சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சுங்க கட்டணத்துக்கான காரணம் கந்துவட்டியைவிட படுமோசமானது.. ராமதாஸ் கடும் கண்டனம்

Google Oneindia Tamil News

சென்னை: தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் தொடர்பாக காட்டப்படும் கணக்குகள் கந்துவட்டியைவிட படுமோசமானதாக இருக்கிறது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டாக்டர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக்கட்டணம் எந்த அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது என்பது குறித்து தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் மத்திய அரசு விளக்கம் அளித்திருக்கிறது. சுங்கக் கட்டணம் நீண்ட காலமாகவும், அளவுக்கு அதிகமாகவும் வசூலிக்கப்படுவதற்கு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கூறியுள்ள காரணங்கள், கந்து வட்டியை நியாயப்படுத்தும் வகையில் தான் அமைந்துள்ளன.

தமிழ்நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 45 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் ஆண்டுக்கு ஒரு முறை சராசரியாக 20 விழுக்காடு வரை உயர்த்தப்படுகின்றன. ஒவ்வொரு முறை சுங்கக் கட்டணம் உயர்த்தப்படும் போது அதற்கு மக்களிடையே எதிர்ப்பு எழுவதும், அதை நெடுஞ்சாலைகள் ஆணையம் கண்டுகொள்ளாமல் இருப்பதும் வாடிக்கையாகி விட்டது. நெடுஞ்சாலைகளுக்கு அதிகபட்சமாக 15 ஆண்டுகள் மட்டுமே முழுமையான சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படும்; அதன்பின்னர் பராமரிப்புக்கான கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தாலும் கூட, அது நடைமுறைக்கு வருவதற்கான அறிகுறிகள் கண்ணுக்கெட்டியவரை தெரியவில்லை.

இன்னமும் நீடிக்கும் வசூல்

இன்னமும் நீடிக்கும் வசூல்

சென்னை தாம்பரம் -திண்டிவனம் இடையே பயணிப்பதற்கான 45 எண் கொண்ட தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டை அடுத்த பரணூரிலும், திண்டிவனத்திற்கு முன்பாக ஆத்தூரிலும் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை இரண்டிலுமே 24 மணி நேரம் வாகனங்கள் நீண்ட வரிசைகளில் நிற்கும். இந்த சுங்கச்சாவடிகளில் கட்டணமும் அதிகமாக வசூலிக்கப்படும். ஆனாலும் கடந்த 14 ஆண்டுகளாக தொடர்ந்து சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுவது ஏன்? என்ற வினாவுக்கு மட்டும் விடை கிடைக்கவில்லை.

சுங்க கட்டண கொள்ளை

சுங்க கட்டண கொள்ளை

இப்போது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் தகவல் பெறும் உரிமை சட்டத்தின்படி பெற்றுள்ள விளக்கத்தின் மூலமாகத் தான் சுங்கக்கட்டணம் வசூலிப்ப்பதில் நடக்கும் கொள்ளை அம்பலமாகியுள்ளது. தாம்பரம் - திண்டிவனம் இடையிலான 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் 1999-2004 காலத்தில் நடைபெற்றன. இந்தப் பணிகள் முடிவடைந்த பிறகு 2005-ஆம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் இச்சாலை சுங்கக்கட்டண சாலையாக அறிவிக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த சாலை அமைக்க ரூ.536 கோடி மட்டுமே செலவானதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தொடர்ந்து முழு கட்டணம் வசூல்

தொடர்ந்து முழு கட்டணம் வசூல்

சுங்கச்சாலை அமைக்கப்பட்டது முதல் 2018-ஆம் ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதி வரையிலான 13 ஆண்டுகள் ஆறு மாத காலத்தில் பரணூர், ஆத்தூர் சுங்கச்சாவடிகளில் ரூ.1098 கோடி சுங்கக்கட்டணமாக வசூல் செய்யப்பட்டுள்ளது. அதன்பின் இப்போது வரையிலான ஓராண்டு காலத்தையும் கணக்கில் கொண்டால் அதில் குறைந்தது ரூ.150 கோடி வசூலிக்கப்பட்டிருக்கும். சாலை அமைக்க செலவிடப்பட்டதை விட இரு மடங்கிற்கும் மேலாக கட்டணம் வசூலிக்கப்பட்டு விட்ட நிலையில், இன்னும் முழு கட்டணம் வசூலிப்பது ஏன்? என்ற வினாவுக்கு அளிக்கப்பட்டுள்ள பதில் தான் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.

நெடுஞ்சாலை ஆணையம் சொல்வது என்ன?

நெடுஞ்சாலை ஆணையம் சொல்வது என்ன?

நெடுஞ்சாலை அமைக்க ரூ.536 கோடி மட்டும் தான் செலவிடப்பட்டது என்றாலும், அதற்கான பணிகள் தொடங்கப்பட்ட நாள் முதல் முடிவடைந்த நாள் வரை பணவீக்கம் கணக்கிடப்பட்டு, அதுவும் திட்டச் செலவில் சேர்க்கப்பட்டது. அதனால் திட்டச் செலவு ரூ.770.18 கோடியாக அதிகரித்து விட்டதாம். அதுமட்டுமின்றி, சுங்கக்கட்டணமாக வசூலிக்கப்பட்ட தொகையில் 4% பராமரிப்புக்காக ஒதுக்கப் பட்டதுடன், இயக்கச் செலவுகள் என்ற பெயரில் 12% கழிக்கப்பட்டது. இத்தகைய கழிவுகளுக்குப் பிறகு சுங்கக்கட்டணமாக ரூ.416.04 கோடி மட்டும் தான் வசூலிக்கப்பட்டிருப்பதாக கணக்கில் காட்டப் பட்டுள்ளது. ரூ.770 கோடி முதலீட்டை திரும்ப எடுக்க இன்னும் ரூ.354 கோடி தேவை என்றும், அதுவரை முழுமையான சுங்கக் கட்டணம் தான் வசூலிக்கப்படும் என்றும் நெடுஞ்சாலைகள் ஆணையம் கூறியுள்ளது.

