• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

71 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் கொட்டும் மழையில் உதயமான திராவிட முன்னேற்றக் கழகம்!

|

சென்னை: தமிழகத்தில் 71 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில்தான் திராவிட முன்னேற்றக் கழகம் உதயமானது.

இது தொடர்பாக திமுகவினருக்கு அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதம்:

இதே செப்டம்பர் 17-ம் நாள், 71 ஆண்டுகளுக்கு முன்னால் கொட்டும் மழையில் சென்னை ராயபுரம் ராபின்சன் பூங்காவில் கலைஞர் உள்ளிட்ட தனது தம்பிமார்களுடன் இந்த மாபெரும் இயக்கத்தை பேரறிஞர் அண்ணா அவர்கள் தொடங்கினார்கள். அந்த மழையைத் தாண்டிய இடி முழக்கமாக பேரறிஞர் அண்ணா அவர்கள் முழங்கினார்கள். "திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றிவிட்டது. சமுதாயத் துறையிலே சீர்திருத்தம், பொருளாதாரத் துறையிலே சமதர்மம், அரசியலில் ஏகாதிபத்தியத்திலிருந்து விடுதலை ஆகியவைதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைகள்" - என்று நமக்கான பாதையை வடிவமைத்துக் கொடுத்தார் நம் அண்ணன்.

இந்த எழுபது ஆண்டுகால நமது நெடும்பயணத்தில் சீர்திருத்தம், சமதர்மம், சமூகநீதி, இன உரிமை, மொழி உணர்வு, தமிழக உரிமைகள் ஆகியவற்றில் நாம் எப்போதும், எந்நாளும், எந்தச் சூழ்நிலையிலும் விட்டுக் கொடுத்தது இல்லை. ஆட்சியில் இல்லாத போது இக்கொள்கைகளுக்காக போராடினோம்; ஆட்சியில் இருக்கும் போது இக்கொள்கைகளை அமல்படுத்தி, திட்டமிட்டு செயல்பட்டோம். அதனால் தான் ஒரு முறையல்ல; ஐந்து முறை தமிழ்நாட்டை ஆளும் வாய்ப்பை நமக்கு தமிழ்நாட்டு மக்கள் வழங்கினார்கள். நமது கொள்கைகள் தெளிவானவை. நமது நோக்கங்கள் வெளிப்படையானவை. நம்மை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாதவர்கள் நம்மை பற்றிய அவதூறுகளைக் கிளப்புவார்கள். இதை இன்று நேற்றல்ல; நாம் கட்சி தொடங்கிய காலம் முதல் பார்த்துதான் வருகிறோம். நம்மை, மத உணர்வுகளை புண்படுத்துபவர்கள் என்கிறார்கள்.

தந்தை பெரியாரின் தாய் மொழிப் பற்றும் ஆங்கில ஆதரவும் ... பேரா. சுப. வீரபாண்டியன்

மதங்களுக்கு எதிரி இல்லை

மதங்களுக்கு எதிரி இல்லை

இல்லை. நாம் மத அடிப்படைவாதத்துக்குத் தான் எதிரிகளே தவிர மதங்களுக்கு அல்ல! நாம் - மொழி வெறியர்கள் என்கிறார்கள். இந்தித் திணிப்பைத் தான் எதிர்க்கிறோமே தவிர இந்தி என்ற மொழியை அல்ல! நாம் பிரிவினை வாதிகள் அல்ல. நம் தமிழ்நாட்டுக்கான உரிமைகளுக்காக போராடுபவர்களே தவிர பிரிவினைவாதிகள் அல்ல. நாம் தேசவிரோதிகள் அல்ல. 1962 சீன யுத்தம் தொடங்கி, 1970 பாகிஸ்தான் யுத்தம் வரையிலும், 1999 கார்கில் யுத்ததிலும் இந்திய நாட்டின் இறையாண்மையைக் காக்க மத்திய அரசுக்கு தோள் கொடுத்த இயக்கம் நாம். தேசபக்தியின் பேரால் தமிழ்நாட்டின் உரிமைகளை விட்டுத் தராதவர்கள்.

பெரியார் நினைவுகள்

பெரியார் நினைவுகள்

எங்களுக்கு இனமும் மொழியும் நாடும் மக்களும் முக்கியம். அதனை யாருக்காகவும் விட்டுத்தர மாட்டோம். இந்த நான்குக்கும் உண்மையாக இருக்கிறோம் என்பதை நம் வரலாறு சொல்லும். நான் தந்தைப் பெரியாரை பேரறிஞர் அண்ணாவை சிறுவயதிலேயே அறிந்தவன். 95 வயதிலும் மூத்திரச் சட்டியைத் தூக்கிக் கொண்டு இந்த தமிழ்ச்சமுதாயத்துக்கு உழைத்த புரட்சியாளர் தந்தை பெரியார். அவரது உரையைக் கேட்டேன். அவரை அருகில் இருந்து பார்த்தேன். எங்கள் இல்லத் திருமணத்தை நடத்தி வைக்க பெரியாரே வந்திருந்தார். 'நம்ம கலைஞர்' என்று கலைஞரை அவர் போற்றியதும்- அய்யா... அய்யா" என்று கலைஞர் அவர்கள் அவரது மகனைப் போல அருகில் நின்றதையும் பார்த்திருக்கிறேன்! பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள், சென்னை வரும்போதெல்லாம் கோபாலபுரம் இல்லம் வந்து தங்குவார்கள். அவருக்கு வேண்டிய உதவிகளை சிறு பையனாக இருந்து செய்து கொடுத்துள்ளேன்.

