மதுசூதனனுடன் எடப்பாடி பழனிசாமி திடீர் சந்திப்பு: அதிமுக அவைத்தலைவராவது தம்பிதுரையா? அன்வர் ராஜா?
சென்னை: அதிமுகவின் அவைத்தலைவரான மதுசூதனை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அவரது வீட்டில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதிமுகவுக்கு புதிய அவைத் தலைவரை நியமிப்பது தொடர்பாக மதுசூதனனுடன் எடப்பாடி பழனிசா ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
சென்னையில் அதிமுகவின் நீண்டகால முகங்களில் ஒருவர் மதுசூதனன். ஜெயலலிதா காலத்தில் அதிமுக அவைத்தலைவராக நியமிக்கப்பட்டார். அதிமுகவில் பிளவு உருவான போது ஓபிஎஸ் அணியில் இருந்தார் மதுசூதனன்.
2021-ல் அதிமுக ஹாட்ரிக் வெற்றி பெற வியூகங்கள் வகுத்துவிட்டோம் -அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

ஆர்.கே. தேர்தலில் போட்டி
இரு அணிகளும் இணைந்த போது அதிமுகவின் அவைத்தலைவராக மீண்டும் பதவியில் தொடர்ந்தார் மதுசூதனன். ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக மதுசூதனன் போட்டியிட்டு 2-வது இடத்தைப் பெற்றார். அப்போது அதிமுகவினரே தமக்கு எதிராக வேலை செய்தது பற்றி குமுறலை கொட்டி இருந்தார்.

அதிமுகவில் அதிரடி மாற்றங்கள்
பின்னர் வயது, உடல்நிலை ஆகியவற்றால் தீவிர அரசியலில் இருந்து நீண்டகாலமாக ஒதுங்கி இருக்கிறார் மதுசூதனன். இந்த நிலையில் அதிமுகவில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிய ஒன்றியங்கள் உருவாக்கப்பட்டு மாநில அமைப்புகளுக்கு புதிய செயலாளர்களும் நியமிக்கப்பட்டு வருகின்றனர். முதல்வர் வேட்பாளர் யார் என்கிற அதிரிபுதிரி விவாதங்களும் அதகளமாக அரங்கேறி ஓய்ந்திருக்கிறது.

முதல்வர் திடீர் சந்திப்பு
இந்நிலையில் இன்று திடீரென பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள மதுசூதனன் வீட்டுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்றார். அங்கு மதுசூதனனிடம் நலம் விசாரித்து கட்சி நிலவரம் குறித்து ஆலோசித்தார். இந்த சந்திப்பு சுமார் 20 நிமிடங்கள் நீடித்தது. கை எலும்பு முறிவு அடைந்ததால் சிகிச்சை பெற்று வந்ததால் மதுசூதனனை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்தார் என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.

அதிமுகவின் புதிய அவைத் தலைவர்
அதேநேரத்தில் அதிமுகவின் புதிய அவைத்தலைவர் குறித்தும் மதுசூதனனுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசித்ததாகவும் கூறப்படுகிறது. மதுசூதனனுக்கு வயதாகிவிட்டால் ஓய்வு தேவை என்கிற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் புதிய அவைத்தலைவராக கட்சியின் சீனியர்களில் ஒருவரை நியமிக்கலாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளதாம். இதில் தம்பிதுரை மற்றும் அன்வர்ராஜா ஆகியோரது பெயர்கள் அடிபடுகின்றனவாம்.