ஒரே போடு போட்ட ஓபிஎஸ்.. மீண்டும் மீண்டும் சசிகலா.. எடப்பாடியை நெளிய வைத்த தருணங்கள்!
சென்னை: சசிகலாவை கட்சிக்குள் சேர்க்கும் விதமாக, இன்றைய தினம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் பேசிய பேச்சு தமிழக அரசியல் களத்தில் சலசலப்பையும், பரபரப்பையும் கிளப்பி விட்டு வருகிறது.. அதேசமயம் சசிகலாவை எதிர்ப்பதும், பிறகு மறைமுகமாக வரவேற்பதுமாக ஓபிஎஸ்ஸின் பேச்சு அமைந்து வருகிறது.
கடந்த 2017, பிப்ரவரி 7-ம் தேதி, இந்த நாள்தான் ஓ.பன்னீர் செல்வம் தன்னுடைய இன்னொரு பரிமாணத்தை, தமிழக மக்களுக்கு வெளிப்படுத்திய நாள்..
மெரீனா பீச்சில் உட்கார்ந்து தர்மயுத்தம் நடத்தினார்.. பிறகு செய்தியாளர்களிடம் சசிகலாவின் நிர்ப்பந்தத்தால்தான் ராஜினாமா செய்தேன், சசிகலாவை பற்றி 10 சதவிகிதம்தான் சொல்லி இருக்கிறேன்.. தேவைப்படும்போது மீதமுள்ள 90 சதவிகிதத்தை சொல்வேன் என்று அதிரடியாக பேட்டி தந்தார்..
சசிகலாவுக்கு மன்னிப்பே கிடையாது.. ஓபிஎஸ் கருத்துக்கு மாஜி அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி

ஆதங்கம்
சசிகலாவை எதிர்த்து கொண்டு, அவர் மீதான ஆதங்கத்தை அன்றைய தினம் கட்சியில் வெளிப்படுத்திய முதல் தலைவர் ஓபிஎஸ்தான்.. ஆனால் அதற்கு பிறகு தன்னுடைய நிலைப்பாட்டை அடிக்கடி மாற்றி கொண்டே வந்துள்ளார்.. இந்த 5 வருட காலத்தை எடுத்து கொண்டால், சசிகலா சிறையில் இருந்தவரை அவரை பற்றின பேச்சையே எந்த அதிமுக தலைவர்களும் எடுக்கவில்லை.

ஓபிஎஸ்
எப்போதாவது செல்லூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி போன்றோர்தான் சின்னம்மா என்று பகிரங்கமாகவே சொல்லி சசிகலா விடுதலை பற்றி பேசினார்களே தவிர வேறு தலைவர்கள் யாருமே வாய் திறக்கவில்லை.. குறிப்பாக ஓபிஎஸ் சைலண்டு மோடுக்கு போய்விட்டார்.. அந்த சமயத்தில் சசிகலாவை விட இரட்டை தலைமை விவகாரம்தான் இவர்களுக்குள் பெரிய விவகாரமாக இருந்ததே தவிர சசிகலாவை பொருட்டாகவே நினைக்கவில்லை.

பதற்றம்
சசிகலாவின் விடுதலை தேதி அறிவிக்கும்போதுதான் அதிமுக கலங்க ஆரம்பித்தது.. பதற்றம் தொற்றிக் கொண்டது.. இந்த சமயத்தில் எடப்பாடிக்கும் ஓபிஎஸ்ஸுக்கும்கூட அளவுக்கு அதிகமான அதிருப்தி வெளிப்பட்டது.. இதை சந்தர்ப்பமாக பயன்படுத்தி கொண்டு ஓபிஎஸ் சசிகலா பக்கம் சாய்ந்துவிடுவாரோ என்ற சந்தேகம் அப்போதே எழவும் ஆரம்பித்தது.

சசிகலா
இந்த சூழலில்தான், கடந்த மார்ச் 23-ம்தேதி ஒரு தனியார் டிவிக்கு ஓபிஎஸ் பேட்டி தந்தார்.. அதில், சசிகலாவை கட்சிக்குள் சேர்த்து கொள்வீர்களா என்று கேட்கப்பட்டது.. அதற்கு ஓபிஎஸ், "அம்மாவுக்கு அவர் உதவிகளை செய்தவர்.. அந்த வகையில் அவர் மீது நன்மதிப்பு உள்ளது.. அவரை கட்சியில் சேர்க்க முதலமைச்சர் வாய்ப்பே இல்லைன்னு சொல்லி இருக்கிறார்.. என்னை பொறுத்தவரையில், மனிதாபிமான அடிப்படையில் பார்க்கும்போது, அம்மாவுடன் பயணித்தவர் என்ற முறையில், ஜனநாயக முறைப்படி இயங்கும் இந்த ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் என்ற செட்டப்பை அவர் ஏற்று கொண்டால், அவரை கட்சியில் சேர்ப்பது குறித்து பரிசீலனை செய்யப்படும்" என்று சொல்லி அதிமுகவில் புயலை கிளப்பினார்.

