சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

Exclusive: மகன் பெயரில் மெஸ் நடத்துறேன்.. நிம்மதியா இருக்கேன்.. 'அம்மா'வுக்கு நன்றி.. ஜீவஜோதி

Google Oneindia Tamil News

சென்னை: மறுமணம் செய்து கொண்டு தஞ்சையில் நிம்மதியாக இருக்கிறேன். ஒரு மகன் இருக்கிறான். அவனது பெயரில் சின்னதாக ஒரு மெஸ் நடத்துகிறேன் என்று கூறுகிறார் ஜீவஜோதி.

தமிழக மக்களை ஒரு காலத்தில் பரபரப்பில் மூழ்கடித்தவர் ஜீவஜோதி.. இன்று அமைதியான முறையில் தனது வாழ்க்கையை நடத்தி வருகிறார். கணவர் சாந்தகுமாரை பறி கொடுத்த பெரும் துயரத்தில் மூழ்கிய ஜீவஜோதி அதன் பின்னர் சென்னையிலிருந்து தஞ்சைக்கு இடம் பெயர்ந்து சென்று விட்டார்.

dont hesitate to sue if you are right says jeevajothi

இடை இடையே வழக்கின் தீர்ப்புகள் அடுத்தடுத்து வந்தபோது செய்திகளில் அடிபட்டார். இப்போது மீண்டும் ஜீவஜோதியின் பெயரை தமிழக மக்கள் உச்சரிக்கின்றனர். காரணம், ராஜகோபாலுக்கு உறுதி செய்யப்பட்ட ஆயுள் தண்டனை. சரி இப்போது ஜீவஜோதி எப்படி இருக்கிறார்.. ஒன்இந்தியா தமிழ் இணையதளத்துக்காக அவரை அணுகினோம். அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்ட தகவல்கள்..

கேள்வி: உங்களுடைய காதல் கணவர் சாந்தகுமார் கொலை வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்: உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை வரவேற்கிறேன். பாதிக்கப்பட்டவள் என்ற முறையில் இது போன்ற தீர்ப்பு தான் வர வேண்டும் என நான் நினைத்தேன். தீர்ப்பு காலதாமதமாக வந்தாலும், குறை சொல்ல முடியாத வகையில் உள்ளது. ஜெயலலிதா இல்லையென்றால் எனது புகார் மனு குப்பை தொட்டிக்கு போயிருக்கும். அவரால் தான் வழக்குபதியப்பட்டு போலீஸ் விசாரணையே நடைபெற்றது.

கேள்வி: நீண்ட நெடிய சட்டப்போராட்டத்துக்கு பின் தீர்ப்பு வந்த அந்த தருணத்தில், தங்கள் மனநிலை எப்படி இருந்தது?

பதில்: வழக்கு விசாரணையின் போது எனது தந்தை உயிரோடு இருந்தார். ஆனால் இந்த தீர்ப்பு வந்த நேரத்தில் அவர் உயிரோடு இல்லை என்பதை நினைத்து அழுதேன். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தான் அவர் இறந்தார். அவர் உயிரோடு இருந்திருந்தால் இந்த தீர்ப்பை கேட்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருப்பார். இது போன்ற தீர்ப்பு வர வேண்டும் என்பதற்காக நான் வேண்டாத கடவுள் இல்லை.

dont hesitate to sue if you are right says jeevajothi

கேள்வி: கடந்த 19 ஆண்டுகாலமும் உங்களுக்கு துணையாக, பக்கபலமாக யார் இருந்தார்கள்?

பதில்: எனக்கு எனது குடும்பத்தினர், காவல்துறையினர், உறவினர்கள் என அனைவரும் துணை நின்றார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக ஜெயலலிதா அம்மா எனக்கு பக்கபலமாக இருந்தார். அவரை கண்ணீரோடு நான் சந்தித்த நிமிடத்தை நினைத்தால் உடல் சிலிர்க்குது. அவரை பார்த்த போது, நான் வணக்கம் தெரிவிக்கவில்லை, காலில் விழவில்லை அழுகுரலோடு நியாயம் வேண்டும் என புகார் மனுவை அளித்தேன். அதை அவர் வாங்கிக்கொண்டார். உடனடியாக காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி உண்மையை கண்டறிந்தனர்.

நேர்மையான காவல்துறை அதிகாரிகள் எனது வழக்கை விசாரித்தனர். திரிபாதி ஐ.பி.எஸ்., ஏ.சி.ராமச்சந்திரன் போன்ற நேர்மையானவர்களால் வழக்கு விசாரிக்கப்பட்டது. ஜெயலலிதா இல்லை என்றால் ராஜகோபால் பணபலத்துக்கும், ஆள்பலத்துக்கும் இந்த வழக்கு என்றோ காணாமல் போயிருக்கும். ஜெயலலிதா காலில் விழுந்து அழத் துடிக்கிறேன். ஆனால் அவர் இல்லையே (வருத்தம் தோய்ந்த குரலில்). இப்படி பலரும் எனக்கு துணை நின்றதால் தான் சட்டப்போராட்டத்தை நடந்த முடிந்தது.

கேள்வி: நீங்கள் இப்போது எங்கு வசிக்கிறீர்கள்? என்ன செய்கிறீர்கள்?

பதில்: மறுமணம் செய்துகொண்டு அமைதியான முறையில் தஞ்சையில் வாழ்ந்து வருகிறேன். பவின் என்ற பையன் இருக்கிறான். அவன் பெயரில் சிறிய அளவில் நான் வெஜ் மெஸ் நடத்துகிறோம். கூடவே, பெண்களுக்கான தையலகம் ஒன்றையும் நடத்தி வருகிறோம்.

கேள்வி: தனிப்பெண்ணாக சட்டப்போராட்டம் நடத்தி வருபவர்களுக்கு நீங்கள் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?

பதில்: உண்மை இருக்கும்பட்சத்தில் உடனடியாக அதை வெளிக்கொண்டு வாருங்கள். மனம் தளராமல் வழக்குத் தொடர்ந்து நடத்துங்கள். தவறு இல்லை என்றால் ஏன் அஞ்ச வேண்டும்? மன தைரியத்தோடு போராட முன்வாருங்கள் நியாயம் கிடைக்கும்.

உண்மைதான்.

English summary
Jeevajothi is much relieved now after the life term for Saravan Bhavan owner Rajagopal has been confirmed by SC.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X