திராவிட மாடல்’ இப்போ நாடு முழுவதும் பரவிடுச்சு.. பெருமை பொங்கப் பேசிய முதல்வர் ஸ்டாலின்!
சென்னை : 'திராவிட மாடல்' என்ற சொல் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, நாடு முழுவதும் பரவிவிட்டது என்று முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தெரிவித்திருக்கிறார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் திராவிட மாடலை பரப்பவேண்டும் எனக் கூறியுள்ளார்.
இலங்கையில் அதிக மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு 3 மடங்கு கட்டணத்தை உயர்த்த திட்டம்
திமுக ஆட்சிக்கு வந்தது முதல் தொடர்ந்து 'திராவிட மாடல் ஆட்சி' எனப் பேசி வரும் முதல்வர் ஸ்டாலின், கட்சிக் கூட்டத்தில் இன்று இந்தியா முழுவதும் திராவிட மாடல் எனும் சொல் பரவிட்டது எனத் தெரிவித்துள்ளார்.

திராவிட மாடல் ஆட்சி
திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் முதல்வர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சியை நடத்துவோம் எனச் சூளுரைத்து வருகிறார். ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும் திராவிட மாடல் கோஷத்தை முன்வைத்து வருகிறார். தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகமாக வேண்டும். வேலை வாய்ப்புகள் அதிகமாக வேண்டும். தனிநபர் வருமானம் அதிகமாக வேண்டும். மக்களின் சமூக மரியாதை உயர வேண்டும். இதைத்தான் திராவிட மாடல் ஆட்சி உருவாக்க நினைக்கிறது எனப் பேசி வருகிறார்.

திராவிட மாடலுக்கு விளக்கம்
நேற்று முன்தினம் பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது பொருளாதாரத்தை மட்டும் சார்ந்தது அல்ல. கல்வி, பொருளாதாரம், மருத்துவம், சமூக நீதி, சமத்துவம், பெண்கள் நீதியை உள்ளடக்கியது தான் தமிழ்நாட்டின் வளர்ச்சி. அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சியையே திராவிட மாடல் என்று கூறுகிறோம் எனப் பேசினார். பிரதமரே என்று அழைத்து, திராவிட மாடல் குறித்து ஸ்டாலின் விளக்கியது பெரும் விவாதமானது. சமூக வலைதளங்களில் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் இதுகுறித்து விவாதித்தனர்.

சித்தராமையா
நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கர்நாடக எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா, "ஆர்.எஸ்.எஸ் திராவிடர்களா? அவர்கள் ஆரியர்கள். அவர்கள் இந்தியர்களா? திராவிடர்கள்தான் நாட்டின் பூர்வ குடிகள். இதை எல்லாம் சொன்னால் என்ன ஆகும். அதனால் யாரும் வரலாற்றை கிளறி பார்க்க கூடாது. உண்மையான வரலாற்றை உழைக்கும் வர்க்கத்தினர், திராவிடர்கள் தெரிந்து கொண்டால் என்ன ஆகும் என்பது ஆர்.எஸ்.எஸ் அமைப்பினருக்கு தெரியும். அதனால் தான் வரலாற்றை திரிக்க பார்க்கிறார்கள்." எனப் பேசினார்.

நாடு முழுவதும்
இந்நிலையில்தான் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் பேசிய முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின், ஜூன் 3 முதல் தமிழ்நாடு முழுவதும் திராவிட பாசறைக் கூட்டங்கள், தெருமுனைக் கூட்டங்கள் நடத்தி கழகத்தின் வரலாற்றை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். தேர்தலுக்கு முன்பு இருந்ததை விட இப்போது மக்களிடையே நமக்கு செல்வாக்கு அதிகமாகி இருக்கிறது. 'திராவிட மாடல்' என்ற சொல், தமிழ்நாட்டில் மட்டுமல்ல மற்ற மாநிலங்களிலும் இந்தியா முழுமைக்கும் பரவி விட்டது எனத் தெரிவித்துள்ளார்.

திராவிட மாடலை பரப்ப
மேலும், இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், "2023-ல் நூற்றாண்டு விழா காணவிருக்கும் கருணாநிதியின் கொள்கைகளையும், திராவிட மாடல் ஆட்சி நடத்தி, தமிழ்நாட்டை தலைநிமிரச் செய்துள்ள திமுக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் செயல்பாடுகளையும், இன்றைய தலைமுறையினருக்குக் கொண்டு சேர்த்திடும் வகையில், மாநிலம் முழுவதும் 'திராவிட மாடல் பயிற்சிப் பாசறை'க் கூட்டங்கள் தொடர்ச்சியாக நடத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.