பிரதமர் மோடி
இதையடுத்துதான், அதாவது கடந்த ஜூலை 25ம் தேதி, பிரதமர் மோடியை சந்திக்க ஓபிஎஸ் டெல்லி சென்றார்.. உடனே பின்னாடியே எடப்பாடி பழனிசாமியும் டெல்லி சென்றார்.. ஒருவேளை சசிகலா பற்றி பேசுவதற்காக ஓபிஎஸ் சென்றிருக்கலாம் என்று நினைத்து, எடப்பாடியும் சென்றதாக செய்திகள் வந்தன.. சுமார் 40 நிமிடங்கள் பிரதமருடன் நடந்த அந்த சந்திப்பில் சசிகலா விவகாரமும் பேசப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.. அப்போது பேட்டி தந்த ஓபிஎஸ், சசிகலாவை கட்சிக்குள் சேர்க்க வாய்ப்பே இல்லை என்று திட்டவட்டமாக கூறினார். பிறகு ஜூலை 29-ம்தேதியும் ஓபிஎஸ் பேட்டி தரும்போது, அதிமுகவில் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம்... சசிகலாவால் இந்த கட்சியை ஒருபோதும் கைப்பற்ற முடியாது என்று திடமாக சொன்னார்..

பொதுச்செயலாளர்
இந்த சூழலில் கடந்த செப்டம்பர் 1-ம்தேதி ஓபிஎஸ் மனைவி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க, அதிமுக கொடி கட்டிய காரில் வருகை தந்தார் சசிகலா.. ஓபிஎஸ் கையை பிடித்து ஆறுதல் சொன்னார்.. ஆனால் இதை பற்றி ஓபிஎஸ் எந்தவித கருத்தையும் சொல்லவில்லை.. அக்டோபர் 25-ம்தேதி மீண்டும் சசிகலா பேச்சை ஓபிஎஸ் எடுத்தார்.. "சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள்" என்றார்.. சசிகலாவை ஏற்க மாட்டோம் என்று இபிஎஸ் மற்றும் அவரது ஆதர்வாளர்கள் பேசிவரும் நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த கருத்து முக்கியமானதாக பார்க்கப்பட்டது.

காட்டம்
சசிகலாவை காட்டமாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்ததாலேயே, முக்குலத்தோர் சமூகத்தினரைச் சமாதானப்படுத்துவதற்காக பன்னீர் இப்படிப் பேசியதாக சொல்லப்பட்டது.. எடப்பாடி தரப்புக்கும் ஓபிஎஸ் பேசியது அதிர்ச்சியை தந்ததாகவும், "என்ன இருந்தாலும் ஓபிஎஸ் இப்படி பேசியிருக்க கூடாது" என்று எடப்பாடி தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லி வருத்தப்பட்டதாகவும் செய்திகள் கசிந்தன. ஆனால், இருவரும் மறுபடியும் சமாதானமாகி விட்டதாக சொல்லப்பட்ட நிலையில், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தையும் நடத்தி முடித்து, ஒருங்கிணைப்பாளர் தேர்தலையும் சந்தித்தனர்.

எடப்பாடி பழனிசாமி
இன்றைய தினம் மீண்டும் சசிகலா பற்றின பேச்சை மறைமுகமாக எடுத்துள்ளார் ஓபிஎஸ்.. "தவறு செய்தவர்கள் மனம் திரும்பி வந்தால், அவர்களை ஏற்பதுதான் தலைமைக்கு அழகு என்று எடப்பாடி பழனிசாமியை பக்கத்தில் வைத்து கொண்டே பேசியுள்ளார்.. இதற்கு முதல் நபராக வழக்கம்போல் மாஜி அமைச்சர் ஜெயக்குமார் எதிர்ப்பு தெரிவித்தாலும், எடப்பாடி சைலண்ட்டாகவே இருக்கிறார்.. இந்த அமைதிக்கு பின்னாடி என்ன புயல் வீச போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..!