இடம் மாறும் மெரினா உத்தமர் காந்தி சிலை.. எங்கே மாற்றப்படுகிறது? என்ன காரணம் தெரியுமா
சென்னை: மெட்ரோ ரயில் பணிகளுக்காக, மெரினாவில் உள்ள காந்தி சிலை இடமாற்றம் செய்யப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னையில் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் மெட்ரோ ரயில் சேவை இயங்கி வருகிறது. சென்னையில் நீல மற்றும் பச்சை வழித்தடம் என்று இரு வழித்தடங்களில் மெட்ரோ சேவை வழங்கப்பட்டு வருகிறது.
இதில் நீல வழித்தடத்தில் விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரையும், பச்சை வழித்தடம் பரங்கிமலை முதல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வரை இயங்கி வருகிறது.
பெட்ரோல் விலை ஏற்றம், சாலையில் போக்குவரத்து நெரிசல், கொளுத்தும் வெயில் என பல்வேறு காரணங்களால் பலரும் இப்போது மெட்ரோ ரயில் சேவையைப் பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர்.
தப்பித்தது மெட்ரோ.. சிக்கிக் கொண்டது மதுரவாயல்.. உருவாக போகிறது உயர்மட்ட பாலம்.. முரசொலி

சென்னை மெட்ரோ
இதற்கிடையே மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டமும் ஒருபுறம் தொடங்கப்பட்டுள்ளது. மாதவரம் - சிறுசேரி சிப்காட், பூந்தமல்லி - கலங்கரை விளக்கம், மாதவரம் - சோழிங்கநல்லூர் என மொத்தம் 3 வழித்தடங்களில் விரிவாக்கத் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. அதன்படி சென்னை பூந்தமல்லி பைபாஸ் கலங்கரை விளக்கம் இடையே புதிய மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது.

கலங்கரை விளக்கம் மெட்ரோ
இதில் கலங்கரை விளக்கம் மெட்ரோ நிலையம், காந்தி சிலை பின்புறம் உள்ள சுரங்கத்தில் அமைகிறது. மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக "காந்தி சிலை" சேதமடையலாம் என்பதால், அதைத் தடுக்க தமிழக அரசு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஒரு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக தமிழக அரசும் கூட ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

காந்தி சிலை
இந்நிலையில், மெரினாவில் உள்ள மகாத்மா காந்தி சிலையை இடமாற்றம் செய்யத் தடையில்லா சான்றிதழைச் சென்னை மாநகராட்சி அளித்துள்ளது. அதன்படி மெட்ரோ ரயில் பணிகள் முடியும் வரை, மகாத்மா காந்தி சிலை இடமாற்றம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. மெட்ரோ பணிகள் முடியும் வரை மகாத்மா காந்தி சிலை வரலாற்றுச் சிறப்பு மிக்க சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகை வளாக நுழைவு வாயில் பகுதியில் வைக்கப்படும் என்று கூறப்படுகிறது.

அதிகாரிகள் விளக்கம்
இது குறித்து, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "காந்தி சிலை அருகே தான் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெறுகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகச் சிலை இடமாற்றம் செய்யப்படும். மெட்ரோ ரயில் பணிகள் முடிந்தபின் மீண்டும், மெரினா கடற்கரைக்குக் காந்தி சிலை மாற்றப்படும்" என்றார்.இது குறித்து, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "காந்தி சிலை அருகே தான் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெறுகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகச் சிலை இடமாற்றம் செய்யப்படும். மெட்ரோ ரயில் பணிகள் முடிந்தபின் மீண்டும், மெரினா கடற்கரைக்குக் காந்தி சிலை மாற்றப்படும்" என்றார்.