சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஒரே ஒரு அறிவிப்பு... டாக்டர் ராமதாஸை ஆனந்த கண்ணீரில் நனைய வைத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

வன்னியர்களுக்கு முழுமையான சமூகநீதி வழங்க வேண்டும் என்பதற்கான எனது 40 ஆண்டு போராட்டத்திற்கு கிடைத்த முதற்கட்டவெற்றி என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தின் மிக மிக பின்தங்கிய சமூகமான வன்னியர்களுக்கு முழுமையான சமூகநீதி வழங்க வேண்டும் என்பதற்கான எனது 40 ஆண்டு போராட்டத்திற்கு முதற்கட்டவெற்றி கிடைத்துள்ளது என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதற்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சட்டசபைக் கூட்டத் தொடரில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் புதிய பிரிவு ஏற்படுத்தப்பட்டு ஒதுக்கீடு வழங்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவை துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். இந்த மசோதா, அரசு கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு வழங்கவும், சீர்மரபினருக்கு 7% இட ஒதுக்கீடு வழங்கவும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இதர பிரிவினருக்கு 2.5% உள்ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்கிறது.

Dr. Ramadoss thanks Chief Minister Edappadi Palanisamy for 10.5% internal quota

இதுகுறித்து இன்று டாக்டர் ராமதாஸ் மிக நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை விபரம்:

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50% உள் இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டமுன்வரைவு தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதன்மூலம் தமிழகத்தின் மிக மிக பின்தங்கிய சமூகமான வன்னியர்களுக்கு முழுமையான சமூகநீதி வழங்க வேண்டும் என்பதற்கான எனது 40 ஆண்டு போராட்டத்திற்கு முதற்கட்டவெற்றி கிடைத்துள்ளது. இதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

வன்னியர்களுக்கு 10.50% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டது தொடர்பான இந்த அறிக்கையை ஆனந்தக் கண்ணீரில் நனைந்து கொண்டு தான் எழுதுகிறேன். மருத்துவர் அன்புமணி ராமதாசும் கிட்டத்தட்ட இதே மனநிலையில் தான் இருக்கிறார். சட்டப்பேரவையில் இடப்பங்கீட்டு சட்டம் நிறைவேற்றப்பட்டது தொடர்பான செய்தியை என்னிடம் அவர் பகிர்ந்து கொண்ட போது, ஆனந்தக் கண்ணீரை அடக்க முடியாமல் தேம்பித் தேம்பி அழுதார். அவரது அழுகையை நிறுத்திவைக்க என்னாலும் முடியவில்லை. சரிப்பா.... சரிப்பா என்று தேற்றினேன். எங்களின் ஆனந்தக் கண்ணீருக்குக் காரணம்... மிக மிக மோசமான நிலையில் உள்ள வன்னியர் சமுதாயத்தின் நிலை இதனால் உயரும் என்பது தான்.

இரண்டரை கோடிக்கும் கூடுதலான வன்னியர்களுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் நியாயமான பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை. இந்தியா விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் ஆகப்போகும் நிலையிலும் அவர்களின் சமூகநிலையும் வாழ்க்கைத் தரமும் உயரவில்லை. அரசு நிர்வாகத்தின் உயர்பதவிகளை அனுபவிக்க முடியாமல், உயர்கல்வி கற்க முடியாமல் சமூகத்தின் அடித்தட்டில் கிடந்த அந்த அப்பாவி ஊமை சனங்களுக்கு உரிய சமூகநீதியை வென்றெடுத்துக் கொடுக்க வேண்டும் என்பதற்காகத் தான் 40 ஆண்டுகளாக இடைவிடாமல் போராடி வருகிறேன். வன்னியர் சமுதாயமும் என் தலைமையை ஏற்றுக் கொண்டு போராடி வருகிறது. எனது 40 ஆண்டு கால சமூகநீதி போராட்டத்திற்கு இந்த சட்டத்தின் மூலம் தான் மனநிறைவு அளிக்கும் வகையில் முதற்கட்ட வெற்றி கிடைத்திருக்கிறது.

வன்னியர்களுக்கு சமூகநீதியை வென்றெடுப்பதற்காக நடத்தப்பட்ட போராட்டங்கள் கொஞ்சநஞ்சமல்ல. 1980-ஆம் ஆண்டில் என்னால் தொடங்கப்பட்ட வன்னியர் சங்கம் அடுத்த 10 ஆண்டுகளுக்கு தொடர் போராட்டங்களை நடத்தியது. 1987ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருவாரகால தொடர் சாலைமறியல் போராட்டத்தில் காவல்துறையினரின் துப்பாக்கிச்சூடு மற்றும் தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டனர். வன்னியர்களுக்கு இடப்பங்கீடு கிடைத்துள்ள இந்த நேரத்தில் 21 பேரின் தியாகத்தை போற்றுகிறோம்.

