சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வைகோவுக்காக தீக்குளித்தவர்கள் குடும்பம் என்ன நிலையில் இருக்கிறது?நேரில் பார்த்து அதிர்ந்த துரை வைகோ!

Google Oneindia Tamil News

சென்னை: மதிமுக பொதுச்செயாளர் வைகோவுக்காக தீக்குளித்து உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரை நேரில் சந்தித்த போது அவரது மகன் துரை வைகோ அதிர்ந்துபோனதாக பதிவு செய்துள்ளார்.

இது தொடர்பாக துரை வைகோ தமது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது: இயக்கத்திற்காகவும், தலைவர் வைகோ அவர்களுக்காகவும் தீ குளித்து தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொண்ட, தியாகிகளின் குடும்பங்களை நேரில் சென்று சந்திக்கத் திட்டமிட்டு இருந்தேன்.
அதன்படி, நேற்று (28.09.2022) காலை 8 மணியளவில் உப்பிலியாபுரம் அருகில் உள்ள நாகநல்லூர் கிராமத்தில் வசிக்கும் உப்பிலியாபுரம் வீரப்பன் அவர்களின் குடும்பத்தினரை நேரில் சென்று சந்தித்தேன். வீரப்பன் அவர்களின் உயிர்த் தியாகத்தை நினைவுகூர்ந்து அவர்களின் நலனை கேட்டு அறிந்தேன்.

ஏகப்பட்ட அவமானம்! ஹை-பை தர கூட ஆள் இல்லை! இந்திய டீமில் இடம்பிடித்த ஹனுமான்! யார் இந்த ராஜத் படிதார்ஏகப்பட்ட அவமானம்! ஹை-பை தர கூட ஆள் இல்லை! இந்திய டீமில் இடம்பிடித்த ஹனுமான்! யார் இந்த ராஜத் படிதார்

உப்பிலியாபுரம் வீரப்பன்

உப்பிலியாபுரம் வீரப்பன்

வீரப்பன் அவர்களின் மனைவி மற்றும் மகன் ஆகியோர் அந்த வீட்டில் வசித்து வருகின்றார்கள். வீரப்பன் அவர்களின் மகள் கண்ணகி அவர்கள், பல வருடங்களுக்கு முன்னரே இறந்து விட்டார். மகள் வழி பேரன்கள் இருவர் இருக்கிறார்கள். உப்பிலியாபுரம் வீரப்பன் அவர்களின் குடும்பம் மிகவும் வறுமையில் இருப்பது கண்டு அதிர்ச்சியுற்றேன். வீரப்பன் அவர்களின் மனைவியிடம் அந்தக் குடும்பத்தின் வாழ்வாதாரம் குறித்து கேட்டேன். விவசாய வேலைகளுக்கு செல்வதாகவும், நூறு நாள் வேலைக்கு சென்ற நிலையில் தற்போது குடும்ப அட்டை இல்லை என்றக் காரணத்தினால், அந்த வேலையையும் இழந்து விட்டதாக தெரிவித்தார். அவர்களது மகன் வாகன விபத்து ஒன்றில் வலது கையை இழந்து விட்ட சூழலில், அந்தக் குடும்பத்தின் நிலை தற்போது பரிதாபகரமாக இருக்கின்றது. குடும்ப அட்டை கிடைப்பதற்கு உரிய ஏற்பாடுகள் செய்து தருவதாகவும், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வேன் எனவும் அவர்களிடம் உறுதியளித்தேன். அந்த அம்மாவிடம், இனிமேல் நீங்கள் கவலைப்படாதீர்கள். என்னையும் உங்கள் மகனாக நினைத்துக் கொள்ளுங்கள். உங்கள் குடும்பத்திற்கு உறுதுணையாக இருப்பேன் என, ஆறுதல் தெரிவித்து விடைபெற்றேன்.

அந்தல்ல்லூர் அறிவழகன்

அந்தல்ல்லூர் அறிவழகன்

அதைப்போல, மதியம் 1 மணியளவில், தலைவர் வைகோ அவர்கள் பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்ட போது, அதைக் கண்டித்து தீ குளித்து இறந்த அந்தநல்லூர் அறிவழகன் அவர்களின் குடும்பத்தினரை நேரில் சென்று சந்தித்தேன். அவருடைய மனைவி, மகள், மருமகன், பேரன் ஆகியோர் இருந்தார்கள். மூன்று வருடங்களுக்கு முன்னர் விபத்து ஒன்றில் அறிவழகன் அவர்களின் மகன் இறந்து விட்டார்.