அண்ணாவால் பாராட்டு

அண்ணாவால் பாராட்டு

கோபாலபுரம் இளைஞர் தி.மு.க.,வை நான் தொடங்கி நடத்தி வந்தபோது, முதலமைச்சர் அண்ணா அவர்களை அழைக்க அவரது வீட்டுக்குச் சென்றிருந்தேன். அண்ணாவை அழைத்தேன். நான் சொன்ன தேதியை மாற்றச் சொன்னார் அண்ணா அவர்கள். நான் முடியாது என்றேன். "உன் அப்பாவைப் போலவே பிடிவாதக்காரனாக இருக்கிறாயே!" என்றார் பேரறிஞர் அண்ணா அவர்கள். அவரிடம் அப்படி பாராட்டைப் பெற்றவன் நான். தலைவர் கலைஞர் அவர்கள் உடனான என்னுடைய பயணம் மிகவும் பெரியது. தந்தையாகவும், தலைவராகவும், ஆசானாகவும் இருந்து என்னை செதுக்கிய சிற்பி அவர். மக்கள் பணியில் அவர் கொண்ட அர்ப்பணிப்பை சிறு வயதில் இருந்து பார்த்து வளர்ந்தவன் நான். அவர் வாழ்க்கை நமக்கெல்லாம் காண கிடைத்த ஒரு அரசியல் பாடம். இந்தச் சூழ்நிலையில் தலைவர் கலைஞர் இருந்திருப்பாரேயானால் இன்னமும் உங்களிடத்தில் நேரடியாக இணைய வழியில் உரையாடியிருப்பார். எந்தப் புது தொழில்நுட்பத்தையும் அவர் ஆர்வமுடன் ஆராய்ந்து அறிந்திடுவார்.

சமூக நீதி சித்தாந்தம்

சமூக நீதி சித்தாந்தம்

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகிய முப்பெரும் தலைவர்களின் வாழ்க்கையே நமக்கெல்லாம் ஒரு படிப்பினை. 95 வயது வரை தன் சிறுநீர் பையை சுமந்தே பட்டிதொட்டி தோறும் சென்று சமூகநீதி சித்தாந்தத்தை மொழிந்த பெரியாரின் தீர்க்கமும், தான் படித்து கொண்டிருந்த புத்தகத்தை முடிப்பதற்காகவே தன் அறுவை சிகிச்சையை தள்ளி வைக்க முடியுமா என்ற பேரறிஞர் அண்ணாவின் அறிவுத் தேடலும், சக்கர நாற்காலியில் அமர்த்தப்பட்டபோதும் பொதுத் தொண்டாற்ற ஓடிக்கொண்டிருந்த தலைவர் கலைஞர் அவர்களின் உத்வேகமும் தான் நம்மை இங்கே கொண்டுவந்து சேர்த்துள்ளது. இவர்கள் நம்முள் விதைத்ததே இன உணர்வு, மொழி உணர்வு, மாநில சுயாட்சிக் கொள்கை, சமூகநீதித் தத்துவம்! இவற்றை வென்றெடுக்க எத்தனையோ தியாகங்களை நம் இயக்கத்தினர் செய்துள்ளார்கள். கழக உடன்பிறப்புகளே! நீங்கள் தான் அன்றும் இன்றும் கழகத்தை தூக்கி நிறுத்திக் கொண்டிருக்கிறீர்கள். பல்வேறு பேரிடர்களில் முன்நின்று மக்கள் பணி செய்துள்ளீர்கள். இதோ, இன்றோ ஒரு கொடிய பேரிடருடன் உலகமே போராடிகொண்டிருக்கும் வேளையில் உயிரைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் நீங்கள் ஆற்றி வரும் மக்கள் பணிக்கு என் வாழ்த்துகளும் பாராட்டுகளும்!

நூற்றாண்டுகளாய் தொடருவோம்

நூற்றாண்டுகளாய் தொடருவோம்

நீங்கள் அனைவரும் சேர்ந்தது தான் இயக்கம்! உங்களில் எவர் ஒருவர் இல்லாமலும் இந்த தி.மு.கழகம் என்ற அமைப்பு எழும்பி வந்திருக்க முடியாது. கழகத்தின் கொள்கைகளும் கோட்பாடுகளும் மக்களால், அதிலும் குறிப்பாக கழக உறுப்பினர்களால் உருவாக்கப்பட்டவையே! தொண்டர்களான நீங்கள் தான் கழகத்தை வளர்த்தெடுக்கிறீர்கள். முப்பெரும் விழா என்பது நம் தலைவர்களைப் போற்றும் விழா! நம் இயக்கத்தைப் போற்றும் விழா! நம் முன்னோடிகளைப் பாராட்டும் விழா! தொண்டர்களால் எடுக்கப்படும் கொள்கைத் திருவிழா! எழுபது ஆண்டுகளாய் எழுந்து நிற்கிறோம்! நூற்றாண்டுகளாய் தொடர்ந்து வாழ்வோம். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

 
 
 
English summary
In this day Sep.17, 71 years ago DMK Party launch by Anna, Karunanidhi.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X