சாதித்த ராமதாஸ்.. சாந்தமாக வென்ற எடப்பாடியார்.. வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு மசோதா நிறைவேறியதுசாதித்த ராமதாஸ்.. சாந்தமாக வென்ற எடப்பாடியார்.. வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு மசோதா நிறைவேறியது

இத்தகைய போராட்டம் மற்றும் தியாகங்களைத் தொடர்ந்து 1989ஆம் ஆண்டு மார்ச் மாதம் என்னை அழைத்துப் பேசிய அப்போதைய முதலமைச்சர் கலைஞர், வன்னியர்களுக்கு மட்டும் 20% இட ஒதுக்கீடு வழங்குவதற்கு பதிலாக 108 சமுதாயங்களை ஒன்றிணைத்து மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்ற புதிய பிரிவை உருவாக்கி 20% இட ஒதுக்கீடு வழங்கியதன் மூலம் வன்னியர் சமுதாயத்திற்கு மிகப்பெரிய துரோகத்தைச் செய்தார். அதன் விளைவாக வன்னியர்களுக்கு சமூகநீதியை வென்றெடுக்க இன்னும் 32 ஆண்டுகள் போராட வேண்டியிருந்தது.

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்ற புதிய பிரிவு உருவாக்கப்பட்டு 32 ஆண்டுகள் ஆகும் போதிலும் கூட வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் முதல் தொகுதி பணிகளில் ஒன்று அல்லது இரண்டு விழுக்காடு பிரதிநிதித்துவம் மட்டுமே கிடைக்கிறது. குரூப்-2 பணிகளில் 4% மட்டுமே வன்னியர்களுக்கு பிரதிநிதித்துவம் கிடைக்கிறது. குரூப்-3 பணிகளில் அதிகபட்சமாக 5 விழுக்காடும், குரூப்-4 பணிகளில் 5 முதல் 6 விழுக்காடு மட்டுமே வன்னியர்களுக்கு கிடைக்கிறது. இதனால், வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த மக்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டிருக்கிறது. இத்தகைய சூழலில் தான், 40 ஆண்டுகளாகத் தொடரும் வன்னியர்களுக்கான இடப்பங்கீடு போராட்டத்தை மீண்டும் தீவிரப்படுத்த வேண்டியிருந்தது.

வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீட்டை வென்றெடுக்கும் நோக்கத்துடன் தான் 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 ஆம் நாள் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தலைமையிலான குழுவினர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சந்தித்து தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்காக அதிமுகவுடன் கூட்டணி அமைக்கப்பட்ட போது முன்வைக்கப்பட்ட 10 கோரிக்கைகளிலும் இந்தக் கோரிக்கை முக்கியக் கோரிக்கையாக இடம் பெற்றிருந்தது. அதன்பிறகும் 2019ஆம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி மருத்துவர் அன்புமணி இராமதாசு, ஜி.கே.மணி ஆகியோருடன் முதலமைச்சரை அவரது இல்லத்தில் சந்தித்து, வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நான் வலியுறுத்தினேன். அதற்கான சான்றுகளையும் நான் முதல்வரிடம் வழங்கினேன்.

வன்னியர், சீர் மரபினருக்கு உள் இடஒதுக்கீடு- தமிழகத்தில் 69% இடஒதுக்கீடு தற்போதைய நிலை என்ன?வன்னியர், சீர் மரபினருக்கு உள் இடஒதுக்கீடு- தமிழகத்தில் 69% இடஒதுக்கீடு தற்போதைய நிலை என்ன?

அதுமட்டுமின்றி, 12.10.2020, 23.10.2020 ஆகிய தேதிகளில் வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு விரிவான கடிதங்களை எழுதினேன். அதன்பிறகே இந்த நியாயமான கோரிக்கையை முன்வைத்து வன்னியர் சங்கமும், பாட்டாளி மக்கள் கட்சியும் தமிழ்நாடு முழுவதும் 6 கட்டங்களாக தொடர் போராட்டங்களை முன்னெடுத்தன. முதற்கட்டமாக மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தலைமையில் டிசம்பர் 1ஆம் தேதி முதல் 4ஆம் தேதி வரை சென்னையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்பட்டது.

இரண்டாம் கட்டமாக டிசம்பர் 14ஆம் நாளன்று தமிழ்நாட்டில் உள்ள 12,621 கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்கள் முன் பா.ம.க. சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்பட்டது. மூன்றாம் கட்டமாக திசம்பர் 23ஆம் நாளன்று பேரூராட்சி அலுவலகங்கள் முன் பா.ம.க. சார்பில் மக்கள் திரள் போராட்டம் நடத்தப்பட்டது. நான்காம் கட்டமாக திசம்பர் 30ஆம் தேதி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன் வன்னியர் தனி இடஒதுக்கீட்டை வலியுறுத்தி மாபெரும் போராட்டம் நடத்தப்பட்டது. ஐந்தாம் கட்டமாக 2021ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் நகராட்சி அலுவலகங்கள் முன்பும், ஆறாம் கட்டமாக 2021ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பும் மாபெரும் மக்கள்திரள் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