அந்தக் குடும்பமும் மிகவும் பரிதாபகரமான நிலையில் தான் இருக்கின்றது. அறிவழகன் அவர்களின் மனைவியிடம் அந்தக் குடும்பத்தின் நிலை குறித்து கேட்டறிந்தேன். தான் முதியோர் உதவித் தொகை பெற்று வந்ததாகவும், தற்போது அது நிறுத்தப்பட்டு விட்டதாகவும் தெரிவித்தார். தன் மகன் வாகன விபத்தில் இறந்த வழக்கு தற்போது நடைபெற்று வருவதாகவும், அந்த வழக்கில் தங்களுக்கு சாதகமான ஒரு நம்பிக்கை இல்லாத சூழல் இருப்பதாகவும் தெரிவித்தார். தன் மகளுக்கு ஏதாவது ஒரு வேலை வாங்கித் தாருங்கள் எனவும் கண் கலங்கினார். முதியோர் உதவித் தொகை கிடைக்கவும், வாகன விபத்து வழக்கை உரிய முறையில் நடத்தி நீதி கிடைக்க ஏற்பாடு செய்து தருவதாகவும் உறுதியளித்தேன். அவரது மகளுக்கு ஒரு வேலை வாங்கித் தரவும் முயற்சிக்கிறேன் என்று தெரிவித்தேன். எதற்கும் கவலைப்படாதீர்கள். நான் இருக்கிறேன் என்ற நம்பிக்கையை அவர்களிடம் தெரிவித்து விடை பெற்றேன்.

இடிமழை உதயன்

இடிமழை உதயன்

திருச்சியில் திரையிடப்பட்ட 'மாமனிதன் வைகோ' ஆவணப்பட நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு, அரியலூர் மாவட்டத்தில் உள்ள இடிமழை உதயன் அவர்களின் கிராமத்திற்கு இரவு 9 மணியளவில் சென்றேன். அவரது தந்தையை நேரில் சந்தித்து உதயனின் உயிர்த்தியாகத்தை நினைவுகூர்ந்தேன். உதயனுக்கு ஒரு தம்பி இருந்தாலும், அவரது தந்தை பெரிய அளவில் எந்த ஆதரவும் இல்லாமல் தான் தற்போது வசித்து வருகின்றார்.

உதயனின் தந்தை அவருக்கு சொந்தமான விவசாய நிலத்தை விற்று, தன் வாழ்நாளில் ஒரு வீட்டைக் கட்டிவிட வேண்டும் என்ற முயற்சியில், கட்டுமானப் பணிகளைத் தொடங்கினார். ஆனால், தற்போது பொருளாதார நெருக்கடியால், வீடு முழுமை அடையாத நிலையில் இருக்கின்றது.
உங்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டியது என் கடமை. உங்கள் வீட்டு கட்டுமானப் பணிகளுக்கு தேவையான உதவியை கழகத் தோழர்களின் ஒத்துழைப்போடு வழங்கி, உங்கள் ஆசையை உறுதியாக நிறைவேற்றுகிறேன். நான் அடுத்த முறை நான் இங்கே வருவது இந்த வீட்டின் திறப்பு விழாவுக்காக தான் இருக்கும். உங்கள் ஆசைப்படி, தலைவர் வைகோ அவர்களையும் அழைத்து வருகின்றேன்.

தியாகம் மறக்கமாட்டோம்

தியாகம் மறக்கமாட்டோம்

இன்று இரவு வீட்டைக் கட்டி முடிப்பது பற்றிய எந்தக் கவலையும் இல்லாமல் நிம்மதியாக உறங்குங்கள். உங்களுக்கு பக்கபலமாக எப்போதும் நான் இருப்பேன் என, இடிமழை உதயனின் தந்தையிடம் தெரிவித்து விடைபெற்றேன். நேற்று ஒருநாளில் மட்டும் மூன்று தியாகிகளின் குடும்பங்களை நேரில் சென்று சந்தித்து, அவர்களின் குடும்ப, பொருளாதார, வாழ்க்கைச் சூழலை அறிந்தேன். அவர்களின் வாழ்வு மேம்பட என்னால் ஆன அனைத்து உதவிகளையும் செய்து எப்போதும் உடனிருப்பேன் என, அவர்களிடம் உறுதியளித்தேன். இழந்த உயிரை மீட்டுத்தர இயலாது. ஆனால், அவர்களுக்கு ஏற்பட்டு இருக்கும் காயத்திற்கு மருந்திட முடியும். அந்தப் பணியை உறுதியாக செய்வேன். மறுமலர்ச்சி தி.மு.க அந்தக் குடும்பங்களின் தியாகத்தை என்றும் மறவாது. இவ்வாறு துரை வைகோ கூறினார்.

English summary
Durai Vaiko meets martyrs Family for MDMK
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X