உயிரை காப்பாற்ற.. புறா எச்சத்தை கூட விடுங்க, வெறிநாயின் எச்சிலை கவனிங்க! டாக்டர் சாந்தி வார்னிங்
சென்னை: புறா எச்சங்களைவிட வெறிநாய் கடித்துவிட்டால் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக டாக்டர் சாந்தி ரவீந்திரநாத் எச்சரிக்கை தெரிவித்துள்ளார்.
புறா எச்சங்களால் நுரையீரல் பாதிப்பு ஏற்படும். மிகவும் மோசமாக பாதித்தால் உயிரிழப்பு ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இந்த புறா எச்சங்களால் எல்லோரும் பாதிக்கப்படுகிறார்களா என்றால் இல்லை என்றும் இது மிகவும் அரிதானது என்றும் டாக்டர் சாந்தி ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பேட்டியில் புறா எச்சம் காய்ந்த பிறகு அதில் உள்ள பூஞ்சைகள் காற்றில் கலந்துவிடும். இதை ஒருவர் சுவாசிக்கும் போது பாதிப்பை ஏற்படுத்தும் என்பது உண்மைதான்.
Exclusive:புறாக்களின் எச்சத்தால் நுரையீரல் பாதிப்பா?.. டாக்டர் சாந்தி ரவீந்திரநாத்தின் விளக்கம்!

அரிதானது
ஆனால் இது அரிதாக ஏற்படுவது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால் இந்த புறா எச்சங்களை விட மோசமானது வெறிநாய் கடியாகும். கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை பூந்தமல்லியில் 7 வயது சிறுவனை அப்பகுதியில் சுற்றித் திரிந்த வெறிநாய் ஒன்று கடித்துவிட்டது.

ரேபீஸ் தொற்று
இதையடுத்து அந்த சிறுவன் ரேபீஸ் தொற்றுக்குள்ளானான். பின்னர் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். கடந்த பிப்ரவரி மாதம் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் வெறிநாய் கடித்து பெண்கள் சிறுவர்கள் உள்ளிட்டோர் படுகாயமடைந்தனர்.

வெறிநாய்கள்
அண்மைகாலமாக வெறிநாய்களின் தொல்லை அதிகரித்து கொண்டே இருக்கிறது. வெறிநாய் கடித்தால் ரேபீஸ் தாக்குதலுக்குள்ளாக்கப்படுவார்கள். அவ்வாறு ரேபீஸ் தாக்குதல் ஏற்பட்டதால் உடனடியாக ஆன்டி ரேபீஸ் தடுப்பூசியை அவர்களுக்கு செலுத்து வேண்டும். இல்லாவிட்டால் மரணம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

சாதாரணம்
நாம் பாட்டுக்கு தெருவில் சாதாரணமாக நடந்து சென்று கொண்டிருப்போம். ஆனால் வெறிபிடித்த நாய் திடீரென தானாக நம்மை தேடி வந்து கடிக்கும். வெறி பிடித்த நாயின் வாயிலிருந்து எச்சில் ஊற்றிக் கொண்டே இருக்கும். இந்த எச்சிலும் ஆபத்தானதுதான். எனவே வெறிநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

6 ஊசிக்கு ரூ 3000
வெறிநாய்கடிக்கு குறைந்தது 6 ஊசிகள் ஒரு குறிப்பிட்ட இடைவெளிகளில் போடப்பட வேண்டும். இந்த ஊசியின் விலை தனியார் மருத்துவமனைகளில் ரூ 500 ஆகும். எனவே 6 ஊசிக்கு ஒருவர் 3000 செலுத்த வேண்டியிருக்கும். இதை எல்லோராலும் செலவு செய்ய முடியாது. எனவே வெறிநாய் கடித்துவிட்டால் உடனடியாக அதற்கான ஊசியை போட வேண்டும்.

அரசு மருத்துவமனைகள்
அவை அரசு மருத்துவமனைகளில் தயாராக இருக்கின்றனவா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இது போன்ற உயிர் காக்கும் மருந்துகள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூட இருக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். எனவே வெறிநாய்க் கடியை அலட்சியமாக கருத வேண்டாம். கடித்துவிட்டால் உடனே தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். மற்றபடி டிடி ஊசியெல்லாம் வெறிநாய்க் கடிக்கு பலனை தராது என டாக்டர் சாந்தி ரவீந்திரநாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.