்டுகளாக சில பொய்யர்களைச் செலவு செய்து களத்தில் இறக்கியுள்ளனர். தமிழகத்தின் தலைசிறந்த பத்திரிகையாளர்கள், ஊடகங்கள், ஏன் கழகத்தின் மீது கூட அடிப்படை ஆதாரமற்ற போலியான குற்றச்சாட்டுக்களை அந்த போலிகள் பரப்பி வருகின்றனர்.

'ஒன்றே குளம் ஒருவனே தேவன்' என்று சொன்ன அண்ணா வழியில் பயணிக்கும் தி.மு.கவுக்கென தனித்த வெளிப்படையான கொள்கைகள் உண்டு. கழகம் யாருடைய மனதையும் புண்படுத்துவதும் இல்லை, யாருடைய நம்பிக்கைக்கும் எதிரானதும் இல்லை.

ஆனால் பொய்களாலும், கற்பனைகளாலும் கட்டமைக்கப்பட்ட கருத்துக்களைக் கூலிக்கு மாரடிக்கும் அந்தக்கூட்டம் பரப்பி வருவதை அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. அவர்கள் ஒரு புரளியை அவிழ்த்துவிட்டு அதன் மூலம் தமிழகத்தில் ஏதேனும் கலவரம் வராதா.... அதில் குளிர்காய்ந்து நாம் அதிகாரத்தைக் கைப்பற்ற முடியாதா என்று கனவு காணும் அந்தக்கூட்டம் இது திராவிடத்தால் பண்பட்ட தமிழக மண் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

பத்திரிகையாளர்கள், ஊடகங்கள் போன்றவற்றுக்கு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் அந்த கும்பலைக் கைகட்டி வேடிக்கை பார்க்கும் தமிழக அரசினை இக்கூட்டம் கடுமையாகக் கண்டிக்கிறது.

தீர்மானம் - 20

இந்தியாவில் எங்கும் இல்லாத பல புதுமையான திட்டங்களால் தமிழகத்தின் வளர்ச்சிக்கு வித்திட்ட முத்தமிழறிஞர் கலைஞர், விவசாயிகளின் நலன் கருதி நாட்டில் முதன்முதலாக இலவச மின்சாரத் திட்டத்தை 2006-ல் கழகம் ஆட்சி அமைத்த போது கொண்டு வந்தார். இது விவசாயிகளுக்குப் பேருதவியாக இருந்து வரும் சூழலில், அதற்கு வேட்டு வைக்கும் விதமாக மின்சார சட்டத்திருத்த மசோதாவைக் கொண்டு வருவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.

இந்த திட்டத்துக்கான ஒப்புதலைப்பெற மத்திய மின்சக்தித்துறை அமைச்சர் ராஜ்குமார் சிங் மாநிலம் மாநிலமாகப் பறந்து கொண்டிருக்கிறார். அண்மையில் தனி விமானத்தில் தமிழகம் வந்த அவர், முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடமும் அதற்கு ஆதரவு திரட்டினார். இந்த மசோதா நிறைவேறினால் இலவச மின்சாரம், சலுகை விலை மின்சாரம் என எந்த பலனையும் பொதுமக்களும் விவசாயிகளும் அனுபவிக்க முடியாது.

தமிழகத்தில் சுமார் 24 லட்சம் விவசாய மோட்டார் பம்பு செட்டுகள், குடிசை வீடுகள், 78 ஆயிரம் கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும் சூழல் வரும். எனவே, கலைஞரின் சிந்தனையில் உதித்து விவசாயிகள் பலன்பெற்று வரும் இலவச மின்சாரத் திட்டத்தை நசுக்க முயல்வதை இந்தக் கூட்டம் கடுமையாக எதிர்க்கிறது.

தீர்மானம் - 21

இந்த கொரோனா தொற்று காலத்தில் ஊரடங்கினால் வீடுகளில் இருக்கும் தமிழக மக்களிடம் மின்சாரக் கட்டணம் என்ற பெயரில் அதிமுக அரசு பகல் கொள்ளையினை நடத்தி வருகிறது. 500 ரூபாய் மின் கட்டணம் செலுத்திய இடத்தில் ரூ.5000 வருவது எப்படி என்று கேட்டால், உரியப் பதிலைச் சொல்லாத அரசு, தொடர்ந்து அதிகக்கட்டணம் வசூலிக்கும் அட்டூழியத்தில் ஈடுபட்டு வருகிறது.

எல்லோரும் வீட்டில் இருப்பதால் தான் அதிகக்கட்டணம் வருகிறது என்று ஆட்சியாளர்கள் பச்சையாகப் பொய் சொல்கின்றனர். கொரோனா உதவித்தொகை என்று வெறும் ரூ.1000-த்தை நீட்டிவிட்டு, மின் கட்டணம் என்று பல ஆயிரங்களை வசூல் செய்யும் இந்த மக்கள் விரோத அரசின் கொள்ளைக்கு இக்கூட்டம் கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது.

மேலும், இப்பேரிடரில் வாழ்வாதாரம் இழந்த சாமானியர்களை மின்கட்டணம் என்னும் பெயரில் சூறையாடும் அரசினைக் கண்டித்து நமது கழகத் தலைவர் ஜூலை 21 அன்று கருப்பு கொடியேற்றி கண்டன முழக்கமிடும் ஆர்ப்பாட்டத்தினை அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை நம் கழகத் தலைவர் வெளியிட்ட சில மணித்துளிகளிலிருந்தே தமிழகம் முழுவதும் கட்சி எல்லைகளைக் கடந்து ஆதரவு பெருகி வருகிறது.

மின்கட்டணம் என்று வழிப்பறி செய்யும் கூவத்தூர் அரசினை கண்டித்து ஜூலை 21 அன்று நடக்கும் கறுப்புக்கொடி ஏற்றும் கண்டன முழக்க ஆர்ப்பாட்டத்தில் இளைஞரணி நிர்வாகிகள் தவறாது பங்கேற்க வேண்டும் என்றும், போராட்டத்தின் போது இளைஞரணியினர் அவரவர் வீட்டில் கருப்பு கொடியேற்றி கழகத்தலைவர் அவர்கள் வகுத்துத் தந்த கண்டன முழக்கங்களை உரக்கச் சொல்ல வேண்டும் என்றும் இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, சென்னை மேற்கு மாவட்ட திமுக கழக செயலாளர் ஜெ.அன்பழகன், முன்னாள் மாவட்டக் கழகச் செயலாளர் எல்.பலராமன், அ.அம்பலவாணன்... உள்பட சமீபத்தில் காலமான திமுக முன்னோடிகள், இளைஞரணி நிர்வாகிகள், அவர்களின் உறவினர்கள் உள்ளிட்டவர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
English summary
DMK Youth Wing Special Session passed resolution to urge to Close of All TASMC shopls.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X