வன்னியர் சங்கமும், பாட்டாளி மக்கள் கட்சியும் நடத்திய தொடர் போராட்டங்களைத் தொடர்ந்து வன்னியர்கள் தனி இட ஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசு பேச்சு நடத்த முன்வந்தது. முதற்கட்டமாக கடந்த ஆண்டு திசம்பர் ஒன்றாம் தேதி பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாசு தலைமையிலான குழுவினரை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அழைத்துப் பேசினார்கள். அதன் தொடர்ச்சியாக என்னை திசம்பர் 22ஆம் தேதி தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி, உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆகியோரும், ஜனவரி மாதம் 11ஆம் தேதி மின்துறை அமைச்சர் தங்கமணி, உள்ளாட்சி அமைச்சர் வேலுமணி ஆகியோரும் ஜனவரி 30-ஆம் தேதி அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன் ஆகியோரும் தைலாபுரம் தோட்டத்தில் நேரில் சந்தித்துப் பேசினார்கள்.

அதேபோல், 2021ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.கே.மணி அவர்கள் தலைமையில் ஏ.கே.மூர்த்தி, தன்ராஜ் ஆகிய 3 பேர் கொண்ட குழு அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசியது. தொடர்ந்து மேலும் 3 கட்டங்களாக தமிழக அரசு குழு மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி குழுவினரிடையே பேச்சுகள் நடத்தப்பட்டன. ஒட்டுமொத்தமாக நான், மருத்துவர் அன்புமணி இராமதாசு, ஜி.கே. மணி உள்ளிட்டோருக்கும், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் அடங்கிய குழுவினருக்கும் இடையே பத்துக்கும் மேற்பட்ட முறை பேச்சுக்கள் நடத்தப்பட்டு அதன் தொடர்ச்சியாகவே வன்னியர்களுக்கு 10.50% உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள பிற சமூகத்தினருக்கு 2.50%, சீர் மரபினருக்கு 7% உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது. அனைத்து சாதியினருக்கும் சமூகநீதி கிடைக்க வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கை என்ற வகையில் இந்த தற்காலிக இட ஒதுக்கீட்டு ஏற்பாட்டை நான் வரவேற்கிறேன்.

வன்னியர்களுக்கு 10.50% உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பதன் மூலம் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் வன்னியர்களுக்கு உரிய பிரநிதித்துவம் கிடைப்பது உறுதி செய்யப்படும். நடப்பாண்டில் ஒரு லட்சம் அரசு ஊழியர்கள் நியமிக்கப்பட்டால் வன்னியர்களுக்கு குறைந்தது 10,500 வேலைவாய்ப்புகள் கிடைக்கும். 6000 மருத்துவக் கல்வி இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டால் வன்னியர் மாணவர்களுக்கு 630 இடங்கள் கிடைப்பது உறுதி செய்யப்படும். இதன்மூலம் வன்னியர்களின் சமூக நிலையும், வாழ்க்கைத் தரமும் மேம்படும். இதற்காகத் தான் 40 ஆண்டுகளாக நான் போராடி வருகிறேன்.

வன்னியர்களின் சமூகநீதிக்கான போராட்டம் இன்னும் முடிவடைந்து விடவில்லை. வன்னியர்களுக்கு அவர்களின் மக்கள்தொகைக்கு இணையான இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது தான் நமது கோரிக்கையாகும். இது குறித்து தமிழக அரசிடமும் வலியுறுத்தி உள்ளோம். அரசும் அடுத்த 6 மாதங்களுக்குள் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி உரிய இடப்பங்கீடு வழங்க உறுதியளித்திருக்கிறது. சட்டப்பேரவையிலும் இந்த உத்தரவாதத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அளித்திருக்கிறார். சட்டப் பேரவைத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து அந்த இலக்கையும் பாட்டாளி மக்கள் கட்சி வென்றெடுக்கும்.

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் வன்னியர்களுக்கு 10.50% இட ஒதுக்கீடு வழங்கியதற்காகவும், அடுத்த 6 மாதங்களில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி வன்னியர்களுக்கு மக்கள்தொகைக்கு இணையான இடப்பங்கீடு வழங்குவதற்கு உறுதி அளித்ததற்காகவும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை நான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உளமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டேன்.

வன்னியர்கள் இடப்பங்கீட்டுக்கு துணை நின்ற துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் , இதற்காக பல்வேறு வழிகளில் இடைவிடாமல் முயற்சிகளை மேற்கொண்டு, சட்டப்பேரவையில் இன்று இந்த சட்ட முன்வரைவு நிறைவேற்றப்படுவதை சாத்தியமாக்கிய சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு வன்னியர் சங்கம், பா.ம.க மற்றும் இரண்டரை கோடி வன்னியர்களின் சார்பில் இதயம் கனிந்த நன்றிகளை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார் டாக்டர் ராமதாஸ்.

English summary
Dr. Ramadoss thanks Chief Minister Edappadi Palanisamy for 10.5% internal quota. Dr. Ramadass said that the first stage of my 40-year struggle for full social justice for the Vanni, the most backward community in Tamil Nadu, has been achieved. He also thanked Chief Minister Edappadi Palanichamy for this.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X