கந்துவட்டி கணக்கை விட மோசம்

கந்துவட்டி கணக்கை விட மோசம்

தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கூறியுள்ள கணக்கு கந்து வட்டியை விட மிகவும் மோசமான கணக்கு ஆகும். நெடுஞ்சாலை அமைப்பதற்கான செலவு ரூ.536 கோடி என மதிப்பிடப்பட்ட நிலையில், அதைவிட கூடுதலாக ஒரு பைசா கூட செலவழிக்கப்படவில்லை. நெடுஞ்சாலை பணிகள் தொடங்கப்பட்ட நாளில் இருந்து முடிவடைந்த நாள் வரையிலான பணவீக்கத்தை கணக்கிட்டு தான் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டிருக்கும். அந்த தொகை தான் ஒப்பந்ததாரருக்கு வழங்கப்பட்டிருக்கும். அவ்வாறு இருக்கும் அத்தொகைக்கு பணவீக்கம் சேர்த்து புதிய தொகை நிர்ணயிப்பது நியாயமற்றது. அதுவும் திருத்தப்பட்ட மதிப்பீடு 2013-ஆம் ஆண்டில் தான் கணக்கிடப்பட்டுள்ளது. உண்மையில் 2013-ஆம் ஆண்டுக்கு முன்பாகவே திட்டச்செலவான ரூ.536 கோடியை விட அதிக தொகை வசூலிக்கப்பட்டிருக்கும். அதனால், சுங்கக்கட்டணம் ரத்து செய்யப்படுவதை தவிர்க்கவும், தொடர்ந்து வாகன உரிமையாளர்களை சுரண்டவும் வசதியாகவே திட்ட மதிப்பீடு உயர்த்தப்பட்டிருக்கிறது என்பதை உணர முடிகிறது. இது நியாயமல்ல.

ஏற்க முடியாத கணக்கு

ஏற்க முடியாத கணக்கு

அதேபோல், கடந்த பதிமூன்றரை ஆண்டுகளில் சுங்கக்கட்டணமாக வசூலிக்கப்பட்ட ரூ.1098 கோடியில் ரூ.682 கோடியை, அதாவது மொத்த வசூலில் 63% தொகை பராமரிப்பு மற்றும் இயக்குதலுக்காக செலவாகிவிட்டது என்பதை ஏமாளிகள் கூட ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பராமரிப்பு மற்றும் இயக்கச் செலவுகள் மொத்த முதலீட்டை விட 15% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர பரணூர், ஆத்தூர் ஆகிய இரு சுங்கச்சாவடிகளிலும் சேர்த்து பதிமூன்றரை ஆண்டுகளில் ரூ.1098 கோடி மட்டும் தான் வசூலிக்கப்பட்டுள்ளது என்பதையே நம்ப முடியவில்லை. இந்தக் கணக்கின்படி பார்த்தால் இரு சுங்கச்சாவடிகளிலும் ஒரு நாளைக்கு சராசரியாக ரூ. 11 லட்சம் மட்டுமே வசூலாகியிருக்கிறது. இந்த இரு சுங்கச்சாவடிகளிலும் சராசரியாக தினமும் ஒரு லட்சம் வாகனங்கள் செல்லும் நிலையில், இவ்வளவு குறைந்த தொகை தான் வசூலாகியிருக்கிறது என்ற கணக்கின் பின்னணியில் மர்மம் நிறைந்துள்ளது.

பொருளாதார தாக்குதல்

பொருளாதார தாக்குதல்

மொத்தத்தில் தாம்பரம் - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் சுங்கக்கட்டணம் வசூலிப்பதற்கு ஏற்ற வகையில் தான் கணக்குகள் காட்டப்படுகின்றன. இவற்றை மக்கள் மீதான பொருளாதாரத் தாக்குதலாகவே பார்க்க வேண்டியுள்ளது. இதற்கு முடிவு கட்டும் வகையில், தாம்பரம் & திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை மட்டுமின்றி, தமிழகத்திலுள்ள அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் அவற்றை அமைப்பதற்காக ஆன உண்மையான செலவு, இதுவரை உண்மையாக வசூலிக்கப்பட்ட சுங்கக்கட்டணம் எவ்வளவு? என்பது குறித்து பணியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி, இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் (சி.ஏ.ஜி) அலுவலக உயரதிகாரிகள் உள்ளிட்டோரைக் கொண்ட ஆணையம் அமைத்து விசாரணை நடத்த வேண்டும். இந்த விசாரணை முடியும் வரை, 10 ஆண்டுகளுக்கும் மேலாக சுங்கக்கட்டணம் வசூலித்து வரும் சுங்கச்சாவடிகளில், பராமரிப்புக் கட்டணமாக 40% கட்டணம் மட்டுமே வசூலிக்க மத்திய அரசு ஆணையிட வேண்டும். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

English summary
PMK Founder Dr Ramadoss has condemned that National Highways Authority of India on Toll Fee issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X