சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காவிரி மிகை நீரை... தமிழகம் பயன்படுத்திக் கொள்ள... கர்நாடகாவின் அனுமதி தேவை இல்லை... வைகோ அறிக்கை

Google Oneindia Tamil News

சென்னை: காவிரி வைகை குண்டாறு இணைப்பு திட்டத்திற்குக் கர்நாடக தலைவர் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், காவிரி மிகை நீரை தமிழகம் பயன்படுத்திக் கொள்ள கர்நாடகாவின் அனுமதி தேவை இல்லை என்று மதிமுக தலைவர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

காவிரி - தெற்கு வெள்ளாறு - வைகை - குண்டாறு ஆகிய ஆறுகளை இணைக்கும் திட்டத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிப்ரவரி 21ஆம் தேதி அடிக்கல் நாட்டினார். சுமார் 14,400 கோடி ரூபாய் செலவில் ஆறாயிரம் கன அடி மிகை நீரை வறட்சி மிக்க தென் மாவட்டங்களுக்கு மடைமாற்றும் வகையில் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்குக் கர்நாடக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். காவிரி ஆறுகள் இணைப்புத் திட்டம் குறித்து மத்திய அரசிடம் புகார் தெரிவிப்போம் என கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி தெரிவித்திருந்தார்.

கர்நாடக தலைவர்கள் எதிர்ப்பு

கர்நாடக தலைவர்கள் எதிர்ப்பு

அதேபோல கர்நாடகா பாஜக அரசின் முதலமைச்சர் எடியூரப்பா, "தமிழக அரசு செயல்படுத்தத் திட்டமிட்டுள்ள ஆறுகளை இணைக்கும் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம். காவிரியின் மிகை நீரை தமிழகம் பயன்படுத்திக்கொள்ள நினைப்பதைத் தடுத்து நிறுத்துவோம்" என்று கூறியிருந்தார். அதைப் போலவே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கர்நாடக எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா, "இது குறித்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.

அனுமதி தேவையில்லை

அனுமதி தேவையில்லை

இந்நிலையில், காவிரி மிகை நீரை தமிழகம் பயன்படுத்திக் கொள்ள கர்நாடகாவின் அனுமதி தேவை இல்லை என்று மதிமுக தலைவர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி, வழக்கமான மழை ஆண்டில் தமிழகத்திற்கு 177.25 டி.எம்.சி. நீரை பிலிகுண்டுலு நீர் அளவை உறுதி செய்வது மட்டுமே கர்நாடக அரசின் வேலையாகும். தமிழகத்திற்கு வரும் காவிரி நீரை வடிநிலப் பகுதியான தமிழகம் தக்க வழியில் பயன்படுத்துவதற்குக் கர்நாடக அரசின் அனுமதி தேவை இல்லை.

அலட்சியம்

அலட்சியம்

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பையும், உச்சநீதிமன்றத் தீர்ப்பையும் தொடர்ந்து அலட்சியப்படுத்தி வரும் கர்நாடக அரசு, 9 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் காவிரியின் குறுக்கில், மேகேதாட்டு தடுப்பு அணை அமைக்க முனைந்துள்ளது. இதன் மூலம் 67.16 டி.எம்.சி. நீரைச் சேமித்து வைத்து, பெங்களூரு நகர குடிநீர் தேவைக்கும், அணை நீரைப் பயன்படுத்தி 400 மெகாவாட் நீர்மின் உற்பத்தித் திட்டத்தைச் செயல்படுத்தவும் திட்டமிட்டு உள்ளது. காவிரி நீர் பங்கீடு தொடர்பான 1892 மற்றும் 1924 ஆம் ஆண்டு ஒப்பந்தங்களை மீறி 1965 ஆம் ஆண்டிலிருந்து அணைகளைக் கட்டி, தமிழ்நாட்டுக்கு வரும் தண்ணீரைத் தடுத்துவிட்டது.

காவிரி நீர்ப்பாசன பரப்பு

காவிரி நீர்ப்பாசன பரப்பு

1974 இல் கர்நாடகத்தின் பாசனப் பரப்பு வெறும் 6.8 லட்சம் ஏக்கர்தான் இருந்தது. கர்நாடக அரசு தனது பாசனப் பரப்பை 11.2 லட்சம் ஏக்கருக்கு மேல் விரிவாக்கம் செய்யக் கூடாது என்று காவிரி நடுவர் மன்றம் தனது இடைக்காலத் தீர்ப்பில் தெரிவித்திருந்தது. ஆனால் அதை மீறி கர்நாடகம் பாசனத் திட்டங்களை விரிவுபடுத்தியது. 2007இல் 18.8 லட்சம் ஏக்கராகவும், தற்போது 13 ஆண்டுகளில் 21 லட்சம் ஏக்கராகவும் இது அதிகரித்துவிட்டது. இதனை இன்னும் ஐந்து ஆண்டுகளில் 30 இலட்சம் ஏக்கராக உயர்த்த இலக்கு நிர்ணயித்து, அதில் ஒரு பகுதியாக மேகேதாட்டு அணைத் திட்டத்தை உருவாக்கி உள்ளது.

உரிமை இல்லை

உரிமை இல்லை

ஆனால், தமிழ்நாட்டின் நிலை என்ன? 1971 இல் காவிரிப் படுகைப் பகுதிகளில் 25.03 ஏக்கராக இருந்த பாசனப் பரப்பு, தற்போது 16 இலட்சம் ஏக்கராகச் சுருங்கிவிட்டது. இந்நிலையில், தமிழகத்திற்கு முறைப்படி அளிக்க வேண்டிய காவிரி நீரைத் தடுத்து வரும் கர்நாடக மாநிலம், காவிரியின் மிகை நீரை தமிழகம் பயன்படுத்திக் கொள்வதைத் தடுப்பதற்கு எந்த உரிமையும் இல்லை. தமிழக அரசு இதனைத் திட்டவட்டமாக உச்சநீதிமன்றத்திலும், மத்திய அரசிற்கும் தெளிவுபடுத்திவிட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

English summary
Don't need the approval of Karnataka for using surplus Cauvery water says MDMK chief Vaiko
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X