ஜன.31 வரை தான் அவகாசம்! வேட்பாளர்கள் பட்டியல் வந்தாக வேண்டும்! திமுக மா.செ.க்களுக்கு தலைமை கெடு!
சென்னை: ஜனவரி 31-ம் தேதிக்குள் திமுக வேட்பாளர்கள் பட்டியலை தலைமைக் கழகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என மாவட்டச் செயலாளர்களுக்கு துரைமுருகன் கால அவகாசம் நிர்ணயித்துள்ளார்.
தோழமைக் கட்சிகள் போட்டியிடக் கூடிய இடங்கள் நீங்கலாக மற்ற இடங்களில் திமுக சார்பில் போட்டியிடக் கூடியவர்களின் பட்டியலை அவர் கேட்டிருக்கிறார்.
இன்னும் இரண்டு நாட்கள் கூட முழுமையாக இல்லாததால் வேட்பாளர்களை இறுதி செய்யும் பணிகளில் திமுக மாவட்டச் செயலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வார்டுகள் தான் வேண்டும்! காங்கிரஸ் பிடிவாதம்! விட்டுத் தராத திமுக! சிவகங்கை கூட்டணி கலாட்டா!

நகர்ப்புற உள்ளாட்சி
தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கி 2 நாட்கள் நிறைவடைந்துவிட்டது. திமுக, அதிமுக, உள்ளிட்ட பிரதான கட்சிகளில் இருந்து இதுவரை யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை. இன்னும் வேட்பாளர்கள் பட்டியலே இறுதி செய்யப்படாதது தான் இதற்கு காரணம். இந்நிலையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனிடம் இருந்து வெளியாகியுள்ள ஒரு அறிவிப்பு அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்களுக்கு கெடு விதிக்கும் வகையில் இருக்கிறது.

ஜனவரி 31-க்குள்
அதாவது காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, விசிக, மமக, முஸ்லீம் லீக் போன்ற தோழமைக் கட்சிகளுக்கு மாவட்ட வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்கள் போக, திமுக போட்டியிடும் இடங்களை மாவட்ட வாரியாக முறைப்படுத்தி வேட்பாளர் பெயர் பட்டியலுடன் தலைமைக் கழக அலுவலகமான அண்ணா அறிவாலயத்துக்கு ஜனவரி 31-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

நேர்காணல் தாமதம்
நெல்லை உள்ளிட்ட இன்னும் பல மாவட்டங்களில் வேட்பாளர்கள் நேர்காணலே நடைபெறாதது குறிப்பிடத்தக்கது. கூட்டணிக் கட்சி நிர்வாகிகளிடம் இடப்பங்கீடு தொடர்பாக பேசுவதற்கே திமுக மாவட்டச் செயலாளர்களுக்கும், அமைச்சர்களுக்கும் நேரம் போதவில்லை எனக் கூறப்படுகிறது. இதனிடையே பிப்ரவரி 1-ம் தேதி மாலை திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய பாணி
உள்ளாட்சி அமைப்பு பதவியிடங்களுக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியலை அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் தான் வெளியிட்டு வந்தனர். இதனிடையே இம்முறை மொத்தமாக திமுக தலைமை வெளியிடும் என்றும் வேட்பாளர் தேர்வு தொடர்பாக கிராஸ் செக் செய்யும் பணிகளும் இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.