தமிழ்நாட்டில் இன்று வெப்பம் குறைந்தது.. வேலூர், சென்னையில் எவ்வளவு வெயில் தெரியுமா.. முழு தகவல்
சென்னை: அசானி புயல் காரணமாகத் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் இன்று வெப்பத்தின் தாக்கம் சற்று குறைவாகவே காணப்பட்டது.
தமிழ்நாட்டில் கடந்த பிப். மாதம் இறுதி முதலே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வந்தது. அதிலும் மார்ச்- ஏப்ரல் மாதங்களில் வெயிலின் தாக்கம் மிக மோசமாக இருந்தது.

இதன் காரணமாக பொதுமக்கள் கடும் இன்னல்களை எதிர்கொண்டனர். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது.
அதிலும் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் தொடங்கிய பின்னர், வெயில் உச்சம் தொட்டது. பல பகுதிகளில் வெயில் சதம் அடித்தது. கடந்த சில நாட்களாகவே மாநிலத்தில் பல இடங்களில் வெயிலின் தாக்கம் சதம் அடித்தது.
கடந்த சில நாட்களாகவே வெயில் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில், அசானி புயல் காரணமாக இன்று வெயிலின் தாக்கம் கணிசமாகக் குறைந்ததுள்ளது. இன்று மாநிலத்தில் பெரும்பாலான இடங்களில் குளிர்ச்சியான வெப்பநிலையே காணப்பட்டது.
இன்று மாநிலத்தில் எந்தவொரு இடத்திலும் வெயிலின் தாக்கம் சதம் அடிக்கவில்லை அதிகபட்சமாக மதுரை விமான நிலையம் 98 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது. பல நாட்கள் வெயில் சதம் அடித்த வேலூரில் 87.44 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது.
அதேபோல தஞ்சையில் 91.4 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும், திருச்சியில் 90.68 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும் பதிவாகி உள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் 85.46 டிகிரி பாரன்ஹீட், சென்னை மீனம்பாக்கத்தில் 84.38 டிகிரி பாரன்ஹீட் பதிவாகி உள்ளது.
கத்தரி வெயில் கடந்த மே 4ஆம் தேதி தொடங்கிய நிலையில், அது வரும் மே 28 தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இருப்பினும், இப்போது அசானி புயல் காரணமாகத் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் இன்று வெப்பத்தின் தாக்கம் சற்று குறைவாகவே காணப்பட்டது.