For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அன்று வாரிசு அரசியலை எதிர்த்த வைகோ.. மகனுக்கு மதிமுகவில் பட்டாபிஷேகம்-காலம் எவ்வளவு விசித்திரமானது!

Google Oneindia Tamil News

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வையாபுரி எனும் துரைவைகோவுக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவி தரப்படுமா? அல்லது பொருளாளர் பதவி கிடைக்குமா? என்பதுதான் அக்கட்சியினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 20-ந் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தின் மூலம் வைகோவின் மகன் துரை வையாபுரி எனும் துரை வைகோ அதிகாரப்பூர்வமாக அரசியல் பயணத்தை தொடங்குவது உறுதியாகி இருக்கிறது.

Durai Vaiko to be appoint as MDMK Deputy General Secretary?

சென்னை விமான நிலையத்தில் இன்று வைகோவுக்கும் துரை வைகோவுக்கும் ஆளுர மாலைகள், வீர வாள்கள் கொடுத்து கட்சி நிர்வாகிகள் தடபுடலாக வரவேற்பும் அளித்தனர். மதிமுகவின் அடுத்த தலைமை துரை வைகோதான் என்பது வரும் 20-ந் தேதி பிரகடனப்படுத்தப்பட இருக்கிறது.

தமிழக அரசியல் வரலாற்றில் மகனுக்கு பட்டாபிஷேகம் என்ற வார்த்தையை பல்லாயிரம் முறை பிரயோகித்தவர் வைகோ. கருணாநிதி தன் மகன் மு.க.ஸ்டாலினுக்கு பட்டாபிஷேகம் நடத்த விரும்புகிறார்; திமுகவை தமது குடும்பக் கட்சியாக்கிவிட்டார் என மிக கடுமையாக என்பதைவிட படுபடு உக்கிரமாக விமர்சித்தவர் வைகோ. கருணாநிதியின் வாரிசு அரசியலுக்கு எதிராகவே மதிமுக என்கிற தனி அரசியல் கட்சியை தொடங்கியவர் வைகோ.

1972-ம் ஆண்டு எம்.ஜி.ஆர்., திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் அந்த கட்சி சந்தித்த ஆகப் பெரிய செங்குத்து பிளவு வைகோவால்தான் நிகழ்ந்தது. எத்தனை எத்தனை மாவட்ட செயலாளர்கள்.. நிர்வாகிகள்... எத்தனை எத்தனை உயிர்தியாகங்கள்.. தமிழகத்தையே சில்லிட வைத்தது வைகோவின் தனி ஆவர்த்தன அரசியல் பயணம். வாரிசு அரசியலுக்கு எதிராக, திராவிடர் இயக்கத்தின் போர் வாளாக, தமிழீழ விடுதலைக்கான தமிழகத்தின் தளகர்த்தகராக, தமிழ் நிலத்தின் உரிமைகளின் பாதுகாவலராக என எண்ணற்ற விழுமிய முகங்களுடன் தனி அரசியல் கட்சியை தொடங்கி வீறுநடையை போடத் தொடங்கியவர் வைகோ. அதனால் 90களின் இளைஞர் பட்டாளம் பல்லாயிரக்கணக்கில் அவரது பின்னால் அணி திரண்டது.. குமரி முதல் சென்னை வரை வைகோவின் பின்னால் கால்களில் ரத்தம் சொட்ட சொட்ட நடந்தே நடைபயணம் வந்தவர்கள் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள்.

ஆம் அன்று வைகோ கண்ணசைத்தால் சர்வபரி தியாகத்துக்கும் தயாராக இருந்தது அந்த பல்லாயிரக்கணக்கான இளைஞர் பட்டாளம்... திமுகவின் இருவண்ண கொடியையும் அண்ணா அறிவாலயத்தையும் காப்பாற்றுவதற்காக கருணாநிதியையே போராட வைத்த வல்லமை கொண்டவராக அன்றைய வைகோ திகழ்ந்தார். ஆனால் தனிக் கட்சி அரசியல் பயணம் வைகோவுக்கு எப்போதும் ஏமாற்றமாகவே இருந்து வருகிறது. ஒரு அரசியல் கட்சியின் ஏறுமுகத்தை தேர்தல் முடிவுகளின் அளவீடுகள்தான் சொல்லும்.. ஆனால் வைகோவோ தேர்தலுக்கு தேர்தலுக்கு.. அதுவும் தேர்தல் களத்தில் நின்று கொண்டு சட்டென ஒரு முடிவை அறிவித்து எல்லோரையும் திகைத்துப் போகச் செய்வார்... அப்படி செய்ததால் அன்றைய தினம் அந்த காலம் அவருக்கு சாதகமானதாக இருந்திருக்கலாம்.. ஆனால் தேர்தல் வரலாறு நெடுகிலும் வெல்லாதவராகவே இருந்துவிட்டார் வைகோ.

