கையெழுத்து போட நான் ரெடி.. கடிதம் எழுதிய ஓ.பன்னீர் செல்வம்..நிராகரித்த எடப்பாடி பழனிச்சாமி
சென்னை: உள்ளாட்சி தேர்தல் படிவத்தில் கையெழுத்திட ஓ.பன்னீர்செல்வம் தயாராக இருப்பதாக கடிதத்தில் தெரிவித்துள்ளார். இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி கையெழுத்திட தயாரா என கடிதத்தில் கேட்டுள்ளார். அந்த கடிதத்தை எடப்பாடி பழனிச்சாமி நிராகரித்து விட்டார்.
அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் பூதாகரமாகியுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி பக்கம் நிர்வாகிகள் நிற்கின்றனர். ஓ.பன்னீர் செல்வத்திற்கு எதிர்ப்பு பலமாக உள்ளது. தொண்டர்கள் தன்பக்கம் உள்ளதாக கூறி வருகிறார் ஓ.பன்னீர் செல்வம். தலைமைப்பதவிக்கு ஓ.பன்னீர் செல்வமும் எடப்பாடி பழனிச்சாமியும் போடும் சண்டையால் கட்சி பிளவு படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
தலைமைப்பதவிக்காக இருவரும் போடும் சண்டையால் கட்சியின் சின்னமும், கொடியும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஜூலை 9ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர் செல்வத்தை எளிதில் நீக்க முடியுமா?. எம்ஜிஆர் வகுத்த விதி சொல்வதென்ன?

ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல்
ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 2 மாவட்ட கவுன்சிவர், 20 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், 40 ஊராட்சி தலைவர்கள், 436 கிராம ஊராட்சி உறுப்பினர், நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 2 மாநகராட்சி கவுன்சிலர், 2 நகராட்சி கவுன்சிலர், 8 பேரூராட்சி கவுன்சிலர் உள்ளிட்ட 510 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.

வேட்புமனு தாக்கல்
இந்தப் பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய 27ஆம் தேதி கடைசிநாள் ஆகும். இதன்படி இன்று மாலை 5 மணிக்குள் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய வேண்டும். மொத்தம் தேர்தல் நடைபெற உள்ள 510 பதவிகளில் 34 பதவிகளுக்கு கட்சி அடிப்படையில் தேர்தல் நடைபெறவுள்ளதால், வேட்பாளர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் கட்சிகளின் சின்னத்தை ஒதுக்க உள்ளது.

படிவத்தில் கையெழுத்து
மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், நகராட்சி மற்றும் மாநகராட்சி கவுன்சிலர் உள்ளிட்ட 34 பதவியிடங்ளுக்கு கட்சி அடிப்படையில் தேர்தல் நடைபெறுகிறது.இந்த பதவிகளுக்கு கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அந்த கட்சிகளின் சின்னங்களை ஒதுக்கீடு செய்ய ஏ மற்றும் பி என்ற இரண்டு படிவங்களை சமர்பிக்க வேண்டும்.
இந்த படிவங்களில் சம்பந்தபட்ட கட்சியின் சார்ந்தவர்களின் தலைவர்கள் கையெழுத்து போட வேண்டும். அதிமுகவில் பொதுச் செயலாளர் பதவி நீக்கப்பட்ட பின்னர் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தான் இந்த படிவங்களில் கையெழுத்து போட்டு வந்தனர்.

ஜூன் 30க்குள் கையெழுத்து
தற்போது அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சி சர்ச்சையினால், ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளே செல்லாது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்த நிலையில் இந்த படிவங்களில் யார் கையெழுத்து இடுவார்கள் என்ற புதிய சர்ச்சை எழுந்துள்ளது. இந்த ஏ மற்றும் பி படிங்களை வேட்புமனுக்கள் திரும்ப பெறுவதற்கான கடைசி நாளான ஜூன் 30ஆம் தேதி மாலை 3 மணிக்குள் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் சமர்பிக்க வேண்டும். இதன்படி அதிமுக வேட்பாளர்கள் அனைவரும் வரும் 30ஆம் தேதிக்குள் ஒருங்கிணைப்பாளர்கள் கையெழுத்தைப் பெற்று வேட்புமனுக்களை சமர்பிப்பார்களா அல்லது மாட்டார்களா? அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்குமா? என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

ஓபிஎஸ் எழுதிய கடிதம்
கட்சியினுடைய இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். உள்ளாட்சி தேர்தல் படிவத்தில் கையெழுத்திட ஓ.பன்னீர்செல்வம் தயாராக இருப்பதாக கடிதத்தில் தெரிவித்துள்ளார். இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி கையெழுத்திட தயாரா என கடிதத்தில் கேட்டுள்ளார்.

தொண்டர்கள் மீது அக்கறை
ஏ மற்றும் பி பார்ம் இரண்டிலும் ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கையெழுத்திட்டால் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும். போட்டியிடக்கூடிய வேட்பாளர்கள் நாளை பிற்பகல் 3 மணிக்குள் படிவங்களை சமர்ப்பிக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட தவறினால் தொண்டர்கள் மீது அக்கறை கொண்ட தலைவர் யார் என்பதை அதிமுக தொண்டர்கள் புரிந்து கொள்வார்கள் என்றும் அந்த கடிதத்தில் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

இபிஎஸ் நிராகரிப்பு
ஓ.பன்னீர் செல்வம் அனுப்பிய கடிதத்தை அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள மகாலிங்கம் மூலம் எடப்பாடி பழனிச்சாமி வீட்டிற்கு கொடுத்தனுப்பினர். ஆனால் ஓ.பன்னீர் செல்வம் அனுப்பிய கடிதத்தை இபிஎஸ் வாங்க மறுத்துவிட்டார். இதனையடுத்து அந்த கடிதம் மீண்டும் ஓபிஎஸ் இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டது. இணை ஒருங்கிணைப்பாளர் கை எழுத்து போடுவார் என நம்பியிருந்த நிலையில் திருப்பி அனுப்பிவிட்டார் என மனோஜ் பாண்டியன் தெரிவித்துள்ளார்.