அதனால்தான் எந்த கருணாநிதியை எதிர்த்தாரோ அந்த கருணாநிதியிடமே சரணாகதி அடைந்தார்.. எந்த சுப்பிரமணியன் சுவாமியை பார்த்து நாடாளுமன்ற வளாகத்தில், வி வில் கில் யூ என்று அவரை குலைநடுங்க வைத்து ஓடவிட்டாரோ அதே சு.சுவாமி கட்சியுடன் கூட்டணி சேர்ந்தார்.. எந்த வாஜ்பாய், அத்வானியை பார்த்து, "அடல் பிஹாரி வாஜ்பாய்களைக் கேட்கிறேன்.. லால் கிஷன் அத்வானிகளைக் கேட்கிறேன்.. யூ கேம் த்ரூ வித் கைபர் போலன் பாஸ்" என்று கர்ஜித்தாரே, அதே வாஜ்பாய், அத்வானிகளின் செல்லப்பிள்ளையாகவே மாறிப் போனார்.. அவ்வளவு ஏன்?

எந்த மு.க.ஸ்டாலினுக்கு பட்டாபிஷேகம் சூட்டுவதற்காக தன்னை தூக்கி எறிந்தார் கருணாநிதி என வீதி வீதியாக பேசினாரோ அதே மு.க.ஸ்டாலினை ஆருயிர்ச் சகோதரர், திராவிடத்தின் எதிர்காலம், தமிழகத்தின் முதல்வராக்காமல் ஓயமாட்டேன் என்று புகழ்ந்ததுடன் மட்டுமல்ல.. அதே மு.க.ஸ்டாலினின் தயவால் மீண்டும் ராஜ்யசபா எம்.பி. பதவியையும் பெற்றுக் கொண்ட வரலாற்றுக்கு சொந்தக்காரர் வைகோ. இன்று முதல்வராகிவிட்ட அதே ஸ்டாலினிடம் என் மகனை பார்த்து கொள்ளுங்கள் என ஒப்படைக்கிறார் வைகோ. தமது கட்சி வேட்பாளர்களையே திமுகவுக்கு தாரைவார்த்துக் கொண்டு எந்த உதயசூரியனை முடக்க துடித்தாரோ அதே உதயசூரியன் சின்னத்தில் நிற்க வைத்து சட்டசபைக்கு அனுப்பி வைத்திருக்கிறார். எந்த ஜெயலலிதாவை சர்வாதிகாரி ஹிட்லர் இடிஅமீன் என வசைபாடினாரோ அந்த ஜெயலலிதாவை வாஞ்சையோடு அன்பு சகோதரி என அழைத்தவர் வைகோ.

காலம் வைகோவை எங்கே கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது எனில் மகனுக்கு பட்டாபிஷேகம் நடத்தப் போகிறார்... ஆம் மகனுக்கு மதிமுகவின் அடுத்த இளவரசாக மகுடம் சூட்டப் போகிறார்... என் குடும்பத்தினர் அரசியலுக்கே வரமாட்டார்கள்; மதிமுகவின் தலைமையகமான தாயகத்தின் பக்கம் கூட வரமாட்டார்கள் என சண்டமாருதமாய் சிலிர்த்த வைகோ, இன்று அதே தாயகத்தில்தான் தன் மகனுக்கான பட்டாபிஷேகத்து பஜனைக்கான ஏற்பாடுகளை கனகச்சிதமாக செய்து கொண்டிருக்கிறார்..

Durai Vaiko to be appoint as MDMK Deputy General Secretary?

இது வரலாற்று விசித்திரம்தானே...

திமுகவை விட்டு வெளியேறுவதற்கு முன்னதாக கோவை மாநாட்டில் பேசிய போது வைகோ சொன்னார்.. பந்தலுக்கு தீ வைக்கிற தருக்கர்களே! இது மேனிக்கு தீ வைக்கிற கூட்டமடா! என்று... வைகோவின் வாரிசு அரசியலுக்கு எதிரான யுத்தத்தின் போது இடிமழை உதயன், நொச்சிபட்டி தண்டபாணி என எண்ணற்ற தொண்டர்கள் உண்மையிலேயே தங்களது மேனிக்கு தீ வைத்து சாம்பலாகிப் போனதும் வரலாறுதான் என்பதை வைகோ மறக்கக் கூடியவர் அல்ல.. எந்த வாரிசு அரசியலுக்கு எதிராக அத்தனை பேரும் தங்களது தேக்குமர தேகங்களை தீநாக்குகள் தின்ன தாரைவார்த்து கொடுத்தார்களோ அதே வாரிசு அரசியலை இன்று அதே மதிமுகவில் அரங்கேற்றுகிறார் அரசியலில் நேர்மை; பொதுவாழ்வில் தூய்மை எனும் போற்றுதலுக்குரிய கொள்கையை முழக்கமிடும் வைகோ..

அவரது வரிகளில் சொல்வதானால்

"தன் மகனுக்கு பட்டாபிஷேகம்"!

மகா மகா ஏற்பாடுகள் அமர்க்களம்!

English summary
MDMK General Secretary Vaiko's Son Durai Vaiko will be appoint as MDMK Deputy General Secretary Post.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X